அறிக்கைகள்
விடுதலைப் போராட்ட வீரர் வி.இராதாகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப் போராட்ட வீரர் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் – விடுதலைப் போராட்ட வீரர் வி.இராதாகிருஷ்ணன் (102) அம்பத்தூர் – நியூ செஞ்சுரி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வி.இராதாகிருஷ்ணன் கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் வணிக குடும்பத்தில் பிறந்தவர். பள்ளியில் பயின்று வந்த காலத்தில் தீவிரமடைந்த விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, ஈடுபட தொடங்கியவர். பல முறை சிறை தண்டனை பெற்று பொள்ளாச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட பல சிறைகளில் இருந்தவர்.
கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணி தலைவர்கள் கே. பாலதண்டாயுதம், சி.ஏ.பாலன், ஆர்.கே.கண்ணன், ஆர்.கே.பாண்டுரங்கன் ஆகியோருடன் ஏற்பட்ட தோழமை உறவால் கம்யூனிஸ்டு கொள்கை வழியை தேர்வு செய்தவர். தனது இறுதி மூச்சு வரை கொள்கை வழி பயணத்தை உறுதியுடன் மேற்கொண்டவர்.
ஆரம்ப காலத்தில் கட்சி தலைவர்கள். பி.சி.ஜோஷி, அஜாய் கோஷ், எஸ்.ஏ.டாங்கே. என்.கே.கிருஷ்ணன், ராஜேஸ்வர ராவ், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், உரையை மொழியாக்கம் செய்தவர். அப்போது கட்சியில் இருந்த மற்றொரு இராதாகிருஷ்ணன் இவரை விட உயரமாக இருந்ததால் இவரை ‘சோட்டா’ இராதா என அழைத்து வந்தனர். அந்த பெயர் நிலைத்து விட்டது.
ஜனசக்தி இதழில் ஆரம்ப காலம் முதல் பல பத்தாண்டுகள் மொழிபெயர்ப்பாளராக தொடர்ந்து பணியாற்றியவர். பல இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளித்து உதவியவர். சோவியத் நாடு அலுவலகத்தில் சோவியத் பலகணி மாத இதழ் பொறுப்பாளராக பணிபுரிந்தவர்.
ரயில்வே தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த மோட்சமேரி இவரது வாழ்க்கை இணையர். சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கீதா, டாக்டர் சாந்தி, பாரதி என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
வரலாற்று பதிவுகளின் களஞ்சியமாக திகழ்ந்த விடுதலை போராட்ட வீரர் வி.ராதாகிருஷ்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் செலுத்தி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.