கட்டுரைகள்

அண்ணாமலையின் அவதூறுகளுக்குப் பதிலடி! வளர்ச்சிக்காக போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகளே!

வ.மணிமாறன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, பொய்களை சரளமாகப் பேசுவதில் புகழ் பெற்று வருகிறார். அவர் நடத்தி வரும் சொகுசு யாத்திரையில் தரவுகளோ விவரங்களோ இல்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.

திட்டியோ வாழ்த்தியோ எதை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், அது தன்னைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்பொழுதுதான் ஊடக வெளிச்சம் தன் மீது எப்பொழுதும் இருக்கும். இதுதான் திருவாளர் அண்ணாமலையின் கொள்கை. அவர் மேற்கொண்டு வரும் சொகுசு யாத்திரையில், செல்லும் இடங்களில் எல்லாம் இதைத்தான் அவர் செயல்படுத்தி வருகிறார்.

இப்படித்தான் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சொகுசு யாத்திரை சென்ற போது, கம்யூனிஸ்ட்டுகள் மீது சரமாரியான அவதூறுகளை அள்ளிவிட்டுள்ளார்.

வளர்ச்சிக்கானது கம்யூனிசம்

“வளர்ச்சிக்கு எதிரான ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களால் எங்கும் வளர்ச்சியை கொண்டு வர முடியாது” – இது திருவாளர் அண்ணாமலை திருவாய் மலர்ந்தருளியது. அரசியல் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட இப்படி பேச மாட்டார்கள்.

கம்யூனிச கொள்கையே மனித குலத்தின் வளர்ச்சிக்கானது. அனைத்துத் தளைகளில் இருந்தும் மனிதன் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் மார்க்சியம். பிறகு எப்படி வளர்ச்சிக்கு எதிராக இருக்க முடியும்?

கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நடைபோட்டது. நாட்டின் விடுதலைக்கு கருத்துருவம் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

“இந்தியாவுக்கு தேவை குடியேற்ற நாட்டுத் தகுதி அல்ல. அந்நிய ஆட்சியுடன் அதிகாரப் பங்கீடல்ல. நம்மை நாமே ஆளும் முழுமையான சுதந்திரமே நமது இலட்சியம்” என்று 1923ல் கயாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதலில் முழங்கியவர் தோழர் சிங்காரவேலர். இவர் தென்னிந்தியாவின் முதல் பெரும் கம்யூனிஸ்ட்.

அண்ணாமலையை களமிறக்கி விட்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர்கள் அப்பொழுது பிரிட்டிசாருக்கு பெட்டிசன் போட்டுக் கொண்டும், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டும் இருந்தனர். அவர்களின் வாரிசுகள் தான் இன்று ஏகடியம் பேசுகின்றனர்.

நாடு விடுதலை அடைந்தவுடன் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த மன்னர்களின் சமஸ்தானங்களையும் ஜமீன்தார்களையும் அகற்ற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்து அதனை நிறைவேற்றச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

வேளாண் உற்பத்தி வளர்ச்சிக்கும் தொழில்கள் தொடங்குவதற்கான மூலப்பொருள்கள் கிடைப்பதற்கும் பெரும் தடையாக இருந்த நிலப்பிரபுத்துவ ஒழிப்புக்காக நாடெங்கும் இயக்கம் நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி.

காலனிய அடிமைத்தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றால் தான் முன்னேற முடியும் என்பதற்காக உறுதியுடன் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நாடு விடுதலை பெற்ற பிறகும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் தொடர்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம்,  சேலம் உருக்காலை, பாரத் மிகுமின் நிறுவனம் (பி.எச்.இ.எல்) போன்றவற்றின் உருவாக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் உழைப்பு அளப்பரியது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

