இந்தியாகட்டுரைகள்

டெல்லி காற்று மாசு பிரச்சனை: காரணங்களும் விளைவுகளும்

அருண் நெடுஞ்செழியன்

தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு பூதாகரமான பிரச்சனையாக மீண்டும் கிளம்பியுள்ளது. டெல்லி மாநகரில் படிக்கும் பள்ளி மாணவர்களின் உடல் நலன் கருதி, டெல்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது அம்மாநில அரசு.

மேலும் மாநகருக்குள் வாகனங்கள் நுழைவதற்கும்  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு, ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை  பதிவெண் இலக்கம் அடிப்படையில், சுழற்சி முறையில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறது டெல்லி மாநில அரசு.

அதிகரிக்கும் காற்று மாசு

உலக சுகாதர அமைப்பானது, ஆரோக்கியமான சுவாசத்திற்கு ஏற்ற காற்றின் தரம் குறித்த அளவீடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் வசிக்கும் பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index – AQI) 50க்குள் இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் கடந்த  4 ஆம்  தேதி புள்ளிவிவரப்படி காற்றின் தரக் குறியீடு 415 ஆக இருந்தது. அடுத்த நாளில் 460 ஆக அதிகரித்தது. சில இடங்களில் காற்று மாசு அளவு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள  வரம்புகளைக் கடந்து கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாக உள்ளது. டெல்லியில் அதிகரிக்கின்ற காற்று மாசால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் பிரச்சனை அதிகரித்து வருகின்றன. அதிக அளவிலான காற்று மாசு நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்து விளைவிப்பதோடு  நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காற்று மாசுக்கான காரணம் என்ன?

தலைநகர் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நெல் அறுவடைப் பணிகள் முடிந்த பின்னர், வயல் காட்டை எரிப்பதும்  காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாறுபாடும் டெல்லியின் காற்று மாசு பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகின்றன.

நாள்தோறும் அதிகரித்து வரும் சூழல் நெருக்கடிக்கு பலதரப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகளும், நகர்ப்புறம் சார்ந்த மூலதன குவிப்பின் பெருக்கமும் நகரத்தின் மக்கள் திரட்சியும் காரணமாக இருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணற்ற நச்சு வேதியியல் பொருட்களின் கழிவுகள், சாயப்பட்டறைகளில் வெளியேற்றப்படும் கழிவுகள், ஆலைக்கழிவுகள், வான்வெளியில் டன் கணக்கில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற எண்ணற்ற கழிவுகளால் இயற்கை கட்டமைப்பை மூச்சுத் திணறவைக்கும் அளவுக்கு முதலாளிய உற்பத்தி முறை மாற்றியுள்ளது. நாம் மீண்டு வரமுடியாத ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சனையில் சிக்கியுள்ளோம் என்பதை யாரும் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தொழிற்சாலைகளிலிருந்து வளிமண்டலத்தில் இதுவரை  வெளியேற்றப்பட்ட  பசுமைக்குடில் வாயுக்களால் வெப்ப மயமான இப்புவிக்கோளில், பனிமலைகள்  உருகி  பசிபிக் கடலில் உள்ள சிறு தீவுகள் மூழ்கத் தொடங்கிவிட்டன. ஆப்பிரிக்க நாடுகளில் பாலைத் திணைகள் உருவாகி கடும் வறட்சியை தோற்றுவிக்கிறது. பல்லுயிரியம் பல நாடுகளில் வேகமாக அழிந்து வருகிறது. பருவம் தப்பிய மழைப் பொழிவும் வறட்சியும் வெள்ளமும் சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சூழ்ந்த மழை – வெள்ளமும் கேரள வெள்ளமும் தற்போதைய காற்று மாசும் பெரும் சூழலியல் அழிவை முன் உணர்த்துகின்றன. பிரச்சனையின் ஆணிவேர், சமகால முதலாளித்துவ அமைப்பில் இருக்கும்போது, சில முதலாளித்துவ ஆதரவு அறிவுஜீவிகள் இதனை தனிநபர் பிரச்சனையாக மாற்றி தீர்வையும் தனி நபர் தீர்வாக மடைமாற்றிவிடுகிறார்கள்.

ஃபேஷன் தீர்வுகள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்து தமிழ் திசை நாளிதழில் “பூமியைக் காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில் திரு கே.என். ராமசந்திரன் அவர்கள், புவிகோளம் எதிர்கொள்கிற அபாயங்களை பட்டியலிட்டு கீழ்வரும் வகையில் அதற்கான தீர்வை முன்வைக்கிறார்.

“சென்னையில் கார் தொழிற்சாலைகள் அமைந்ததும் நடுத்தர வருமானக்காரர்கள் கூட கார்களை வாங்கி ஓட்டுவதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமல்ல. நம் நாட்டின் பெருநகரங்கள் எல்லாவற்றிலும் கார்களும் பஸ்களும் லாரிகளும் நீராவி இன்ஜின்களும் கரிமவாயுக்கள் கலந்த புகையை ஏராளமாக வெளிவிடுகின்றன. மேலை நாடுகளில் கடைபிடிக்கப்படும் வாகனப் பராமரிப்பு உத்திகள் இந்தியாவில் இன்னமும் முழு அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும்போது இன்ஜின்களை ஓடவிடுவது, திடீர் திடீரென்று வேகத்தைக் கூட்டி சீறிப்பாய்வது போன்றவற்றால் எரிபொருள் வீணாவதுடன் காற்றும் மாசுபடுகிறது. அதைச் சுவாசிக்கிற மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகளும் இதயக் கோளாறுகளும் உண்டாகின்றன.

