ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா! வா! வா!
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் எழுதிய கட்சிக் கடிதம்
போர்க்குணமிக்க தோழர்களே!
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில மாநாடு ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமான் ஆட்சி புரிந்த, புகழுக்குரிய மண்ணான தர்மபுரியில் நடைபெற உள்ளது.
ஆம்! ஜனவரி திங்கள் 26 ஆம் நாள் நமது எதிர்காலச் சிற்பிகள் லட்சக்கணக்கில் அணி திரள உள்ளார்கள்.
ஜனவரி 26 என்பது நமது நாட்டின் வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள்.
1950 ஜனவரி 26 இல் நமது நாடு குடியரசு நாளாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
அன்று முதல் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாளில், நமது நாட்டின் மணிக்கொடியாம் அசோகச் சக்கரம் மையத்தில் கொண்ட மூவர்ணக் கொடியை நட்ட நெடுமரத்தில் ஏற்றி வைத்து, நமது வணக்கத்தைத் தெரிவித்து, மரியாதை செய்வதுடன், அரசியலமைப்புச் சட்டம் குறித்து எடுத்துக் கூறி உறுதி ஏற்கிறோம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் என்பது சாதாரணமான ஒன்று அல்ல, விடுதலைப் போர்க்களத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தியாக சீலர்கள் 389 பேரால் உருவாக்கப்பட்டது.
அதிலிருந்து வரைவு அறிக்கை தயார் செய்திட அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் விவாதித்து வரைவு அறிக்கை தயாரித்தது. இவ்வறிக்கை அரசியல் நிர்ணய சபை முன் வைக்கப்பட்டு, அதன் மீது வரிவரியாக விவாதிக்கப்பட்டது.
புள்ளி, கமா உட்பட விவாதிக்கப்பட்டன எனில், விவாதம் எவ்வளவு உயர்ந்த ஜனநாயகத்தன்மையில் அமைந்திருந்தது என்பதனை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மற்றும் உறுப்பினர்கள் அனைத்து வினாவிற்கும், ஐயப்பாடுகள் ஒவ்வொன்றிற்கும், பொறுமையாக, நிதானமாக அய்யமற விளக்கமளித்தார் நிறைகுடமான அண்ணல் அம்பேத்கர்.
அவர் அளித்திட்ட விளக்கங்களுக்குப் பின்னர், அரசியல் நிர்ணய சபை, அரசியலமைப்பை ஒருமனதாக 1949 நவம்பர் 26 இல் ஏற்றுக்கொண்டது.
அந்நாள் முதல் ஆண்டுதோறும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஏற்றுக்கொண்ட நாளான நவம்பர் 26 ம் தேதியை அரசியல் சாசன நாளாக நாடு கொண்டாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வாண்டு நவம்பர் 26- ஐ, 75ஆம் ஆண்டாக, பவள விழாவாக நாடு கொண்டாடி மகிழ்ந்தது. மகிழ்ந்தோம் என்பதோடு மட்டுமல்ல, அன்றைய நாளில் உறுதிமொழியை ஏற்றோம்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது நமது நாட்டை வழிநடத்தும் வழிகாட்டியாகும்.
ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், யூனியன் பிரதேசங்களாக இருந்தாலும் அவை அனைத்தும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தை தான் வெகுவாக மதிப்பதாக, நாட்டோர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசியல் சட்டப் புத்தகத்தை நாட்டின் பிரதமர் தொட்டு வணங்கியதை அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களும் வெளியிட்டதைப் பார்த்திருப்பீர்கள்.
அனைத்து நாளேடுகளும் முதல் பக்கச் செய்தியாகப் படத்துடன் வெளியிட்டதைப் பார்த்தும், படித்தும் இருப்பீர்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தை இன்றைய ஒன்றிய அரசு உண்மையில் ஏற்றுக் கொண்டதா? அதனை மதிக்கின்றதா? எனில் அது கேள்விக்குறியே!
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கி நமது நாட்டிற்கு அளித்திட்ட மிகப்பெரும் முற்போக்குக் கொடைதான் அரசமைப்புச் சட்டம்.
அச்சட்டம் நமது நாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரும் சுயமாகச் சிந்திக்க, தான் சிந்தித்ததை வெளிப்படுத்தும் விதமாகப் பேசவும், ஏடுகளில் எழுதவும், நூல்களாக அச்சிட்டு வெளியிடவும் நமக்கு அளித்துள்ள மிகப்பெரும் உரிமையாகும்.
அத்தகைய உரிமையை இன்று நாம் பயன்படுத்த முடிகின்றதா? பயன்படுத்திய கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, நரேந்திர தபோல்கர், பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகிய நால்வரின் கதி என்னவாயிற்று?
வெள்ளையர்கள் ஆட்சிக் காலத்தில் மாற்றுக் கருத்துடையவரைக் கைது செய்தனர். ஆண்டுக் கணக்கில் சிறை வைத்தனர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் உயிரையே அல்லவா பறித்துக் கொள்கிறார்கள்.
மாற்றுக் கருத்துடையோரை நகர்ப்புற நக்சலைட்டுகள் எனத் தங்களின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசத்துரோகக் குற்றம்சாட்டி, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து, அவர்கள் ஜாமீனில் கூட வெளிவர முடியாதபடிச் செய்து, உயிருடன் சென்றவர்களைப் பிணமாகத்தான் வெளியே அனுப்புகிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் தங்களின் சுதந்திரமான செயல்பாட்டை இழந்து, பாஜகவின் கட்டளைகளை நிறைவேற்றக்கூடிய அமைப்புகளாக, அடிமை அமைப்புகளாக மாறிவிட்ட பெரும் கொடுமை நீடிக்கலாமா?
ஆட்சி என்பது எந்த ஒரு மதத்தையும் அல்ல, மதச்சார்பின்மை என்கிற கொள்கையைப் பின்பற்றிட வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்கு மாறாக, மதம் சார்ந்த நாடாகச் செயல்படுவதும். நாட்டு மக்களிடையே மதவெறிகளை ஊட்டி, மக்களைப் பிளவுபடுத்தித் தங்களின் மிகக் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள் கூடிய ஓர் அற்பத்தனமான ஆட்சியாக நடைபெற்று வரும் அவலம்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் என்னும் உயரிய சொற்களை நீக்கிட வேண்டும் எனப் பல்வேறு இடையூறுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி உள்ளிட்ட சங் பரிவாரங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். அவர்களின் அருவருக்கத்தக்க ஆசையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நீதிமன்றம் நிராகரித்து இருந்தாலும், பாஜகவின் எஜமானனான ஆர்எஸ்எஸ்ஸின் விருப்பமாக மட்டுமின்றி, கொள்கையாக உள்ளது என்பது மதச்சார்பின்மை, சோசலிசம் என்பது கூடாது என்பதே.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே கட்சி என்கிற நிலைப்பாட்டில் உறுதியுடைய அமைப்புதான் ஆர்எஸ்எஸ். அதனுடைய அரசியல் பிரிவுதான் பாஜக.
இத்தகைய படுபிற்போக்கான கட்சி இன்று, ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மோடியின் தலைமையில் அமர்ந்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் மூலம் நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையை அகற்றி, அதிபர் ஆட்சி முறையை வலுக்கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கின்றது.
மொத்தத்தில் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற, சர்வாதிகாரத்தில், பாசிசத்தில் உறுதியான பற்று உடையவர்கள் அதிகாரப் பீடத்தில் அமர்ந்துள்ளார்கள் எனில் அது மிகையல்ல!
மீண்டும் சந்திப்போம்,
வணக்கம்,
தோழமைமிக்க,
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி