இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு முடிவுகள்
2025 ஆகஸ்ட் மாதம், சேலம் மாநகரில் 26வது தமிழ்நாடு மாநில மாநாடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் நகரில் ரியாத் கிராண்ட் மகாலில் டிசம்பர் 10 ஆம் தேதி மு.ஆ.பாரதி தலைமையிலும் மாநிலக் குழுக் கூட்டம் டிசம்பர் 11, 12 தேதிகளில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ, மு.ஆ.பாரதி ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது.
மாநிலக்குழு அறிக்கை குறித்து மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விளக்கிப் பேசினார். தேசியக் குழு முடிவுகள் குறித்த அறிக்கையை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி விளக்கிப் பேசினார்.
2025 ஆகஸ்ட் மாதம் சேலத்தில் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு எழுச்சியுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சி, மருத்துவத்துறை தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக!
தமிழ்நாட்டில் 12,525 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 38 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர், பள்ளி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் என சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மாதம் ரூ.1000 முதல் 8000 வரை மட்டுமே பெற்று வருகின்றனர். இதேபோல அரசு மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் தூய்மைப்பணி மற்றும் பாதுகாவல் பணிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெளிமுகமை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய குறைந்த பட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அமுலாக்க அதிகாரிகள் சட்டப்படியான கடமையை செய்வதில்லை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர் உள்ளிட்ட தொழிலாளர்கள் நான்காவது ஊதியக்குழு அறிவிப்பு மூலம் அரசின் கடைநிலை ஊழியர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த உரிமை ஒரு தலைமுறை பணியாளர்களுக்கு கூட கிடைக்காமல் தடுக்கப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கும் செய்தியாகும். இந்நிலையில் தற்போது காண்ட்ராக்ட், தினக்கூலி, அவுட் சோர்ஸ்-, சுய உதவிக் குழு என வெவ்வேறு பெயர்களில் பணி அமர்த்தப்பட்டு கடுமையான பணிச் சூழலில், பாதுகாப்பற்ற பணி நிலையில் வைக்கப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிரானதாகும் .
கடந்த ஏழாண்டுகளாக குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படாத நிலையில், குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவான ஊதியம் வழங்குமாறு அரசு உத்தரவுகளை வழங்கும் அதிகார வர்க்கம், மக்களாட்சி முறையை சிறுமைப்படுத்தி வருகிறது.
கொரோனா காலத்தில் முன் களப்பணியில் சிறப்புடன் பணிபுரிந்து, பாராட்டுதல் பெற்றவர்கள், அதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பூதியம் கூட இது வரை வழங்கவில்லை என்பது ஏற்க தக்க செயலாகாது.
தூய்மைப் பணியும், சுகாதாரப் பாதுகாப்பும் சமூக நலனுக்கு இன்றியமையாத தேவையான நிரந்தரப்பணியாகும்.
நகர்புற, ஊரக உள்ளாட்சி அமைப்பிலும், மருத்துவத் துறையிலும் பாதுகாப்பற்ற பணி நிலையில் பணிபுரிந்து வருவோர் அனைவரும் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வந்துள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் இஎஸ்ஐ, பி.எப் போன்ற சட்டரீதியான பயன்களை உடனயாக வழங்குவதுடன் தற்போது பணியில் உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
நூறுநாள் வேலை உரிமை பறிப்பதை அனுமதிக்கக் கூடாது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு நூறுநாள் வேலை பெறுவதற்கு சட்டபூர்வ உரிமை அளித்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டாக நடைமுறையில் உள்ள இந்த முன்னோடி திட்டத்தால் புலம் பெயர்வு தடுக்கப்பட்டுள்ளது. வறுமை தனிந்துள்ளது. வேளாண் உற்பத்தியும், நிலத்தடி நீர் சேமிப்பும் அதிகரித்துள்ளது என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
