நரேந்திர மோடி 2012ல் குஜராத் முதலமைச்சராக இருந்த போது ஒரு மேடையில் “ரூபாயின் மதிப்பு பலவீனமடைவது சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் திறனை அபாயத்திற்கு உள்ளாக்கும். இப்போது மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் ரூபாய் உள்ளது” என்று எள்ளி நகையாடினார். அப்போது ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.06
2013 ஆகஸ்ட் 20ல், “நாட்டின் பொருளாதாரம் பற்றியோ, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைப் பற்றியோ இந்த அரசு கவலைப்படவில்லை. தங்கள் நாற்காலியை காப்பாற்றுவது பற்றியே கவலைப்படுகிறார்கள். இந்தியா ஏமாற்றம் அடைந்து விட்டது” என்று தாளித்தார் மோடி. அப்போது.. 54.78 ரூபாய்க்கு ஒரு டாலர்.
மோடி பிரதமரான 2 ஆண்டுகளுக்குள் ரூ.35 க்கு ஒரு டாலர் என மதிப்பு உயர்ந்துவிடும் என்றார் சுப்ரமணியம்சாமி. ஆனால் மோடி பதவி ஏற்றதிலிருந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு 83 ரூபாய்க்கு ஒரு டாலர். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத படுபாதாளத்தில் ரூ.84.45க்கு ஒரு டாலர்.
நமக்கு அதிக டாலர் கிடைக்க வேண்டும் என்றால், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் வெளிநாடுகளில் விற்கப்பட்டு அதிக டாலரை நாம் ஈட்டியாக வேண்டும். ஆனால் நமது பொருட்களுக்கு அந்த நாடுகளில் உள்ள சந்தை நிலவரத்திற்கு ஏற்பத்தான் விலை கிடைக்கும்.
உதாரணமாக நாம் சர்க்கரை ஏற்றுமதி செய்கிறோம் என்றால், அந்த சர்க்கரைக்கு உள்நாட்டில் ஒரு விலை இருக்கும். ஆனால் வெளிநாட்டில் விற்கும் போது அந்த நாட்டின் சந்தைக்கு ஏற்ப விலை குறையவும் நேரிடும். அதற்காக நாம் ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்ற நிலையை எடுக்க முடியாது. ஏனென்றால் நமக்கு டாலர்கள் தேவை. நம்மிடம் டாலர் இருந்தால் தான் அதைக் கொண்டு வேறு நாடுகளில் இருந்து இங்கு பெட்ரோல் இறக்குமதி செய்ய முடியும்.
வீழ்ச்சியின் விளைவுகள் என்ன?
இந்தியாவின் வெளிநாட்டு கடன் 642.8 பில்லியன் (64,280 கோடி) டாலராக இருக்கிறது.
சென்ற ஆண்டு ஒரு டாலருக்கு 83 ரூபாய் மதிப்பு என்று இருந்தபோது இந்த கடனின் ரூபாய் மதிப்பு ரூ.53,35,240 கோடி ஆகும். இந்த ஆண்டு ரூ 84.4 என்று சரிந்து விட்ட நிலையில், அதே டாலர் கடனுக்கான ரூபாய் மதிப்பு இப்போது ரூ54,25,232 கோடி ஆக உயர்ந்து விட்டது. புதிய கடன் ஏதும் வாங்காமல், உண்ணாமல் தின்னாமல் 89,992 கோடி ரூபாய் அசல் கடன் அதிகரித்து உள்ளது. ஏறுகிற வட்டி தனி கணக்கு.
ரூபாயின் மதிப்பு வலுவிழந்து வருவதால், கடன் எளிதில் கிடைப்பதில்லை. அதையும் தாண்டி வாங்கும்போது அந்நியச் செலாவணிக் கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி விடுகிறார்கள். இதனால் கடன்களுக்காக நமது நாடு செய்யும் செலவு அதிகரிக்கிறது.
கார்ப்பரேட் மற்றும் அரசுத் துறைகள் வாங்கியுள்ள வெளிநாட்டுக் கடன் சுமை கூடும் போது, ரூபாய் மதிப்பு மேலும் குறைந்து விடுகிறது.
நமது நாடு ஏற்றுமதி செய்யும் அளவைவிட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை மதிப்பு அதிகம். இறக்குமதி பொருட்களின் டாலர் மதிப்பு மாறாமலிருந்தாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அதற்கு ஈடான ரூபாயின் அளவு அதிகரிக்கும்.
‘மேக் இன் இந்தியா’ போன்ற முன்முயற்சிகள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்தாலும், மின்னணுவியல், எந்திரங்கள் மற்றும் இரசாயனங்கள் போன்ற துறைகளுக்கு, இறக்குமதியை நம்பியிருப்பது குறிப்பிடத்தக்க அளவில் குறையவில்லை. நாம் ஏற்றுமதி செய்யும் சரக்குகளின் உற்பத்தி, ஏற்கனவே இறக்குமதியான பொருட்களை நம்பி இருப்பதால், இந்த ஏற்றுமதியின் மூலம் நமக்கு பெரிய லாபம் கிடைத்து விடுவதில்லை .
