கட்டுரைகள்

நூறு நாள் வேலைத்திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுவிட்டதா?

சு.மோகன்குமார்

நூறு நாள் வேலைத் திட்டம் என்று அறியப்படும், முன்னோடித் திட்டமான ‘மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் -2005’, சட்ட முறைகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக் கடந்த பத்தாண்டுகளாகக் கண்காணித்து வரும் அமைப்பு ‘லிப் டெக் இந்தியா (LIBTECH INDIA) என்னும் அரசு சாரா நிறுவனமாகும்.

இந்த அமைப்பு, இந்த நிதியாண்டின் (2024-25) முதல் ஆறுமாதக் காலத்தில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் இத்திட்டத்தின் அமலாக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் தகவலைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது;
ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில்,

1. இந்தியாவிலேயே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மிகக் குறைந்த அளவு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ஆறுமாதக் காலத்தைக் காட்டிலும், இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதக் காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 59.1% வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. 2023-24ன் முதல் ஆறு மாதக் காலத்தில் 59 நாட்கள் வேலையைப் பெற்ற ஒரு குடும்பம், இந்த நிதியாண்டில் 24 நாள் வேலை மட்டுமே பெற்றுள்ளது.

2. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு தொழிலாளர்களின் 15, 94,670 (14.77%) வேலை பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

31.01.2024ல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி இயக்குனர், 19.01.2024 ம் நாளைய ஒன்றிய
பஞ்சாயத் ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளரின் கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு உத்தரவை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த உத்தரவில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை, தமிழ்நாடு 2022-23 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2023-24 ல் 48% அதிக மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளதாகவும், ஆகவே குறிப்பிட்ட பணிகளில் வேலையளிப்பதை நிறுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த உத்திரவு ம.கா.தே.ஊ.வே.உ சட்டத்திற்கு முரணானதாகும். இந்தத் திட்டமே ‘தேவைக்கேற்ற அளவு வேலை’யை உருவாக்கும் திட்டம்தான். தமிழ்நாடும் அந்த அடிப்படையிலேயே வேலைவாய்ப்பை அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்தச் சட்ட விரோத உத்தரவை அப்படியே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பின்பற்றி, தமிழ்நாட்டுக் கிராமப்புறப் பாட்டளிகளின் வேலை செய்யும் உரிமையைப் பறித்துள்ளது;

தமிழ்நாட்டு ஊரக வளர்ச்சித்துறை, ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டு அரசுக்கு நற்சான்று பெற்றுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா? என்ற அய்யம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் பல லட்சம் மக்களின் பட்டினியைப் போக்கும் இத்திட்டம் முடக்கப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித்துறையின் அறிக்கை ஏதும் இதுவரை இல்லை. இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.

இந்த ஆண்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முதல் நாள் ஒன்றிய நிதி அமைச்சர் முன்வைத்த பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு முக்கியமான புள்ளி விவரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் முறையே 1% மற்றும் 0.1% தான் மிக வறிய நிலை ஏழைகள் உள்ளனர்.ஆனால், இந்த இரு மாநிலங்களும் வேலை உறுதியளிப்புச் சட்டத்தை 19% பயன்படுத்தியுள்ளன. 51 கோடி மனித வேலை நாட்களை உருவாக்கியுள்ளன.
பீகாரில் 20%மும், உத்திரப்பிரதேசத்தில் 25% மும் வறியநிலை ஏழைகள் உள்ளனர். ஆனால், இந்த இரு மாநிலங்களும் 17% நிதியைத்தான் பயன்படுத்தியுள்ளன. 53 கோடி மனித வேலை நாட்களைத்தான் உருவாக்கியுள்ளன என்று ஒன்றிய நிதியமைச்சரின் பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

திட்ட நிதியை அதிக அளவு பயன்படுத்தி, அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதன் மூலம் கிராமப்புற வறுமை குறைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘வீட்டு உபயோகச் செலவின் கணக்கெடுப்பு’ தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் மூன்று வேளை உணவு உண்ணும் அடித்தட்டு மக்கள் முறையே 97%, 98% என்றும் உத்திரப்பிரதேசத்தில் 41%, மத்திய பிரதேசத்தில் 39%, மகாராஷ்டிராவில் 34%, ராஜஸ்தானில் 34%, குஜராத்தில் 33% என்று குறிப்பிடுகிறது.

இந்த மாநிலங்களெல்லாம் ம.கா.தே.ஊ.வே.உ திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தாத மாநிலங்களே..!

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் ம.கா.தே.ஊ.வே திட்டம் கிராமப்புற ஏழ்மையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது என்பதனையே சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு..

  • ஒன்றிய அரசின் சட்டத்திற்குப் புறம்பான வேலைக்குறைப்பு சுற்றிக்கையை நிராகரித்து, அதிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பணிகளைத் தேர்வு செய்து வேலை வழங்க வேண்டும்.
  • பணிகளைத் தேர்வு செய்யும் போது திறன் சாராத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையிலான பணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதிகம் பொருட்செலவாகின்ற- குறைந்த வேலை வாய்ப்பை அளிக்கின்ற கட்டுமானப் பணிகளைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்..
  • ஒவ்வொரு கிராம ஊராட்சியும் தனது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான ஊதியச் செலவு (LABOUR BUDGET) ஆகியவற்றை ஆண்டுதோறும் கிராமசபை மூலம் தீர்மானிக்க வேண்டும்; அதிகாரிகள் தீர்மானிக்கக் கூடாது. அதற்கான அறிவுறுத்தலை சிற்றூராட்சி மற்றும் வட்டார ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button