கிராம ஊராட்சிகளுக்கும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதை அண்மையில் லிப்டெக் இந்தியா என்கிற அமைப்பு நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2024- &25) முதல் ஆறுமாத காலத்தில் தமிழ்நாட்டில் 59 சதவீத வேலை நாட்கள் குறைக்கப்பட்டிருப்பதும், கடந்த நிதியாண்டில் (2023&–24) முதல் ஆறு மாத காலத்தில் 59 நாட்கள் வேலை வாய்ப்பு பெற்ற குடும்பத்திற்கு நடப்பு நிதியாண்டில் 24 நாட்கள் மட்டுமே வேலை பெற்றுள்ளது. இத்துடன் வேலை அட்டை பெற்றிருந்த குடும்பங்களில் 15 லட்சத்து 94 ஆயிரத்து 670 குடும்பங்கள் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது போன்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஒன்றிய அரசின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தமிழ்நாடு அரசு கடந்த 2022-&23 ஆம் ஆண்டைவிட 2023- -& 2024 ஆம் ஆண்டில் 48 சதவீதம் அதிக மனித வேலை நாட்கள் உருவாக்கியிருக்கிறது. அதனால் சில குறிப்பிட்ட பிரிவு வேலைகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது வேலை உறுதியளிப்புச் சட்டத்திற்கு முரணான உத்தரவாகும் இது குறித்து தமிழ்நாடு அரசின் தரப்பில் அமைதி காத்து வருவது வியப்பளிக்கிறது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் வேலை மறுப்பு உத்தரவை நிராகரித்து, வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அட்டை பெற்றுள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் நூறுநாள் வேலை வழங்குவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
வேட்டை தடுப்புக் காவல் தனியாரிடம் வழங்கக் கூடாது
தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் ஆகிய பகுதிகளில் வேட்டைத் தடுப்புக் காவலில் இரண்டாயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இது தவிர வனத்துறை அலுவகங்களில் ஓட்டுநர்கள், கணினி இயக்குநர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்ற பணிகளிலும் நூற்றுக் கண்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த இவர்களில் பெரும்பான்மையோர் பட்டியல் பழங்குடியினர் மற்றவர்கள் பட்டியல் சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவைச் சேர்ந்த அடித்தட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில், மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உட்பட பத்தாண்டு காலம் பணித் தொடர்ச்சி உள்ளவர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்கி வருகிறது. இந்த கொள்கை முடிவுக்கு எதிராக தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர்களை “வெளி முகமை’’ (அவுட் சோர்சிங்) பணிக்கு மாற்றும் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறது.
வனத்தின் சூழலையும், தன்மையினையும் நன்கு அறிந்துள்ள, பயிற்சியும் திறனும் பெற்றுள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட பத்தாண்டு பணி முடித்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஆண்டுதோறும் வரி உயர்த்தும் நடவடிக்கையை கைவிடுக
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒன்றிய அரசு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயர்த்த வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் அதீதமான அளவில் வரிகளை உயர்த்தி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டில் சொத்துவரி சீராய்வு என்ற முறையில் அனைத்துக் கட்டிடங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது. மும்முனை மின் இணைப்பு பெற்றிருப்பதை அடிப்படையாகக் கொண்டு பல மடங்கு வரிகள் உயர்த்துப்பட்டுள்ளன. வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்களின் வாடகை தொகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி தவிர குப்பை வரி போன்ற புதிய இனங்களிலும் பலவகையான வரிகள் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகின்றன. அடுக்கடுக்கான தொடர், வரி உயர்வு நடவடிக்கைகள் மக்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி, அதிருப்தியை உருவாக்கி வருகிறது என்பதை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு தெரிவித்துக் கொள்வதுடன், ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்கு பணிந்து, ஆண்டுதோறும் வரி உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அண்மையில் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது.
