மே தின வாழ்த்துக்கள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
“வர்க்கப் போராட்டங்களின் வரலாறு தான் மனிதகுல வரலாறு” என்கிறார் பேரறிவாளர் காரல் மார்க்ஸ். அந்த வகையில் தொழிலாளி வர்க்கம் 1886 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உழைக்கும் மக்கள் அமைப்புரீதியாக அணி திரண்டு வேலை நேரத்தை முறைப்படுத்தும் கோரிக்கைகளை முன் வைத்து மே முதல்நாள் ஊர்வலம் நடத்தியது. 8 மணிநேரம் உழைப்பு, 8 மணிநேரம் ஓய்வு, 8 மணிநேரம் உறக்கம் என்பதாக வரையறுத்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
நாள்தோறும் 20 மணி நேரம் வரையிலும் வேலை வாங்கி வந்த, மூலதன சக்திகளும், அவர்களது அரசும், காவல்துறையும், கோரிக்கை வைத்து ஊர்வலம் போன தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. தொழிலாளர்களை அணிதிரட்டி முன்னணி தலைவர்களை தூக்கில் போட்டு, படுகொலை செய்தது.
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக உழைக்கும் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தை தீவிரமாக்க ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைக்கும் மக்களின் உரிமை தினமாக, உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை நாளாக கொண்டாட வேண்டும் என அறை கூவி அழைத்தது. இந்த அறைகூவலை ஏற்று தமிழ்நாட்டில், தலைநகர் சென்னையில் 1923 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு, சிந்தனை சிற்பி தோழர் ம.வெ.சிங்காரவேலு, தொழிலாளர் – விவசாயிகள் கட்சி அமைத்து, அதன் மூலம் மே தினத்தை கொண்டாடி, தொடக்கி வைத்தார். ஆசிய கண்டத்தில் கொண்டாடப்பட்ட முதல் மே தினம் என்ற பெருமை கொண்ட வரலாற்றின் நூறாவது ஆண்டு நிறைவு பெறும் நேரத்தில் இந்தியத் தொழிலாளி வர்க்கம் 137 ஆவது மே தின நாளை போராட்ட உறுதி ஏற்பு நாளாக கொண்டாடுகிறது.
நூறாண்டு காலம் போராடி பெற்றிருந்த உரிமைகளை, ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஒன்றிய அரசு பத்தாண்டுகளில் முற்றிலுமாக பறித்து விட்டது. பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப வேட்டைக்கு உழைக்கும் மக்கள் நவீன கொத்தடிமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த இழிநிலைக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொண்டு, ஒருங்கிணைந்து போராடி வருகின்றது.
விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடி, ஒன்றிய அரசை பணிய வைத்து வெற்றி கண்டு வரலாறு படைத்துள்ளனர். அவர்களிடம் ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023 ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை தமிழக தொழிலாளி வர்க்கமும், ஜனநாயக சக்திகளும் எடுத்துக் கூறி களம் இறங்கின. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதனை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம்.
வகுப்புவாத, மதவெறி பாஜக ஒன்றிய அரசை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவும் நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவும் மேதின நாளில் சூளுரை ஏற்று, களப்பணி தொடர்வோம் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுதியளித்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.