இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 22வது அகில இந்திய மாநாடு
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 22வது அகில இந்திய மாநாடு, டெல்லியில் டிசம்பர் 6 முதல் மூன்று நாட்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. மூத்த தோழர் ரஞ்சனா ரே, கொடியேற்றி உரையாற்றினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் அருணாராய் தொடக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அமர்ஜித் கவுர் மற்றும் பல்வேறு மாதர் அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். அவை பலத்த கரவொலியுடன் ஏற்கப்பட்டன. பின்னர் பொதுச்செயலாளர் ஆனி ராஜா தாக்கல் செய்த அறிக்கையை 27 மாநிலங்களைச் சேர்ந்த 350 பிரதிநிதிகள் ஆர்வமுடன் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.
‘இளம்பெண்களின் பிரச்சனைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையரங்கம் நடைபெற்றது. அபராஜிதா உள்ளிட்டோர் முக்கிய தலைப்புகளில் கருத்துரை வழங்கினர். அதன் அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.
பாலஸ்தீனம், கியூபா, வெனிசுலா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினர். வெனிசுலா நாட்டுத் தூதர் கப்பாயா வாழ்த்தி உரையாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, இளைஞர் பெருமன்றத்தின் தேசியச் செயலாளர் அமிர்தா, இந்திய மாணவர் பெருமன்றத்தின் அகில இந்தியத் தலைவர் விராஜ் தேவாங், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியச் செயலாளர் வெங்கையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் பங்கேற்ற 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளில், மூன்றில் ஒரு பகுதியினர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். பள்ளி ஆசிரியர், வழக்கறிஞர், வீட்டு வேலை செய்பவர். அங்கன்வாடி ஊழியர், ஆஷா தொழிலாளி, சத்துணவு ஊழியர், மருத்துவர் பொறியாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவராக சையதா சையதைன் ஹமீது, பொதுச்செயலாளராக நிஷா சித்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய துணைத்தலைவர்களாக ஆனி ராஜா, அருணா சின்ஹா, கமல்ஜித், டாக்டர் ரஜினி, ராஜேந்திர கவுர், சுசிலா சஹாய், கமலா சதானந்தம், பி.பத்மாவதி, ஜெயமேதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசியச் செயலாளர்களாக நிவேதிதா, ருஷ்டா, சுப்பிரியா சோட்டாணி, டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, சமஸ்ரிடாஸ் ஆகியோரும், அகில இந்திய துணைச் செயலாளர்களாக பிஜு மோல், மஞ்சு, தீப்தி, அபராஜிதா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.