கட்டுரைகள்

பாஜகவின் தீம் பார்ட்னர் – ‘அனுமன்’ சீமானின் அவதூறுகள்

கட்டுரையாளர்: வை. மணிமாறன்

பெரியாரையும் திராவிட அரசியலையும் அவதூறுகளின் மூலமே எதிர்கொண்டு விடலாம் என சீமான் நினைக்கிறார். அதற்கான நடைமுறையிலும் இறங்கியுள்ளார். இதனால், மொழி, இனங்களை அழித்துவ், இந்துத்துவ தேசியத்தை கட்டமைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக, தங்களின் நோக்கம் நிறைவேறுவதாக நினைத்து மகிழ்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. பின்னர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சீமான் கேட்டார்.

அவருடைய இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. பெரியார் பேசியதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தின.

இதனை அடுத்து புதுச்சேரியில் பேசிய சீமானிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது, “எல்லா ஆதாரங்களையும் முடக்கி வைத்துக் கொண்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? எவ்வளவு பேர் எடுத்து காணொளிகளாகப் போடுகிறோம். பொய் என்றால் எப்படி? பெரியாரின் நூல்களை அரசுடமையாக்கிவிட்டு சான்று கேளுங்கள், தருகிறேன். வெளியிட்ட புத்தகங்களை எல்லாம் முடக்கிவைத்து விட்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி?” என்று சீமான் அங்கலாய்த்தார்.

 

புதுவையிலும் சீமானின் பேச்சு சர்ச்சையையும் எதிர்ப்புகளையும் மேலும் வலுப்படுத்தின.
சீமானின் அவதூறுப் பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், “பெரியார் குறித்த சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீதான புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து ஜனவரி 20-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

பெரியார் பேசியது உண்மையா?

சீமான் கூறியது போல், பெரியார் பேசியதாகக் கூறப்படுவது இது முதல் முறையல்ல. சனாதனிகளும் சங்கிகளும் நீண்ட காலமாகப் பரப்பி வரும் அவதூறுகளில் ஒன்றாகும். பெரியார் சிலையை அவமதிப்பது, சேதப்படுத்துவது என்பதுடன் அவதூறுகளையும் சங்கிகள் பரப்பி வந்தனர்.

இந்த அவதூறை 2017ல் சங்கிகள் சிலர் தங்களின் முகநூலில் (ஃபேஸ்புக்) பகிர்ந்தனர். அதில், திராவிடர் கழகம் நடத்தி வரும் ‘விடுதலை’ பத்திரிகையில் 1953-ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அதனை வாட்ஸ்அப் போன்றவற்றிலும் பரப்பி வருகின்றனர்.

உண்மையில் அப்படியொரு செய்தி 11.05.1953 அன்று வெளியான ‘விடுதலை’யில் இடம்பெறவில்லை. அப்படி பெரியார் பேசவும் இல்லை. அன்றைய விடுதலையின் நான்கு பக்கங்களையும் வெளியிட்டு, திராவிடர் கழகத்தினரும் பெரியார் அன்பர்களும் அம்பலப்படுத்தினர். அதன் பிறகும் அவதூறு பரப்பிய பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர், 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

ஆனால், சங்கிகள் அந்த அவதூறை மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப்பில் சுற்றுக்கு விடுகின்றனர். அந்தப் பொய்யை படித்துத்தான் திருவாளர் சீமானும் வாந்தி எடுத்திருக்கிறார்.
செய்திகளின் துல்லியம், உண்மைத் தன்மை குறித்த கவலையின்றி, அவதூறுகளை அடுத்தடுத்து பரப்பிக் கொண்டே இருப்பதற்கான பல்கலைக்கழகம் தான் வாட்ஸ்அப். இந்த வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தால் வளர்க்கப்பட்டவர்கள், பட்டம் பெற்றவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். அவர்களில் ஒருவர் தான் சீமான்.

இதனால் தான் “பெரியார் வெளியிட்ட புத்தகங்களை எல்லாம் முடக்கிவைத்து விட்டு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி? அவருடைய நூல்களை அரசுடமையாக்கிவிட்டு சான்று கேளுங்கள், தருகிறேன்” என்கிறார் சீமான். அப்படியானால் ஆதாரமே இல்லாமல் விமர்சித்தது சரியா? இதற்குப் பெயர் தானே அவதூறு, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு.
சீமான் அவர்களே! உங்களின் விளக்கம் சட்டப் படியோ அறத்தின் படியோ செல்லத்தக்கதா? அவதூறுகளால் தமிழ் தேசியத்தை உருவாக்க முடியுமா?

ஒன்றிய பாஜக அரசு, அதிகாரங்கள் அனைத்தையும் மத்தியில் குவித்துக் கொண்டிருக்கிறது. மொழி வாரி மாநிலங்களை ஏற்காததுடன், அவற்றின் பெயரளவிலான அதிகாரங்களையும் பறித்து வருகிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை முதல், ஒரே நாடு ஒரே தேர்தல் வரை மோடி அரசு செயல்படுத்திய, செயல்படுத்தத் துடிக்கும் திட்டங்கள் அனைத்தும் மாநில அரசுகளை மாநகராட்சிக்கும் கீழான அதிகாரம் கொண்டதாக மாற்றக்கூடியது.

ஒரே நாடு ஒற்றை அதிகாரம் என்பதை செயல்படுத்தி வரும் இந்த ஆர்எஸ்எஸ், பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றாமல், தமிழ் தேசியமோ கூட்டாட்சியோ அல்ல, மாநில சுயாட்சியைக்கூட பெற முடியாது.

இந்த ஒற்றை அதிகாரத்திற்கு எதிராக துரும்பைக்கூட அசைக்காத சீமான், “பெரியாரே எனக்கு வேண்டாம். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பதுதான் எனது கொள்கை” என்று முழங்குகிறார்.

சீமானின் இந்தப் பேச்சுகளால் ஆர்.எஸ்.எஸ், பாஜக மனம் குளிர்ந்து மகிழ்ந்திருக்கிறது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களின் கருத்துக்களே எடுத்துக்காட்டாகும்.

“நாங்கள் இத்தனை காலமாக எந்தக் கருத்தியலை சொல்லிக் கொண்டிருந்தோமோ அதனையே சீமான் இன்று சொல்லத் தொடங்கி இருக்கிறார். எங்கள் கருத்தியலுக்கு சீமானின் பேச்சு பலம் தருகிறது. பாஜகவின் கருத்தியலுக்கு வெற்றி. சீமான் எங்களின் தீம் பார்ட்னர் (கருத்தியல் கூட்டாளி)” என்று தமிழிசை சவுந்தரராஜன் புளகாங்கிதத்துடன் கூறியிருக்கிறார். இதே போன்று எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்களும் பேசியிருக்கின்றனர்.

தமிழ் தேசியம் பேசுவார்
மாநில சுயாட்சி,
தன்னுரிமை,
சுயநிர்ணய உரிமை அடிப்படையில் கூட்டாட்சி,
தனிநாடு போன்ற பல்வேறு வழிமுறைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இவற்றில் எதைப் பற்றியும் பேசாத சீமான், முதலமைச்சர் கனவை வெளிப்படுத்தியும் விதைத்தும் வருகிறார். இதனை அடைவதற்கு பாஜகவின் பாராட்டுச் சான்றிதழே போதுமானது, பாஜகவிற்கு அனுமனாக இருப்பதே உதவும் என நினைத்து விட்டார் போலும். இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button