அறிக்கைகள்

சாதனை படைத்த மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

முற்றிலும் துண்டான கையை உடலோடு இணைத்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இரண்டு கைகளும் வெட்டப்பட்டு, துண்டாக்கப்பட்ட நிலையில் சென்னை நகரில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை அரசினர் ராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் கடந்த 21.12.2024 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, இவரது உடலில் இருந்து முற்றிலும் துண்டாக்கப்பட்டிருந்த இரண்டு கைகளையும், உடலோடு இணைத்து பழையபடி இயங்க வைக்கும் முயற்சியில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

கைகள் துண்டிக்கப்பட்ட பெண்ணுக்கு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில், ஒட்டுறுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சுகுமார் தலைமையில், 23 மருத்துவர்கள் கொண்ட குழு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது. 8 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் துண்டாக இருந்த இரண்டு கைகளும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. இது மருத்துவ வரலாற்றில் பெரும் சாதனையாகும்.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் முற்றிலும் இலவசமான மருத்துவ சேவையில் பெண் நோயாளி பயனடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீதும் நிலவி வரும் எதிர்மறை எண்ணங்களை தகர்த்து எறிந்து நம்பிக்கையூட்டும்  சாதனை படைக்க வழிகாட்டிய சென்னை ராஜீவ் காந்தி அரசினர்  பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் இ.தேரணிராஜன் மற்றும் அறுவைச் சிகிச்சை குழுவில் பங்கேற்றுப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு  கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button