அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (11.04.2023) புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்கால அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா எடுத்துரைத்தார். அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்மிகு வரலாற்றையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்திலும், சுதந்திர இந்தியாவில் தேசிய செயல்திட்டத்தை வடிவமைத்ததிலும் கட்சி வகித்த முன்னணி பாத்திரத்தையும், இந்திய தேர்தல் ஆணையம் உரிய முறையில் கவனத்திற் கொண்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். தேசத்தின் ஜனநாயகப்பூர்வ அரசியலமைப்பு முறையை வலுப்படுத்துவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்களத்தில் நின்று போராடியுள்ளது.
வெகுமக்களின் பேராதரவுடன், அகில இந்திய அளவில் இயங்கி வரும், மிக மூத்த அரசியல் கட்சிகளில் ஒன்றாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திகழ்ந்து வருகிறது. தேசத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்றிட, சமூக நீதி, மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாத்திட, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகா உன்னதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. மக்களின் உரிமைப் போராட்டங்கள், தேசநலனுக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்கும்.
தேசிய கட்சி அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றிருந்தாலும், மேலும் தீவிரமாக, அர்ப்பணிப்புடன், நாடு முழுவதிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மக்களிடையே பணியாற்றிடும். அதே நேரத்தில், விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை, தேர்தல் நிதி பத்திரங்கள் ஒழிப்பு, இந்திரஜித் குப்தா கமிட்டி பரிந்துரைத்தபடி அரசே தேர்தல் செலவுகளை ஏற்பது உள்ளிட்ட விரிவான தேர்தல் சீர்திருத்தங்களுக்காக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ளும்.
இது போன்ற சவால்களை எதிர்கொண்டு முறியடித்து, மீண்டெழும் ஆற்றலும், உறுதியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.
இவ்வாறு செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.