புலவர் செ.ராசு மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு…
கல்வெட்டு அறிஞரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் செ.ராசு (85) நேற்று (09.08.2023) மருந்துவமனையில் அனுமதிக்கப் பெற்றிருந்த நிலையில், காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தோம்
புலவர் செ.ராசு தமிழாசிரியர் பணியில் தொடங்கி, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாற்றும் பேராசிரியராக உயர்ந்தவர். கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றவர்.
கல்வெட்டு, செப்பேடு, ஓலைப் பட்டயம், சுவடிகள் தேடி பெற்று ஆய்ந்து வந்தவர். தொல்லியல் துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவரது ஆய்வில் உருவான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களும், நூற்றுக்கணக்காக கட்டுரைகளும் நீண்ட பல காலம் இளைய தலைமுறை ஆய்வாளர்களுக்கு கைவிளக்காக விளங்கும். அறச்சலூர் மலையில் இசைக் கல்வெட்டு இருப்பதை கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தது இவரது தனிச் சிறப்பான பணியாகும்.
புலவர் செ.ராசுவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆய்வுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் கூறியுள்ளார்.