பேரிடர் துயரத்திலும் மலிவான அரசியல்:
மிக்ஜாம் புயல், கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக் காடாயின. 36 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. 43 சென்டிமீட்டர் அடர்த்தியுடன் பெய்த இந்த மழையால் மாநகரின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னைக்கு மிக அருகே வங்கக் கடலில் 18 மணி நேரமாக மிக்ஜாம் புயல் நிலைகொண்டிருந்தது. புயல் நகர்ந்து செல்லும் வேகமும் மிக குறைவாக இருந்தது. இதன் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்தது. நீர்நிலைகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து 4 அடி வரை தேங்கியது.
இங்கு நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 103 செ.மீ., அளவுக்கு மழை வெளுத்து வாங்கியது. 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் 17, 18 தேதிகளில் மழை கொட்டி தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாயினர். தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும், அதிகாரிகளும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தென் மாவட்டங்களில் மழை வெள்ள மீட்புப் பணிகளை தமிழ்நாடு அரசு சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
“டிசம்பர் 12ஆம் தேதியே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை வந்தபோதும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
2023ஆம் ஆண்டுக்கான பேரிடர் நிதியான 900 கோடி ரூபாய் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு விட்டது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசிடம் 813.15 கோடி ரூபாய் பேரிடர் நிதி இருக்கிறது.
மாநில அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவியது தேசிய பேரிடர் மீட்புக்குழுவே” இவை அனைத்தும் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கள்.
வரலாறு காணாத, வானிலை ஆய்வுகளின் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட கடும் மழையால் தலைநகர் சென்னையும், தென் மாவட்டங்களும் புரட்டி போடப்பட்டுள்ளன. இயற்கைப் பெருஞ்சீற்றம் மக்களின் வாழ்வை சீர்குலைத்துள்ளது. இதைப் பற்றிய எந்த கவலையும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சில் வெளிப்படவில்லை. பெருமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பல லட்சம் மக்கள் மீது பரிவோ கருணையோ அவருடைய பேச்சில் இல்லை. மாறாக அதிகார மமதையும் மலிவான அரசியலையுமே அவருடைய பேச்சும் உடல் மொழியும் வெளிப்படுத்துகிறது.
வழக்கமான பருவமழை, வெள்ளம், புயல் என்பதை விட அதிகப்படியான கடும் பேரிடரின் பாதிப்புகளை எதிர்கொள்ள, மீட்புப் பணிகளைச் செய்திட ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரண நிதி கேட்டது. உடனடியாக 2,000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக வழங்குமாறு கோரியது.
இந்தக் கோரிக்கை தேசிய பேரிடர் நிதியின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டதோ விதிமுறைகளை மீறியதோ அல்ல. தேசிய பேரிடர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதன் நோக்கமே, வழக்கத்தை விட கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது மாநிலங்கள் சமாளிக்க கூடுதல் நிதியை கொடுப்பதற்காகத் தான்.
பிறகு எதற்காக ஒன்றிய நிதியமைச்சர் கடும் சொற்களைப் பேசுகிறார்? அமைச்சரின் மரியாதைக்குரிய அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் சொல்ல நேர்ந்தது ஏன்? நிர்மலா சீதாராமனிடம் கையேந்துவது போன்று தினமலர் நாளிதழ் கேலிச்சித்திரம் வரைந்தது ஏன்?
ஒன்றிய அரசிடம் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள், ஒற்றைப் பேரரசாக கருதி ஆணவம் கொள்ள செய்கிறது. கூட்டாட்சி தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்கும் கொள்கைகளைக் கொண்ட பா.ஜ.க, இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. இதன் ஒட்டுமொத்த வெளிப்பாடு தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு.
சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் புயல், வெள்ள பேரிடர் பாதிப்புகளை ஒன்றிய அரசின் குழு பார்வையிட்டது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளை பாராட்டியது. ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளிப்பதாக கூறிச் சென்றது.
தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்த பிறகு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பேரிடர் துயரங்களை அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி திருச்சியில் விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். “வெள்ள பாதிப்புகளிலிருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம்” என்று மேடையில் முழங்கினார். அதன் பிறகும் எதுவும் நடக்கவில்லை. எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை.
இதற்கு என்ன காரணம்?
அரசின் எல்லா நிதிகளும் வரி வசூல் மூலமாகவே வருகிறது. அதாவது மக்களுடைய வரிப்பணமே அரசின் எல்லா நிதிகளுக்கும் மூலாதாரம்.