பழுப்பு நிலக்கரியால் (லிக்னைட்) எந்தப்  பயனும் இல்லை என ஏகாதிபத்திய நாடுகள் புரளிகளைக் கிளப்பிவிட்டன. அதை உண்மை என நம்பி இந்திய ஆட்சியாளர்களும் தயங்கினர். கம்யூனிஸ்ட் கட்சி விடவில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரியையும் சேலம் இரும்புத் தாதுவையும் ஆய்வு செய்திட கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்புமாறு வலியுறுத்தினர். இதற்காக சட்டப் பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தனர். அதன் பிறகு தான் தமிழ்நாடு அரசு வாதாட முன்வந்தது. அவற்றை ஆய்வு செய்ய கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டது. அங்கு பழுப்பு நிலக்கரியும் இரும்பு தாதுவும் பயன்படும் என ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

இப்படித்தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம்,  சேலம் உருக்காலை, பாரத் மிகுமின் நிறுவனம் (பி.எச்.இ.எல்) போன்றவை உருவாயின. அவை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டாலும் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகளுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெரும் பங்கு உண்டு.

இந்தியாவிலிருந்து பொறியாளர்களை அழைத்துச் சென்று பயிற்சியையும் தொழில்நுட்பத்தையும் சோவியத் ஒன்றியம் கற்றுக் கொடுத்தது. இதற்காக எந்த நிதியையும் சோவியத் ஒன்றியம் பெறவில்லை.

இப்படி இந்தியாவினுடைய வளர்ச்சிக்காக கம்யூனிஸ்டுகள் வாதாடிய, போராடிய, நிறைவேற்றச் செய்த திட்டங்கள் ஏராளம். அந்தத் திட்டங்களை நிறைவேற்றவும் செயல்படுத்தவும் உறுதுணையாக இருந்த கிழக்கு ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் கம்யூனிஸ்ட் நாடுகள்.

இவை பற்றி எல்லாம் எதுவும் தெரியாத, இந்தியாவின் வரலாற்றை அறியாத அண்ணாமலை போன்றவர்கள், போகிற போக்கில் புழுதி வாரி தூற்றுகிறார்கள். அதன் மூலம் தங்கள் மீது ஊடக வெளிச்சம் படாதா என கனவு காண்கிறார்கள்.

கம்யூனிசமும் கம்யூனிஸ்டுகளும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கானவர்கள். எந்த காலத்திலும் மனித சமூகத்தை பின்னுக்கு தள்ளும் பிற்போக்குகளை ஆதரிக்காதவர்கள். வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்கள் அல்ல செயல்படுத்திக் காட்டியவர்கள்.

வழிகாட்டிய சோவியத் ஒன்றியம்

மன்னர் ஆட்சியின் கீழ் முடை நாற்றமெடுத்து முடங்கிக் கிடந்த ரஷ்யா, சோவியத் ஒன்றியமாய் உலகுக்கே சுடர்விட்டு வழிகாட்டியது. இதற்கு காரணம் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிசமும்தான்.

ஜார் மன்னன் காலத்தில், ரஷ்யா உட்பட அந்த சாம்ராஜ்யமே பின்தங்கி இருந்தது. கொடூரமான அடக்குமுறை ஆட்சி. அதனைத் தகர்த்து 1917 அக்டோபரில் புரட்சி வெற்றி பெற்றது. சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) உருவானது.

அப்போது.. தொழில் துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என அத்தனை துறைகளிலும் ரஷ்யா பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்கள் 30 விழுக்காடுதான் இருந்தனர். அமெரிக்காவிலோ எழுத்தறிவு பெற்றவர்கள் 95 விழுக்காடு. அமெரிக்கர்களின் அன்றைய சராசரி வாழ்நாள் 47.3 ஆண்டுகள்; ரஷ்யாவில் 32 ஆண்டுகள். இவை அனைத்தையும் புரட்டிப் போட்டது புரட்சி.

