“ஆளுநர் பதவிக்குச் செல்லும் ஓய்வு பெற்ற நீதிபதிகளால், நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை பாதிக்கும்”
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேச்சு
கேரள சட்டமன்ற சர்வதேச புத்தகக் கண்காட்சி(KLIBF) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கருத்தரங்கில், ‘மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் குடிமக்களின் பெருமையைப் பாதுகாப்பதிலும் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உரையாற்றினார்.
அப்போது, “நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு எந்தப் பொறுப்புகளை ஏற்காமல் இருப்பதற்கான கூலிங் ஆஃப் பீரியட் இருக்க வேண்டும். நீதிபதிகள் ஓய்வுபெறும் முன் அளித்த தீர்ப்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அயோத்தி தீர்ப்பு கேள்விக்குறியாவதைப் பார்த்தோம். ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் ஆளுநராகவோ நாடாளுமன்றத்திற்கோ செல்கிறார்கள். இது நீதிமன்றங்களின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கும் செயல். நீதிமன்றத்தின் மீது சாமானியனுக்கு நம்பிக்கை உள்ளது. கடைசி முயற்சியாக அவர்கள் செல்வதற்கு நீதிமன்றம் தான் உள்ளது. அதைவிட்டால் வேறு வழியில்லை. நமது நீதித்துறையில் சமூகப் பிரதிநிதித்துவம் தேவை. தற்போது எத்தனை தலித் மற்றும் பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள் என்பதை நாம் சரிபார்க்க வேண்டும்.
ஆளுநர்கள் தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என்ற மமதையில் உள்ளனர். இந்த ஆளுநர்கள் அரசாங்கத்திற்கு மேல் இல்லை. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, குடியரசுத்தலைவர் விருப்பம் உள்ளவர்களை ஆளுநர்களாக நியமிக்கலாம். இந்த ஆளுநர் பதவி தேவையா என்று யோசிக்க வேண்டும். ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. அவர்கள் அரசியலமைப்பை மதிக்க வேண்டும்” இவ்வாறு டி.ராஜா பேசினார்.