இரண்டாம் உலகப் போருக்கு காரண கர்த்தாவாக திகழ்ந்து, லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த உலகக் கொடூரன் ஹிட்லரை அறிவீர்கள். அந்த கொடுமைக்கார ஹிட்லருக்கு உடனிருந்து உதவியவன் தான் கோயபல்ஸ். அவன் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பொய்யையே தொழிலாகக் கொண்ட நபர்களைப் பார்த்து கோயபல்சையும் மிஞ்சிடுவான் என்று கூறுவார்கள்.
பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவராக கொலுவீற்றிருக்கும் திருவாளர் அண்ணாமலை – வெறும் அண்ணாமலை அல்ல – ஐபிஎஸ் படித்துத் தேறிய அறிவாளி.
கர்நாடக மாநிலத்தில் அதிகாரியாகப் பணியாற்றி – பதவியைக் துறந்து, பாஜகவில் இணைந்து – கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவராவார். தோல்விக்குப் பரிசாக, மக்கள் நிராகரித்ததற்குப் பரிசாக, அக்கட்சி அவரை மாநிலத் தலைவராக நியமனம் செய்துள்ளது.
மோடி – அமித்ஷா கூட்டணிக்கு அண்ணாமலை போன்ற அறிவாளிகள்தான் தேவைப்படுகின்றார்கள்.
தான் படித்த படிப்புக்குரிய மதிப்பளித்து செயல்பட வேண்டியவர், சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்ட காரணத்தால் திருவிழா கூட்டத் திருடர்களுக்குத் தலைமை தாங்கி செயல்படுகின்றார்.
காவல்துறை அதிகாரிகள் என்றால் சமூக விரோதிகளைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து உண்மைகளைப் பெறக்கூடிய வல்லமை வாய்ந்திட்ட மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் ஐபிஎஸ் படித்த அண்ணாமலையோ திரும்பத் திரும்ப பொய் ஒன்றையே கக்கி, தான் ஒரு கோயபல்ஸ் என்பதை நிரூபணம் செய்து வருகின்றார்.
ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூடம் கற்றுத் தந்திட்ட பாடத்தை, பொய் என்கிற மாமந்திரத்தை மனப்பாடம் செய்து பிசிறின்றிப் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் பரபரப்பு அரசியல் பேசி, தன்னிகரில்லா தலைவராகத் திகழ்ந்திட வேண்டுமென விரும்புகிறார். ஊழலுக்கு எதிரானவன் என மார்தட்டுகிறார். யார் ஊழல் செய்தாலும் எதிர்ப்பேன் என்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்தும் குரைப்பேன் என்கிறார். ஜெயலலிதாவுக்கு நான் சமமானவன் என்று சவால் விடுகிறார். பின்னர் இவைகளை எல்லாம் வசதியாக மறந்தும் விடுகின்றார்.
பாதயாத்திரை என்றார். மிகுந்த சுகத்தோடு பஸ் யாத்திரை நடத்துகின்றார். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு பாஜக தான் தலைமை தாங்கும், இதனை ஏற்கவில்லை எனில் கூட்டணி இல்லை என்றார். பின்னர் யார் தலைமை என்பதனை தேசியத் தலைமை முடிவு செய்யும் என்கின்றார்.
காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாகப் பேசி பிழைப்பைத் தொடர்கின்றார். தான் என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம், என்ன நோக்கத்திற்காகப் பேசுகிறோம் என்று அறியாத, பிறர் புரிய முடியாத வகையில் ஒரு குடிகாரனை மிஞ்சும் பேச்சாக உள்ளது அண்ணாமலையில் உளறல்கள்.
கொடநாடு பங்களா, காபி தோட்டம், தொழிற்சாலை அனைத்தும் செல்வி ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என்பது எவரும் அறியாத புதிர் அல்ல. இப்புதிரில் அடங்கியுள்ள பங்களா என்பது வெற்று பங்களா அல்ல – மாண்புமிகு முதலமைச்சரின் முகாம் அலுவலகம் என்பதுதான் மிக முக்கியமானது.
ஜெயலலிதா அவர்கள் சென்னையின் வெப்பத்தைத் தாங்க முடியாத காலத்தில் கொடநாடு பங்களாவில் தங்கிப் பணியாற்றுவார்.
சென்னை கோட்டையில் இருந்து அன்றாடம் கோப்புகளை சுமந்து கொண்டு, அதிகாரிகள் விமானத்தில் பறந்து கொடநாடு பங்களாவுக்கு எடுத்துச் செல்வார்கள். அவற்றில் எத்தனை திரும்பவும் கோட்டைக்கு வந்தன என்பது எவருக்கும் தெரியாது.
அரசின் கோப்புகள், அவரது சொந்த ஆவணங்கள் மற்றும் இதர, இதர எத்தனையோ மர்மங்களைக் கொடநாடு பங்களா அடைக்கோழி போல் பாதுகாத்து வந்தது.
அத்தகைய பங்களாவில் கொள்ளை நடந்தது. அதனைக் கண்ட காவலரும் கொல்லப்பட்டார். ஜெயலலிதாவின் கார் டிரைவரும் மர்மமான முறையில் மரணித்தார்.
கார் டிரைவரின் சகோதரர், இவற்றையெல்லாம் செய்யச் சொன்னது எடப்பாடி பழனிச்சாமி தான் என எனது தம்பி கூறினான் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் கொள்ளையும், கொலையும் நடந்தது குறித்து யோக்கியர் அண்ணாமலை வாய் திறக்க மறுத்து மவுனம் சாதிப்பது ஏன்?
தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்ட குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், குட்காவை தங்கு தடையின்றி விற்பனை செய்திட யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற முழு விவரங்களும் உள்ளன. அன்றைய அதிமுக அமைச்சர் பெருமக்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ஊழல் முறைகேடு, பணப் பரிவர்த்தனை குறித்து, ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட யோக்கியவான் அண்ணாமலை பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்?
நீட் நுழைவுத் தேர்வுக்கு அஞ்சி பல பேர் மரணம் அடையக் காரணமாக இருந்த முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின், இரண்டாவது குற்றவாளி உதயநிதி ஸ்டாலின் என குற்றம்சாட்டும் அண்ணாமலை அறிந்து பேசுகிறாரா? அறியாமல் உளறுகிறாரா?
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் டெல்லிக்குப் பறந்து, பறந்து சென்று பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து விதிவிலக்கு கோரி வந்தனர்.
ஒவ்வொரு முறையும் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து விட்டு புன்முறுவல் பூக்க பத்திரிகையாளர்களை சந்தித்து, பிரதமரைப் பார்த்தோம்; உள்துறை அமைச்சரைப் பார்த்தோம்; அவரைப் பார்த்தோம்; இவரைப் பார்த்தோம்; விதிவிலக்கு நிச்சயமாக கிடைத்துவிடும் என்று பேட்டியளித்தனர்.
இன்றைய ஒன்றிய நிதியமைச்சர் அன்றைய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் நிறைவேற்றியது போல், நீட் நுழைவுத் தேர்வுக்கும் ஓர் அவசரச் சட்டம் பேரவையில் நிறைவேற்றுங்கள். விதிவிலக்கு வழங்கி விடுகின்றோம் என்றார்.
ஆனால் அடுத்த நாள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாக வாதிட்டார். ஒன்றிய அரசின் உறுதிப்பாட்டை உறுதி செய்து, தமிழ்நாட்டிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்குப் பின்னர் தான் அரியலூர் அனிதா மரணத்திற்கு (கொல்லப்பட்டார்) தள்ளப்பட்டார்.
அண்ணாமலையாரே, யார் குற்றவாளி?
ஒன்றிய அரசு நினைத்தால் நீட் நுழைவுத்தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய முடியுமா? முடியாதா? முற்றிலுமாக வேண்டாம்; தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா? முடியாதா? என்பதனை அண்ணாமலை அறிவுபூர்வமாக பதில் சொல்ல வேண்டும்.
நீட் நுழைவு தேர்வுக்கு அஞ்சி, தமிழ்நாட்டில் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பிற மாநிலங்களில் இது போன்று இல்லை என்று கூறுகின்ற அண்ணாமலை, அன்றாடம் செய்திகளைப் பார்ப்பதும் படிப்பதும் அரிது போல் தெரிகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கின்றது. நாட்டின் போட்டித் தேர்வு பயிற்சி தலைநகரமாக இந்த ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம் திகழ்கிறது. இங்கு நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ, நீட் தேர்வுகளுக்கான பயிற்சி பெறுகிறார்கள். இவர்களில் மன அழுத்தம் காரணமாக கடந்த ஆண்டு 15 மாணவர்களும் நிகழாண்டில் இதுவரை 22 மாணவர்களும் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் நான்கு மணி நேரத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தான் பயிற்சி பெறும் மையத்தில் மாதிரி நீட் தேர்வை எழுதி முடித்து வெளியே வந்த சம்பானி காஸ்லே என்ற 17 வயது மாணவர், தான் பயின்ற மையத்தின் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து மாண்டு போனார். ஆதர்ஷ் ராஜ் என்ற 18 வயது மாணவர் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் விளைவாகப் பயிற்சி மையங்களில் நடைபெறும் தேர்வை இரண்டு மாதங்களுக்கு நடத்தக் கூடாது என்று அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
பெற்றோர்கள் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். அதன் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கல்விக்காக கடன் வாங்கத் தேவையில்லாத வகையில் கொள்கையை ஒன்றிய அரசு தான் உருவாக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார். இவையெல்லாம் அண்டப்புளுகு அண்ணாமலைக்குத் தெரியாதா?
வேளாண் மக்களுக்கு எதிராக மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, அடுத்த நாளே குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அரசிதழிலும் வெளியிட்டு சட்டம் ஆக்கினீர்கள்.
அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் கேரளா சட்டப்பேரவையில் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எவரது குரலுக்கும் செவி சாய்க்காத நீங்கள், என்ன சொன்னீர்கள்? “நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் கமா, ஃபுல் ஸ்டாப் கூட திருத்தப்பட மாட்டாது” என அகங்காரமாகப் பதிலளித்தீர்கள்.
ஒண்ணே கால் ஆண்டு விவசாயிகள் போராட்டத்திற்குப் பின்னர், 700 விவசாயிகள் செத்து மடிந்ததற்குப் பின்னர், மூன்று சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ததை நாடு மறக்கவில்லை.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சிக் காலத்திலும் நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடனும் நிறைவேற்றப்பட்டது. அவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கிடக்கின்றன. அண்ணாமலையாரே, இப்போது சொல்வீர் யார் குற்றவாளி? தமிழகத்து மாணவர்களின், மாணவிகளின் மரணத்துக்கு காரணம் யார்? விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்தது போல், நீட் தேர்வை ஏன் விலக்க முடியாது?