அடுத்த 25 ஆண்டுகளில்.. ரஷ்யாவில் 80 லட்சமாக இருந்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2 கோடியே 5 லட்சமாக அதிகரித்தது. 56.6% இருந்த ரஷ்யாவின் எழுத்தறிவு 87.4% ஆக உயர்ந்தது. உஸ்பெக்கிஸ்தானில் 11.6%, கஸகஸ்தானில் 25.2% இருந்த எழுத்தறிவு, 78.7% மற்றும் 83.6 % ஆக அதிகரித்தது. 40 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியத்தின் எழுத்தறிவு 98.5 விழுக்காடாக உயர்ந்தது.

வேலையின்மை என்ற பெருங்கொடுமை துடைத்து எறியப்பட்டது. அனைவருக்கும் வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டது. விண்வெளியில் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அறிவியல் தொழில் நுட்பம், ஆற்றல், மருத்துவம், பொறியியல் என அத்தனை துறைகளிலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்து, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தொழில் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் ஒன்றியம் உயர்ந்தது. வேளாண் உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்தது.

அமெரிக்கா 100 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை, சோவியத் ரஷ்யா 25 ஆண்டுகளில் எட்டியது. இவை அனைத்தும் கம்யூனிஸ்டுகளால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள். அண்ணாமலை போன்ற ஆர்.எஸ்.எஸ் வார்ப்புகளுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தாலும் உண்மையைப் பேச மாட்டார்கள்.

பொருளாதார வல்லரசான சீனம்

ஆசியாவின் நோயாளி என ஏளனம் செய்யப்பட்ட சீனா, இன்றைக்கு அமெரிக்காவுக்கு அடுத்த பொருளாதார வல்லரசாக இருக்கிறது. இந்தியா விடுதலை பெற்றதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மக்கள் சீன குடியரசு உருவானது. ஏழ்மையும் வறுமையும் முதலீடுகள் இன்மையும் துரத்தின. அவற்றையெல்லாம் வென்று பெரும் சாதனைகளை நிகழ்த்தி காட்டியது மக்கள் சீன குடியரசு. குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை அடைந்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகமே முடங்கி கிடந்தது. எங்கே தங்களுக்கும் பரவி விடுமோ என அஞ்சி நடுங்கினர். அவற்றையும் மீறி உதவிகள் செய்வதற்கு பெரும் தொகைகளை கட்டணமாக பல நாடுகள் பெற்றுக் கொண்டன. இப்படி எதுவுமின்றி பாதிக்கப்பட்ட நாடுகள், கொரோனா தொற்றால் முடங்கிக் கிடக்கும் மக்கள் எங்கு இருக்கிறார்களோ அவர்களை தேடிச் சென்றனர் கியூபா மருத்துவர்கள். அச்சமின்றி சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார். அவர்களை வார்த்தெடுத்தது கம்யூனிசம்.

அண்ணாமலை போன்றவர்களை வார்த்தெடுத்தது ஆர்எஸ்எஸ். அந்த அமைப்பின் வரலாறு என்ன? வளர்ச்சிக்காக என்ன செய்தது? அதனிடம் பழமையை பாதுகாப்பதைத் தவிர வேறு என்ன கொள்கை உள்ளது?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

“கம்யூனிஸ்டுகளின் கோட்டை என்று சொல்லியே திருவாரூர் மாவட்டத்திற்கு எந்தத் தொழிலையும் கொண்டு வரவில்லை. எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை” என்று அங்கலாய்க்கிறார் திருவாளர் அண்ணாமலை.

காவிரி பாசன மாவட்டங்களின் பசுமையையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தக் கூடாது. வேளாண் உற்பத்தியை தடுக்கக் கூடாது என்பதற்காகத் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் காவிரிப் பாசன விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக கொண்டுவரப்பட்டது தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம்.