அத்துடன், ஏற்றுமதியும் குறைந்து வருகிறது, மேலும் அன்னிய நேரடி முதலீடு (FDI) வரத்தும் தணிந்துள்ளது. இந்தியா போன்ற இறக்குமதியை சார்ந்திருக்கும் ஒரு நாட்டிற்கு, ரூபாய் மதிப்பு குறைவது.. இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலைமதிப்பை கூடுதலாக்குகிறது.
இந்தியாவுக்கு தேவைப்படும் கச்சா எண்ணெயில் 87% இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக சென்ற ஆண்டு இந்தியா 134 பில்லியன் (13,400 கோடி) டாலர் செலவிட்டது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்படும் அதே அளவு எண்ணெய்க்கு 18,760 கோடி ரூபாய் அதிகம் தர வேண்டும்.
கச்சா எண்ணெயில் இருந்து தான், விமான எரிபொருள், பெட்ரோல், டீசல், உரங்கள், பிளாஸ்டிக் ஆகியவை கிடைக்கின்றன. கச்சா எண்ணெய்க்குச் செலவழிக்கும் தொகை அதிகா¤த்தால் இவற்றின் விலை உள்நாட்டில் ஏறும்.
ஏற்றுமதியும் உதவவில்லை
மேலே உள்ள கணக்குகளில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் யாவும், சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையில் டாலரின் விலை ரூ 1.40 உயர்ந்ததால் ஏற்பட்ட அதிகரிப்பு மட்டுமே. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது டாலரின் விலை 64 ரூபாய் தான். இப்போது 20 ரூபாய் அதிகம். இதைக் கொண்டு கணக்கிட்டால், அதிகரித்துள்ள செலவினத்தின் அளவு தலையை கிறுகிறுக்க செய்யும்.
இறக்குமதியை மட்டுமே கணக்கிட்டு பார்க்காமல், ஏற்றுமதியையும் சேர்த்துதானே பார்க்க வேண்டும். ஏற்றுமதி மூலம் நமக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் தானே என்று நியாயமான கேள்வி இங்கு எழும்.
ஐ.டி. என்று சொல்லப்படும் தகவல் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அயல் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாம் இங்கே வேலை பார்ப்பதால், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் டாலர் அதிகமாகும் என்பது உண்மையே. அதேபோல டாலர் சிட்டி என்று சொல்லப்படும் திருப்பூரில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகின்றன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையை நம்மால் நிச்சயிக்க முடியாத நிலை நிலவுகிறது. ஆயத்த ஆடைகளை நாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த காலம் போய், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள், நமது உற்பத்தியாளர்களை துணை நிறுவனங்கள் ஆக்கிவிட்ட கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துணியிலிருந்து நூல் வரை அவர்கள் சப்ளை செய்ய, அதை ஆடையாக மாற்றம் (கன்வர்ஷன்) செய்து கொடுப்பவையாக நமது நிறுவனங்களின் ஆளுமையை சுருக்கி விட்டார்கள்.
இறக்குமதி நமக்கு தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதில் நமது விருப்பங்களுக்கு முன்னுரிமை இல்லை. அதே நேரத்தில் ஏற்றுமதி, நம்மிடமிருந்து வாங்குபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைகிறது. வாங்குபவர்கள் மிகப்பெரும் சக்தி வாய்ந்த மூலதனத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே ஏற்றுமதியும் இறக்குமதியும் சம பலத்தில் நிகழ்வதில்லை.
விழுங்குகிற கடன்கள்
அரசு வாங்கும் கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மோடி பதவியேற்கும் வரை, விடுதலை கிடைத்த பின் 67 ஆண்டுகளாக இந்தியாவுக்கு இருந்த கடன் 53 லட்சம் கோடி ரூபாய். மோடியின் பத்தாண்டு ஆட்சி காலத்தில் 120 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 173 லட்சம் கோடியாக மாறி இருக்கிறது. எனவே புதிய கடன் பெறுவோர் வெளிநாட்டு கடன்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
சர்வதேச நிதி மூலதனத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து, உள்நாட்டு உற்பத்திகளை பாதுகாக்க தவறி, சொந்த நாட்டின் சந்தையை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திறந்துவிட்டு, அதானி, அம்பானி போன்றவர்களின் நிதி முறைகேடுகளுக்கு எல்லாம் தோள் கொடுத்து பாதுகாத்து, சாமானிய மக்களின் தலை மீது ஜி.எஸ்.டி என்ற பெயரில் தலையில் ஒரு சுமையை ஏற்றி, இதையெல்லாம் மறைக்க இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் மோடியும், அவரது பொருளாதார ஆலோசகர்களும் தான் இன்றைய மிகப்பெரிய குற்றவாளிகள்.
