தை திருநாள் மற்றும் உழவர் தின வாழ்த்துகள்
இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தை திருநாள் மற்றும் உழவர் தின வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆடிப் பட்டம் தேடி விதைத்து, கண்ணிமைகள் கருவிழிகளை காப்பது போல் பாதுகாத்து, வளர்த்த பயிர்கள் விளைந்து, பலன் வழங்கி நம்பிக்கையூட்டும் காலமான தை மாதத்தை, தமிழ் சமூகம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என தமிழ் சமூகம் கொண்டாடி வருகிறது.
மார்கழி மாத நிறைவில் பழையன கழித்து, புதியன சேர்த்துக் கொள்வதையும் ஒரு மரபாக பின்பற்றி வருவதை “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்கிறது நன்னூல்.
உழைப்புக்கு உதவிடும் கால்நடைகளையும் , உழுவடை கருவிகளையும் வணங்கி வழிபட்டு கொண்டாடுவது இன்று மரபு வழி பண்பாட்டு நிகழ்வாகி விட்டது.
அறிவியல் வளர்ச்சி அற்புதங்களை அரங்கேற்றி வருகிறது. உள்ளங்கையில் உலக நடப்புகளை மேற்பார்வை செய்யும் இணைய வலைத் தொடர்பு ஆண்ட்ராய்டு அலைபேசி கருவியால் சாத்தியமாகிவிட்டது.
இன்று செயற்கை நுண்ணறி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
சந்திரனின் தென் துருவத்தில் குறிப்பிட்ட இலக்கில் ஆய்வுக் கலம் இறக்கி உலக கவனத்தை ஈர்த்த சாதனையில் தமிழர் அறிவு மேலாண்மை பெருமை பெற்று நிற்கிறது. சூரியக் கோள் குறித்த ஆய்வுக்கும் ஒரு கலம் அனுப்பி, அதன் இலக்கில் நிறுத்திய இமாலய சாதனையும் அண்மையில் நிறைவேறியது.
ஆனாலும், நாட்டு மக்களில் 35 சதவீதம் பேர் அதீத வறுமையில், அதாவது ஒரு வேளை உணவுக்கும் போராடும் பசியும், பட்டினியுமான வாழ்வின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து மாத காலத்தில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு இரண்டிலக்கம் தாண்டி செல்கிறது. வேலையின்மை அதிகரித்து வெடிக்கும் எரிமலையாக குமுறிக் கொண்டிருக்கிறது.
உழவின் சிறப்புப் பேசும் சமூகத்தில் உழவர்களும், வேளாண் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் தொடர்கிறது.
“தாயின் வயிறு பசியில் துடிக்கும் போது பிள்ளை கோயிலில் ‘கேர’ தானம் செய்து கொண்டிருந்தானாம்” என்பது போல் நாட்டின் பிரதமர் மக்கள் வாழ்க்கை நெருக்கடிகள் மீது கவனம் செலுத்தாமல் இதிகாச நாயகன் ராமர் கோயில் குட முழுக்கு நடத்துவதில் மூழ்கி கிடக்கிறார்.
இயற்கை சீற்றங்களை வென்று வாழ இயற்கையோடு இணைந்து இயற்கையை வெல்வது என்பதை தவிர வேறு பாதை நமக்கு இதுவரை தெரியவில்லை. மிக் ஜாம் புயலும், தென் தமிழகத்தில் பெய்த பெரு மழையும் தலைநகர் உட்பட எட்டு, ஒன்பது மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 2 கோடி மக்களின் மறுவாழ்வுக்கு தமிழ்நாடு அரசு போர்கால முனைப்பில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சாதியும், மதமும் அரசியல் களத்தில் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மனித மாண்பு அழித்தொழிக்கும் சக்தியில் அரசு அதிகாரத்தின் துணையோடு ‘ஆக்டோபஸ்’ போல் எட்டு திசைகளிலும் கை விரித்து ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து வருகிறது.
விழித்தெழுவோம். நாடு தனிநபர் மையப்பட்ட நவீன பாசிச, மதப் பெரும்பான்மை சர்வாதிகாரமாக உருமாற அனுமதிக்க மாட்டோம் என தை முதல் நாள், தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினத்தில் உறுதி ஏற்போம்.
நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத மதவெறி சக்திகளை நிராகரித்து, ஜனநாயகம் , நல்லிணக்கம் பேணும் சக்திகளை, சமூகத்தின் அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி காணும் மாற்று கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்திடுவோம் என்ற உறுதியாடு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் தை திருநாள், உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.