காவிரி பாசன விளைநிலங்களின் கீழ், ஆழத்தில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறது. மீத்தேன் நிறைந்துள்ளது. அவற்றை எடுக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகளுக்கு ஏலம் விட முயன்றது ஒன்றிய பாஜக அரசு. விளைநிலங்களும் விவசாயிகளும் அழிந்தாலும் பரவாயில்லை,  ஹைட்ரோ கார்பன் எடுத்தாக வேண்டும். கார்ப்பரேட்டுகள் லாபம் பெற்றாக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டது மோடி அரசு. அதனை விவசாயிகளின் போராட்டம் தான் முறியடித்தது. வேறு வழியின்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அங்கு எப்படி தொழிற்சாலைகளை கொண்டுவர முடியும்?

அண்ணாமலை இதனை அறியாமல் பேசுகிறாரா? கார்ப்பரேட்டுகள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கம்யூனிஸ்டுகள் உதவவில்லை என குற்றம் சாட்டுகிறாரா?

வாக்குறுதிகள் என்ன ஆயின?

விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தாரே, அது என்ன ஆயிற்று? அதனை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? விவசாயிகளை உயிரோடு புதைக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கு மேல் போராடித் தானே அவர்களால் முறியடிக்க முடிந்தது. வேளாண் வளர்ச்சிக்கு, விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு மோடி அரசு செய்த சாதனைகள் என்ன?  பட்டியலிட முடியுமா?

தமிழ்நாட்டிலேயே தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பது கோவை. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்படும் அளவுக்கு பஞ்சாலைகள் – டெக்ஸ்டைல் மில்கள் – நிறைந்திருந்தன. இன்று எஞ்சினியரிங், பம்ப்செட், ஆயத்த ஆடை உற்பத்தி என வளர்ச்சியும் மாற்றமும் அடைந்திருக்கிறது. இப்பகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் தானே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பார்வதி கிருஷ்ணன், கே.சுப்பராயன்,  பி.ஆர்.நடராஜன் ஆகிய கம்யூனிஸ்டுகள் தலா இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு முன்பு ரமணி, பாலதண்டாயுதம் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள். வளர்ச்சிக்கு எதிரானவர்களாக கம்யூனிஸ்டுகள் இருந்தால், இங்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்க முடியுமா?

நூல் விலையை குறையுங்கள். பஞ்சு நூலுக்கு விதிக்கும் ஜிஎஸ்டி வரியை குறையுங்கள் என்று திருப்பூர் கோவை தொழிலதிபர்கள் கெஞ்சினார்கள். போராடினார்கள்.  ஒன்றிய பாஜக அரசின் செவிகளுக்கு கேட்டதா?

அதானிகளுக்கு தாரைவார்ப்பது தான் வளர்ச்சியா?

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரித்துவிட்டது. பொருளாதாரம் உயர்ந்து விட்டது” என்று அண்ணாமலை பீற்றுகிறார். இந்தியாவில் பெரும் உழைப்பில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் தாரைவார்ப்பது தான் வளர்ச்சியா?

வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.36 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதி தொழில்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. உலகப் பொருளாதாரத்தில் 10 விழுக்காடு இருந்த இந்தியாவின் பங்களிப்பு, 3 விழுக்காடாக சரிந்து விட்டது. கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகை, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என வாரி வழங்கி… அதானிகளும் அம்பானிகளும் வீங்கிப் போய் உள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தனிநபர் வருமானம், குடும்ப சேமிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதைத்தான் அண்ணாமலை வளர்ச்சி என்கிறாரா? கார்ப்பரேட்டுகளும் அதானிகளும் ஊதிப் பெருப்பது வளர்ச்சி அல்ல. பெரும் சுரண்டல். கம்யூனிஸ்டுகளால் இந்த வளர்ச்சியை ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

சமூகம் முன்னேற வேண்டும். மனித குலம் விடுதலை பெற வேண்டும். இதற்காக கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டே இருப்பார்கள். அவதூறுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்.

கட்டுரையாளர்:
வ.மணிமாறன்
பத்திரிகையாளர்
manimaran2@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button