பிரிட்டிஷ் ஆட்சி ‘பொழுதெல்லாம் செல்வம் கொள்ளை கொண்டு போன’ பின்பு, வறுமையின் அடித்தளத்தில் உழன்ற இந்தியா, உணவு உற்பத்தி, மின்சாரம், கனரகத் தொழில்கள் போன்றவற்றை உருவாக்கி, வலிமைப்படுத்தி தன் காலில் நின்று சுயசார்பை வளர்த்துக் கொண்டிருந்தது. அதனை சர்வதேச நிதி மூலதனத்துடன் பிணைத்து, தரதரவென்று இழுத்துச் செல்லப்படும் நிலையை மோடி அரசு உருவாக்கி விட்டது.
இந்த நெருக்கடிதான், நமது பக்கத்து நாடுகளான இலங்கையிலும் வங்கதேசத்திலும் பேரழிவை ஏற்படுத்தின. கடைசியில் மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அவ்வளவு மோசமான பொருளாதார நிலைக்கு இந்தியா சென்று விடாமல் தடுக்க, மக்களிடம் விவரங்களை எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை ஆகிறது.
இந்தியாவை இது மேலும் கீழே தள்ளும்
உள்நாட்டில் ஏற்படும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்து இருக்கிற தொகைகளுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கிறது. அதே நேரத்தில் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை கூட்டுகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சா¤ந்து வருவதை ஈடுகட்ட, ரிசர்வ் வங்கி கையிருப்பு வைத்துள்ள டாலர்களை விற்கிறது. அதன் மூலம் சந்தையில் கிடைக்கும் டாலர்களின் அளவை அதிகரித்து, அதனால் ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கை இது. ஆனால் ஏற்கனவே வர்த்தக சமன்பாட்டில் பின்தங்கி இருக்கும் இந்தியாவின் டாலர் கையிருப்பை இது ‘காலி’ செய்துவிடும். சர்வதேச நிதியத்தில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளும். ஒரு வகையில் தீர்வு காண முயற்சித்தால், அது இன்னொரு சிக்கலை கொண்டு வருகிறது. சேற்றில் மாட்டிக்கொண்ட கொக்கு, ஒரு காலை அழுத்தி இன்னொரு காலை விடுவிக்கிறது. இப்போது மற்றொரு கால் மாட்டிக்கொண்டது. பிறகு மூக்கை மூக்கை சேற்றுக்குள் அழுத்தி, மாட்டிக்கொண்ட காலை விடுவிக்கிறது. ஆனால் இப்போது மூக்கு மாட்டிக் கொண்டது. முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத நெருக்கடி இது.
டாலரின் விலை எப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
ஒரு காலத்தில் தங்கமும் வெள்ளியுமே பணமாக பயன்படுத்தப்பட்டன. பின்னர் காகித நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த போது, ஒரு நாட்டின் அரசு இருப்பு வைத்துள்ள தங்கத்தின் அளவைப் பொறுத்து அந்தக் காகிதத் தாளின் மதிப்பு நிர்ணயமானது. முதலாம் உலகப் போர் வரை, இங்கிலாந்தின் பவுண்டு நோட்டு தான் சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டது. அதற்குப் பின் அமெரிக்காவின் டாலர் உலகச் சந்தையை ஆக்கிரமித்தது. இந்தியா விடுதலை அடைந்தபோது ஒரு டாலருக்கு ஒரு ரூபாய் என்று மதிப்பு இருந்தது. இந்தியா ஒரு நிலையான மாற்று விகித முறையைப் பயன்படுத்தி வந்தது. ரூபாய் மதிப்பு விகிதத்தை அரசுதான் நிர்ணயம் செய்தது.
நரசிம்மராவ் காலத்தில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல் நடத்தப்பட்ட பின்பு 1993ல் தாராளமயமாக்கப்பட்ட மாற்று விகித மேலாண்மை (எல்இஆர்எம்எஸ்) எனும் முறை கொண்டுவரப்பட்டது. பெயர் தான் பெரிதாக இருக்கிறதே தவிர, ரூபாயின் மதிப்பை, சூழ்ச்சி மிகுந்த சந்தை நிர்ணயிக்கட்டும் என்று கை கழுவிய முறையே அது. எளிதாக சொல்வதென்றால், அந்தப் பகுதி மக்களுக்கு தேவைப்படும் தக்காளியின் அளவைவிட அதிகமான தக்காளி சந்தைக்கு வந்தால் அதன் விலை கிலோ 50 பைசாவாக இருக்கும். தேவையை விட குறைவாக வந்தால் அதன் விலை 100 ரூபாயைக் கூட எட்டும். அதுபோலவே உலகச் சந்தையில் டாலர் எளிதாகக் கிடைத்தால், ரூபாயின் மதிப்பு ஏறும். டாலர் கிடைப்பது கடினமாக இருந்தால் ரூபாய் மதிப்பு குறையும்.
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
ஆசிரியர், ஜனசக்தி