ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு -3
இரண்டாவது தொழிற்சாலை சட்டம்
1891ல் கொண்டுவரப்பட்ட இரண்டாவது தொழிற்சாலைச் சட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் வயது வரம்பு பேசப்படுகிறது. 7 வயதிலிருந்தே குழந்தைகளை வேலைக்கு சேர்க்கலாம் என்ற வழக்கத்தை மாற்றி, இனி 9 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளைத்தான் வேலைக்கு அமர்த்த வேண்டும். 9 வயது முதல் 14 வயது வரையில் உள்ள குழந்தைகளிடம் எட்டு மணிநேரம் தான் வேலை வாங்க வேண்டும். அதிலும் இரவு நேர வேலை தரக் கூடாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
பெரியவர்களுக்கான 18 மணி நேர வேலை, 16 மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எட்டு மணிநேர வேலை என்பதால், அதை ‘அரை வேலை’ என்றழைத்தனர். இந்தக் குழந்தைகளுக்கு ‘மேஸ்திரிகள்’ மிட்டாய் கொடுத்து வேலைக்கு அழைப்பார்களாம். அப்படி மிட்டாய் பெற்று ‘அரை வேலை’க்குப் போன மூத்த தோழர்களை நானே பார்த்திருக்கிறேன். சர்வீஸ் பார்த்தால் 45, 46 வருஷம் தாண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு இரவு நேர வேலை கிடையாது எனச் சொல்லி, 11 மணி நேர வேலை, இடையில் ஒன்றரை மணி நேர இடைவேளை ஆக 12 1/2 மணி என்று சட்டம் மாற்றியது. வாரம் ஒருநாள் விடுமுறை என்பது ஏற்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை ஆண்களுக்கு அரை மணிநேரம் அனுமதிக்கப்பட்டது
ஆண், பெண் இருபாலார்க்கும் தனித் தனி கழிவறை வேண்டும். ஆலைகளுக்குள் நல்ல காற்றும் வெளிச்சமும் வரவேண்டும். எந்திரங்களுக்கு இடையில் போதிய இடம் இருக்க வேண்டும். சுவர்களுக்கு வெள்ளைடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
50 பேருக்கு மேல் வேலை செய்யும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
தமது ஒற்றுமையாலும் போராட்டத்தாலும் வெற்றி கண்ட தொழிலாளர்கள், இன்னும் களைய வேண்டிய கோரிக்கைகள் உள்ளன என்றனர். அதனால் போராட்டங்களில் இறங்கினர். இதனை விளைவாக 1892ல் தொழிலாளர்களுக்கான ‘ராயல் கமிஷன்’ ஒன்று அமைக்கப்பட்டது. 1906ல் பஞ்சாலைகள் மற்றும் அதன் தொழிலாளர்கள் குறித்த ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது. (மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் ஒவ்வொரு எந்திரமும் பெல்ட் போட்டு ஓட்டப்படுவதைக் கவனிக்கவும்)
(இன்னும் வரும்)
கட்டுரையாளர்:
டி.எம்.மூர்த்தி
ஜனசக்தி ஆசிரியர்
ஏஐடியுசி தேசியச் செயலாளர்