அறிக்கைகள்

பிரதமர் மோடி பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

சமூக வாழ்வில் நல்லிணக்கம் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டிய பிரதமர் மோடி, அதற்கு எதிராகப் பேசி வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு..

மத்திய பிரதேசத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக” குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் பேச்சு சனாதன சம்பிரதாய நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்ட மக்களுக்கு மதவெறியூட்டும், அவரது மலிவான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை பிரதமர் காற்றில் பறக்க விட்டுள்ளார். சமய நம்பிக்கை என்பது மனிதர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஒருவர் எந்த ஒரு சமயத்தையும் தேர்வு செய்து, அதனை வழிபட்டு வருவதற்கு நமது அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் அரசு எந்த மதத்தையும் சாராத, மதச்சார்பற்ற பண்பினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வர வேண்டும் என வழிகாட்டுகிறது. பிரதமர் பொறுப்பு ஏற்கும் முன்பு சட்டப்படி ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும், ரகசிய காப்புப் பிரமாணத்துக்கும் மாறாக பிரதமர் அரசு நிகழ்ச்சியை கட்சி அரசியல் பரப்புரை மேடையாக்கி, எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துவது அவரது பொறுப்புக்கு உகந்த செயலாகாது.

கடந்த ஜூலை மாதம் பீகார் தலைநகரில் தொடங்கிய எதிர்கட்சிகள் ஒற்றுமை நாளொரு மேனியும், பொழுதொரு  வண்ணமும் வலுப்பெற்று, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகிறது. பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்களின் கும்பல் கலாச்சாரத்துக்கு எதிராகவும் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத எதிர்ப்பு உருவாகி இருப்பதால், மக்களின் கவனத்தை திசைதிருப்பி விடும் நோக்கில், சனாதன நம்பிக்கையாளர்களை “இண்டியா” கூட்டணிக்கு எதிராகத் தூண்டி விடும் பிரதமர் மோடியின் செயலை நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அண்மையில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்“ என்ற கருப்பொருள் வழங்கியதாகப் பெருமைப்பட்ட பிரதமர், இந்தியாவில் மக்கள் அனைவரும் சமமான உரிமைகளுடன் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து வருவதாக பேசினார். ஆனால் இங்கு சமூகத்தை பிளவுபடுத்தும் சனாதனத்தை பாதுகாக்க சூளுரைக்கிறார். நாட்டின் பிரதமர் இரட்டை நாக்கில் பேசுவதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வெளிப்படுத்தும். சமூக வாழ்வில் நல்லிணக்கம் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டிய பிரதமர் மோடி, அதற்கு எதிராக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button