அறிக்கைகள்தமிழகம்

தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு வரை படித்த மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை

தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

தமிழ்நாடு அரசின் , பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு  பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி வரை, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த ஒதுக்கீடு,  தமிழ் வழியில் படிக்க வேண்டும் என்ற உணர்வை அதிகரிக்கும். தமிழ் வழியில் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற தவறான கருத்தை தகர்க்கும். வேறு மாநிலத்தவர் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பை பெறுவதையும் தடுக்க உதவும்.
அதுமட்டுமின்றி, தமிழ் வழியில் படிப்பவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியை சார்ந்தவர்களாக உள்ளனர் . சமூக ரீதியாகவும்,கல்வி ரீதியாகவும் , பொருளாதார ரீதியாவும், மிக மிக பின்தங்கிய, கிராமப்புற குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

எனவே, இந்த இடஒதுக்கீடு என்பது, தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதுடன்,  சமூகரீதியாக, கல்விரீதியாக மிகவும் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கிராமப்புற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பை பெறவும் உதவுகிறது. எனவே, இந்த ஒதுக்கீடு வரவேற்புக்குரியது.

மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம் (எம்.ஆர்.பி) சில பணிகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.  இவை பாராட்டத்தக்கது.

அதேபோல், மருத்துவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பில் வழங்கிட வேண்டும்.

மருத்துவக் கல்வி – எம்பிபிஎஸ் தமிழ் வழியில் இல்லாத நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, 20% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசு  எடுத்திட வேண்டும்.

கோவிட் பரவிய காலத்தில் மக்களுக்கு அர்ப்பணிப்போடு சேவை புரிந்த மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு, அவர்களது சேவையைப் போற்றும் வகையில், அரசுப் பணியில் சேர்வதற்கான, எம்.ஆர்.பி தேர்வு மதிப்பெண்ணோடு,  கூடுதல் ஊக்க மதிப்பெண்ணை வழங்கிட வேண்டும். நிரந்தர வேலை வாய்ப்பு பெற வழி வகை செய்ய வேண்டும். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகள் கோவிட் பணி முடித்தவர்களுக்கே ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் கூறுவது, இதில் யாருக்கும் பயனளிக்காது எனக் கூறப்படுகிறது.

எனவே, அத்தகைய முடிவை கைவிட்டு, கோவிட் பணியாற்றிய காலத்திற்கேற்ப ஊக்க மதிப்பெண்களை வழங்கிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button