நிகழ்கால, எதிர்காலக் களங்களில் போரிட, கடந்த காலத்தில் எவ்வாறு? எதற்காகப் போராடி இருக்கிறோம்? என்று தெளியும் வரலாற்று அறிவு, அனுபவப் பாடமும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும்.
1850ல் இருந்தே இந்தியாவில் எந்திரத் தொழில் உற்பத்தி தொடங்கி விட்டது. பஞ்சாலைதான் பெரிய தொழில். இயல்பாகவே சாதாரணக் குடும்பங்களில் இருந்துதான் வேலைக்குச் சென்றனர். உடல் உழைப்பு பிறவியிலேயே விதிக்கப்பட்டது என்ற மனுசாஸ்திர முறையினால் ஒடுக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் அல்லவா! பிரிட்டிஷ் பஞ்சாலை முதலாளிகளின் அளவற்ற சுரண்டல், பண்ணைக் கூலியாய்ப் பட்ட கொடுமைகளை விடக் குறைவானதாக தொழிலாளர்கள் உணர்ந்தனர் போலும். வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
1881ல் முதலாவது தொழிற்சாலைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தைக் கொண்டுவர வலியுறுத்தியவர்கள் தொழிலாளர்கள் அல்லர். பிரிட்டிஷ் முதலாளிகள்.
இந்தியப் பஞ்சாலைகளை நடத்தியவர்கள், பெரும்பாலும் பிரிட்டிஷ் முதலாளிகள்தான். ஆனால் இந்தியத் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்து, குறைவான கூலியை வாங்கிக் கொண்டனர். அவர்கள் உற்பத்தி செய்த துணியின் அடக்க விலை மிக மிக குறைவானது. பிரிட்டனிலிருந்து வந்த துணியைவிட மலிவாக விற்றார்கள். இதனால் பிரிட்டனில் உற்பத்தியான துணிகள் தேங்கிவிட்டன.
இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகளின் அடக்கவிலையை அதிகரிக்க வேண்டும் என்பதால், இந்தியத் தொழிலாளர்களின் வேலைநேரத்தைக் குறைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு அந்நாட்டு முதலாளிகள் நெருக்கடி தந்தார்கள். இதனால் முதல் தொழிற்சாலை சட்டம் கொண்டுவரப்பட்டது.
முதலாளி- தொழிலாளி இடையே அரசு தலையிட்டு வேலை நிலைமைகளில் மாற்றம் கொண்டு வரமுடியும் என்பதை இந்தச் சட்டம் தொழிலாளர்களுக்கு உணர்த்தியது. அதனால் அவர்கள் தமக்கிடையே ஒற்றுமையை, ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தொடங்கினர். முதல் உருவாக்கம்… ‘பாம்பே மில்ஹாண்ட்ஸ் அசோஷியேஸன்’ (அவர்கள் தங்களை தொழிலாளி என்று உணரவில்லை என்பதையே இந்த ‘மில் ஹாண்ட்ஸ்’ பெயர் வெளிப்படுத்துகிறது)
இந்த ஒற்றுமையை ஏற்படுத்தி தலைமை தாங்கியவர் ஒரு மில் தொழிலாளி. அவரது பெயர் நாராயண் மேகாஜி லோகாண்டே.
யார் இந்த லோகாண்டே?
லோகாண்டே தொழிற்சங்கத் தலைவர் மட்டுமல்ல; சாதிய எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்புப் போராளி, பத்திரிகையாளர், பிராமணரல்லாத மக்களை பொருளாதார, சமூகநீதி அடிப்படையில் அணி திரட்டிய தலைவர் என பன்முகம் கொண்டவர்.
1848 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டம், கன்ஹெர்சரில் ஃபுல்மாலியில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி வரை படித்தார். அவருடைய குடும்பம் பூ வியாபாரம் செய்து பிழைத்தது. ரயில்வே, தபால் துறைகளில் பணிபுரிந்து விட்டு, 1870ல் பம்பாய், மாண்டவி பஞ்சாலையில் ஸ்டோர் கீப்பராக வேலைக்குச் சேர்ந்தார்.
அவருக்கு சமூக சீர்திருத்த முன்னோடியும், செயற்பாட்டாளருமான ஜோதிபா பூலே தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக 1874ல் தொழிலாளர்கள் மத்தியில் பூலேயின் தொடர் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார். சாவித்திரிபாய் பூலே நடத்திய மாலை நேர பள்ளியில் பஞ்சாலைகளின் குழந்தை தொழிலாளர்களும், தொழிலாளர்களும் கல்வி கற்றனர். ஜோதிபா பூலே அவர்களின் வாரிசு என்றே அவர் கருதப்பட்டார்.
1880 ஆம் ஆண்டு லோகாண்டே, இந்தியாவின் முதல் தொழிலாளர் வார இதழான ‘தீனபந்து’ (ஏழைகளின் உறவினர்) பத்திரிகையை ஏற்று நடத்த தொடங்கினார். நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளையும், சமூக நீதியை ஆதரித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளை முன்வைத்தும், தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமையை வலியுறுத்தியும் தீனபந்து வெளிவந்தது. அதில், வகுப்புவாதத்திற்கு எதிராகவும் மதநல்லிணக்கம் பேணியும் இந்து -முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளிவந்தன.
பாலுறவுக்கு இசைவு தெரிவிப்பதற்கான பெண்களின் வயதை 10 லிருந்து 12 ஆக உயர்த்தி பிரிட்டிஷ் அரசு சட்டம் இயற்றியது. திலகர் தலைமையிலான பழமைவாதிகள் இந்த மசோதாவுக்கு எதிராகப் போராடினர். ஆனால் லோகாண்டேயின் ‘சத்திய சோதக் சமாஜ்’ மசோதாவுக்கு ஆதரவாக மக்களை அணி திரட்டியது.
1881ல் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் சட்டத்தில் உள்ள பல்வேறு குறைகள் நீக்கப்பட வேண்டுமென தொழிலாளர்கள் விரும்பினர். இது அவர்களை சங்கமாக அணிதிரட்ட வாய்ப்பாக அமைந்தது. 1884 செப்டம்பர் 23 அன்று பரேலில் “பம்பாய் மில் ஹேண்ட்ஸ் அசோசியேசன்” என்ற பெயரில் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை லோகாண்டே நிறுவினார். அதற்கு முன்னதாகவே பஞ்சாலையில் பார்த்து வந்த ஸ்டோர் கீப்பர் வேலையில் இருந்து அவர் விலகினார்.
(இன்னும் வரும்)