ஒவ்வொரு தனி மனிதரும் உலகின் சூழலில் தோன்றத் தொடங்கியிருக்கிற சீரழிவைத் தடுத்து நிறுத்தச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; பூமியைக் காப்பாற்றுங்கள்!” என எழுதுகிறார்.

பொதுவாக, சிக்னலில் வாகனத்தை அணைத்து, எரிபொருளை சேமிப்பது, குண்டு பல்புகளை சிஎஃப்எல் பல்புகளாக மாற்றி மின் சிக்கனத்தை கடைபிடிப்பது, பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மிதிவண்டி ஓட்டுகிற வழக்கத்திற்கு மாறக் கோருவது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது  என தனிநபர்களின் நடத்தை பண்புகளை சார்ந்த சுற்றுச்சூழல் தீர்வுகள் சிலரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பகுதியளவு உண்மை இருந்தாலும், அதிகரிக்கின்ற  காற்று மாசு பிரச்சனைக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும் எந்தளவுக்குப் பங்காற்ற முடியும் என்பதை கருதிப் பார்க்கவேண்டும்? மிஞ்சிப்போனல் ஒரு  விழுக்காடு அளவு கூட தனிநபர் சிக்கனங்களால் காற்று மாசையும் புவிவெப்பமயமாக்கலை குறைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

தானுந்து பயன்பாடு அதிகரித்து விட்டது. அதனால் காற்று  மாசடைகிறது என வாதிடுபவர்கள், வாகனங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் திடுமென அதிகரிப்பதற்கான காரணம் என்ன? மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துவிட்டதா? நகரங்களில் மக்கள் ஏன் அதிகமாக குவிகின்றனர்? நகரங்களுக்கு மக்களை நெட்டித்தல்லுகிற ஊக்கி எது? வாகன சந்தைப் பரவலுக்கு என்ன காரணம்  போன்ற உட்தொடர்புகளை, நிகழ்வுக்கு தொடர்புடைய அம்சங்களையும், நிகழ்வின் சாரம்சத்தையும் பகுப்பாயமால் “காற்று மாசு” என்கிற வெளிப்படை நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான தனிநபர் தீர்வுகளை வேகமாக முன்வைக்கின்றனர்.

புவி வெப்பமயமாக்கலுக்கு காரணமாக உள்ள மூன்றில் இரண்டு பங்கு  பசுமைக்குடில் வாயுக்களை உலகின் முன்னணி 90 கார்பரேட் நிறுவனங்களே வெளிவிடுகின்றன என்பதை பல அறிவியல் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. புதை படிம எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனங்களுக்குச் சார்பான அரசுக் கொள்கைகளை மாற்றி அமைக்காமல், மேற்சொன்ன தனிநபர் தீர்வுகள் போகாத ஊருக்கு வழி சொன்ன கதையை ஒத்துள்ளது.

எந்தவொரு சமூகப் பிரச்சனையையும் அரசியல் பொருளாதார கண்ணோட்டத்திலும் வர்க்க பார்வையிலும் அணுகத் தவறுகிற அல்லது  அணுக மறுக்கிற வாதங்களை முன்வைப்பவர்கள், சிக்கலை தனிநபர் ஒழுக்கவாதத்தோடு தொடர்புபடுத்துவது என்பது, பொது எதிரியான கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது தற்செயலானது அல்ல. அதனால்தான் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரம் நடுகிறோம், குப்பைகளை அள்ளுகிறோம் என அரசிடம் சூழல் விருது வாங்குகிறார்கள்.

நிலவுகிற உலகமய தாராளமய தனியார்மய சகாப்தமானது நகர்ப்புறம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கிறது. அதிகரிக்கின்ற நகர்ப்புற முதலீடுகள், பிரம்மாண்ட நகரங்களை உருவாக்குகிறது. ஆனால் இந்த நவீனத்துவ நகரத்தில் வசிக்கிற மனிதர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதில் அரசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் துளி அளவு கூட அக்கறை இல்லை என்பதே டெல்லி காற்று மாசு பிரச்சனை உணர்த்துகிற பாடமாகும்.

கட்டுரையாளர்:
அருண் நெடுஞ்செழியன்
<arunpyr@gmail.com>

Related Articles

One Comment

  1. இந்த பரிசோதனை பற்றி உங்கள் போர் உணர்ந்தேன். காற்று மாசு மீறிய சித்தம் மிக முக்கியம். எங்கள் மாநிலங்களில் வாகனங்கள் மீண்டும் வாகனங்கள் ஆகின்றன, அதிகரிக்கும் கார்பன் இன்ஜின்கள் மற்றும் பசுமை பொருட்கள் அனைத்தும் காரணமாக காற்றின் தரம் அதிகரிக்கின்றன. இது வானிலையில் மூச்சை பாதிக்குகின்ற மக்களுக்கு சிக்கல் உண்டு. எங்கள் பெருநகரங்களில் வாகன பராமரிப்பு மற்றும் பசுமை குவிப்பில் மேற்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன, மற்றும் அதிக அளவிலும் கார்பன் இன்ஜின்கள் இயக்கத்தில் இருக்குகின்றன. அதன் விளைவுகளை உணர்ந்து வாழ்க்கையில் செல்ல வேண்டும். பழைய மாபெரும் சுற்றுச்சூழலை மீட்க மறுமொழியும் மேம்படுத்த வேண்டும். வாழ்க்கை முதல் வருடம் முதல் வருடம் வரை எங்கள் அனைத்து நடக்களும் கவனிக்கப்பட வேண்டும். 🌍🚗🌿😷 #பரிசோதனை #பருவம் #காற்றுமாசு #பசுமை #அனுபவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button