கட்டுரைகள்தமிழகம்

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாதா?: சட்டம் என்ன சொல்கிறது?

த.லெனின்

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும். இதன் மிக முக்கிய நோக்கம் இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்துவதாகும். இம்முகமை

டிசம்பர் 2005 ல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். பிரதமர் இதன் முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார். இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் முழுமையான மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகைளயும் செயல்படுத்துகிறது.

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாதா?

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் பேரிடர்களை கையாள்வதற்கான வழிகாட்டல்களை நமது நாட்டின் 10வது நிதி ஆணையம் 1995-2000 ஆண்டு வகுத்துள்ளது. ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி பாதிப்படைந்தால் அதனை தேசிய பேரிடர் என்று அறிவிக்கலாம். அத்துடன் விதிவிலக்காக பாதிப்பின் தீவிரம், பேரழிவின் அளவு, அதற்கு தேவைப்படும் உதவியின் அளவு, உயிர் சேதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் தேசிய பேரிடர் என்று அறிவிக்கலாம் என வழிகாட்டி உள்ளது.

இருப்பினும் ஒன்றிய நிதியமைச்சர் திரும்பத் திரும்ப தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என்கிறார். அத்துடன் சுனாமியை கூட தாங்கள் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்கிறார்.  உண்மையில் தேசிய பேரிடர் ஆணையம் சுனாமிக்கு பிறகு தான் உருவாக்கப்பட்டது.  அப்படி இருக்க  சுனாமியை எப்படி தேசிய பேரிடராக அறிவிக்க இயலும்? தேசிய பேரிடராக அறிவிக்கப்படாத கோவிட்-19  நோய் தொற்று காலத்தில் எப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது?

திட்டமிடப்படாத இந்த அறிவிப்பால் புலம்பெயர் தொழிலாளிகள், சாமானியர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலைகள் நடந்தே சென்று துன்பங்களை அனுபவித்தும் சிலர் இறந்தும் போனார்களே. எதனால்? அப்போது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

1999 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஒரு உயர்நிலை அதிகாரக் குழுவை (High Power Committee) ஒன்றிய அரசாங்கம் அமைத்தது. 2001 குஜராத் பூகம்பத்துக்கு பிறகு, பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும், தடுப்பு வழிமுறைகள் குறித்தும் ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதை சட்டமாக கொண்டு வந்தது 2005 ஆம் ஆண்டில் தான்.

சுனாமியில் ஏராளமான உயிர்களை பலிகொடுத்த பிறகுதான் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒன்றிய அரசுக்கு அதன் பிறகுதான் விழிப்புணர்வு ஏற்பட்டு இந்தச் சட்டத்தை இயற்றியது.

ஓர் இயற்கை பேரழிவை, தேசிய பேரிடர் என்று தீர்மானம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறை மற்றும் விதிமுறைகள் கிடையாது. ஆனால் அதை ஒன்றிய அரசே முடிவு செய்து அறிவிக்கலாம்.

எதற்காக தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றால், தேசிய பேரிடர் நிவாரண நிதி என்று ஒன்று இருக்கிறது. அதை உடனடியாகப் பெறுவதற்காகத் தான் தேசிய பேரிடர் என அறிவியுங்கள் என்று பாதிக்கப்பட்ட மாநிலங்கள் முறையிடுகின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு திரட்டப்படும் நிதியானது, பான் மசாலா, மெல்லும் புகையிலை மற்றும் சிகரெட்டுகள் மூலம் வசூல் செய்யப்படும் செஸ் வரியில் ஒரு பகுதி இந்த ஆணையத்திற்கு செல்கிறது. மேலும் எந்த ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ கூட இந்த ஆணையத்திற்கு நிதியுதவி அளிக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு பெரும் தொகை இந்த ஆணையத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

பீகார் பெரு வெள்ளப் பாதிப்பை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இயற்கை பேரிடர் என்று அறிவித்ததையும் நிர்மலா சீதாராமன் நினைவில் கொள்ள வேண்டும்.

தேசிய பேரிடர் என்று அறிவிப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மாநில அரசு கேட்கும் முழு நிவாரணத் தொகையையும் மத்திய அரசு கொடுக்க நேரிடும். அதனை தடுக்கவே கடுமையான இயற்கை பேரழிவு என அறிவிக்கப்படுகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையும். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையும் மட்டுமே பெற முடியும்

பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேசிய பேரிடர் என்று ஒன்றிய அரசுதான் அறிவிக்க முடியும். பந்து இப்போது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. ஆனால் அதை உதைத்து விளையாடுவதற்கு பதிலாக, ஒன்றிய அரசு மக்களை வதைத்து விளையாடுகிறது. வகை வகையான வக்கனையோடு பேசி எதையும் செய்ய மறுக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

இப்படி அவர்கள் பேசுவது ஒன்றிய அரசின் ஆணவத்தை, அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. பாசிச பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இந்த நோய்யை தீர்க்கும் ஒரே வழி! மக்களைத் திரட்டுவோம்! பாசிச பாஜகவை விரட்டுவோம்!

கட்டுரையாளர்:
த.லெனின்
மாநிலக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button