தமிழகம் கோரும் பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும்
கால நிலை மாற்றங்களாலும், வெப்பநிலை அதிகரித்து வருவதாலும் தமிழ்நாடு ஆண்டுதோறும் இயற்கை பேரிடர்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் சென்னை பெருமாநகர், சுற்று வட்டார மாவட்டங்களும், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களும் மிக் ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க காரணமாக ரூ.37 ஆயிரத்து 907 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
அண்மையில் நவம்பர் 30 ஆம் தேதி தமிழகத்தில் கரை கடந்த பெஞ்சல் புயல் காரணமாக பெய்த பெருமழை, சூறாவளிக் காற்றால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்புகளை சீரமைக்க ரூ 6, 675 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இயற்கை பேரிடர் காலங்களில் ஒன்றிய அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழு வந்து கள ஆய்வு செய்வதும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நேரில் விசாரித்து அறிவதுமான சம்பிரதாய நடைமுறைகள் நடந்தேறி வருகின்றன. ஆனால், ஒரு முறை கூட, தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்பதே அனுபவமாகும். நிதிக் குழு பரிந்துரைக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வழங்குவது தவிர கூடுதல் நிதி ஏதும் வழங்கப்படாமல் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவது கூட்டாட்சி கோட்பாட்டுக்கு வலிமை சேர்க்காது என்பதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
நிவாரண நிதி உயர்த்தி வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் பெருமழை பேரிடர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.2000 நிவாரண நிதி வழங்குவது உட்பட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகுப்பு ஆறுதல் அளிக்கிறது. அதே சமயம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கும் நிவாரண நிதி ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். பயிர் சாகுபடி செய்திருந்த, வேளாண் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை மறுபரிசீலனை செய்து நெற்பயிர் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரமாக உயர்த்தியும் மற்ற பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியினையும், வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் இழப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியினையும் மறுபரிசீலனை செய்து உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. .
வனப்பகுதி விவசாயப் பயிர்கள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கி வழங்குக
வனப்பகுதிகளில் உள்ள யானைகள் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள், குடிநீர் மற்றும் தீவினப் பற்றாக்குறையால் வன எல்லைகளை தாண்டி வெளியேறி விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களை அழித்து வருகிறது. மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக காட்டுப் பன்றிகள் – மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயப்பட்டு ஊனமடைந்துள்ளனர். காட்டுப் பன்றிகள் வனவிலங்குகள் பட்டியலில் இருப்பதால் அதன் தாக்குதலை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்க வேண்டும் எனவும், மற்ற வனவிலங்குகளிடம் இருந்து மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், சாகுபடி செய்துள்ள பயிர்களை பாதுகாத்துக் கொள்ளவும் பொருத்தமான திட்டம் வகுத்து தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
அஞ்சல் பிரிப்பகங்களை மூடும் திட்டத்தைக் கைவிடுக
தமிழ்நாட்டில் கும்பகோணம், திருவாரூர், தருமபுரி உள்ளிட்ட 10 மையங்களில் செயல்பட்டு வரும் அஞ்சல் பிரிப்பகங்களை மூடிவிட்டு, அதன் பணிகளை அருகில் உள்ள அலுவலகங்களுடன் இணைப்பது என ஒன்றிய அரசின் அஞ்சல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் அஞ்சல் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். வணிகர்கள், மாணவர்கள், வேலை வாய்ப்பு தேடுவோர், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பிரிவினர் அஞ்சல் சேவைக்கு தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் கட்டணச் சுமை கூடுவதால், அது விலைவாசி நிலவரத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அஞ்சல் பிரிப்பகங்களை மூடும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது வசிப்பிடங்களை உறுதி செய்து தர வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் அரசின் ஆட்சேபகரமான இனங்களில் உள்ள நிலங்களில் வீடு கட்டி, நீண்ட பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் நகர் மயமாக்கல் காரணமாக நில மதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக ஆட்சேபகரமான நிலங்களில் உள்ள குடும்பங்களை ஆக்கிரமிப்புகளை வகைப்படுத்தி, அவைகளை வெளியேற்ற கோரும் உரிமை மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும் பாலும் நீர் வழிப்பாதை அல்ல நீர் தேக்க பகுதி என்ற காரணங்கள் காட்டப்படுகின்றன. நீதி மன்றங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட்டு வருகின்றன. மக்கள் குடியிருந்து வரும் நிலப்பகுதியில் பல பத்தாண்டுகள் வெள்ளம் காணாத தூர்ந்து போன நிலப் பகுதியாக மாறிவிட்டது என்பதை அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிலை நிறுத்துவதில் அரசு தரப்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை அரசு கவனத்துக்கு கொண்டு வருவதுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் அரசின் ஆட்சேபகரமான நிலப் பகுதிகளில் குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான வசிப்பிட உரிமையை பாதுகாக்கும் முறையில் மாற்று இடம் கண்டறிந்து, அரசு செலவில் வீடு கட்டிக் கொடுக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.