ஒன்றிய அரசு மட்டுமே வருமான வரி வசூலிக்கிறது. மாநிலங்களிடம் இருந்த விற்பனை வரி விதிப்பும் ஜிஎஸ்டி வடிவில் ஒன்றிய அரசுக்கு சென்று விட்டது. பின்னர் ஒன்றிய அரசு அதனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநில அரசுகள் தனியாக வரி விதிக்கும் வகையினங்கள் மிகச் சில மட்டுமே உள்ளன. இதனால் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வையே பெரும்பகுதி சார்ந்திருக்கின்றன.
ஒன்றிய அரசு ஒரு சில பொருட்கள் மீது செஸ் என்ற கூடுதல் வரி வசூலிப்பதன் மூலம் தேசிய பேரிடர் நிதி (National Disaster Response Fund) உருவாக்கப்படுகிறது. இதற்கு தனி நபர்களும் நன்கொடை தருகின்றனர்.
இந்த தேசிய பேரிடர் நிதியின் ஒரு பகுதி மாநில பேரிடர் நிதிக்கு (State Disaster Response Fund) கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒன்றிய அரசு 75%, மாநில அரசு 25% பங்களித்து மாநில பேரிடர் நிதி உருவாக்கப்படுகிறது.
பெருமழையும் மிகக் கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு தமிழ்நாடு பெரும் துயரத்தை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டு வர மாநில பேரிடர் நிதியான 1,200 கோடி ரூபாய் போதாது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏறத்தாழ 12,000 கோடி ரூபாய் தேவைப்படும் என தமிழ்நாடு அரசு கூறுகிறது. அதனை கொடுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோருகிறது.
ஒரு மாநிலத்தில் கடுமையான பேரிடர் நிகழும் போது, அந்த மாநிலத்தின் பேரிடர் நிதியிலிருந்து மட்டும் நிவாரணம் அளித்திட முடியாது. அப்போது, தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் ஒதுக்கீட்டை மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதே சட்டம், விதிமுறை. இதற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன?
அதிகாரங்களையும் நிதி வருவாய் வளங்களையும் ஒன்றிய அரசு மத்தியில் குவித்துக் கொண்டே போகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும் ஒன்றியத்தில் மேலும் மேலும் அதிகாரங்களை குவிப்பதாகவே உள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையம் சரியான முன்அறிவிப்புகளை கொடுக்கவில்லை என்ற சர்ச்சை, மீட்புப் பணிகளுக்கு தேசியப்படைகளை அனுப்பினோம்; ஹெலிகாப்டர் அனுப்பினோம் என்பது, ஆளுநர் தனியாக ஆலோசனை நடத்துவது… இவை எல்லாம் அதிகார குவிப்பின் வெளிப்பாடுகள்.
அதிகாரக் குவிப்பால் வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமல்ல, பேரிடர்களை சந்திக்கும் போதும் ஒன்றிய அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை மாநிலங்களுக்கு உருவாகிறது. இதனால் பெருமழை, பேரிடரில் பரிதவித்து நிற்கும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை கூட ஒன்றிய மோடி அரசு கொடையாக மாற்றி விடுகிறது. இதனைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா எதிரொலிக்கிறார். இதனைத் தான் தினமலரின் கேலிச்சித்திரமும் வெளிப்படுத்துகிறது.
மக்களுக்கான நிவாரணத்தை அளிக்கக்கூடிய கட்டமைப்பு பலம் மாநில அரசுகளிடமே உள்ளது. ஒன்றிய அரசால் அதனைச் செய்ய முடியாது. இந்தப் பெருமழை, பேரிடர் பாதிப்பை கூட மாவட்டம் மாவட்டமாக பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அதற்கேற்ப மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் பிரதிபலிக்கின்றனர். இதற்காக அவர்கள் கொடுக்கும் குரல், அதிகாரக் குவிப்புக்கு எதிரான கூட்டாட்சியின் குரல்.
மாநிலங்களின் இருப்பை நிராகரித்து, ஒற்றை தேசமாக, பாரதமாக உருவகிக்கும் ஆர்எஸ்எஸ் பாசிச அரசியலுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல். மக்களாட்சியின் மாண்பை, கூட்டாட்சி குடியரசை முன்னிலைப்படுத்தும் ஜனநாயகத்தின் குரல். இதனை அவதூறுகளாலும் மலிவான அரசியல் மூலமும் மடைமாற்றி விடலாம் என பாஜக நினைக்கிறது. அது சாத்தியமில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்த்துவார்கள்.
கட்டுரையாளர்:
வ.மணிமாறன்
பத்திரிகையாளர், எழுத்தாளர்
manimaran2@gmail.com