அரசாங்க ஊழியர் சிறப்புநிலை கோரி புதுடெல்லியில் 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
நாடு முழுவதிலும் இருந்து 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று (28.03.2023) அணிதிரண்டனர். ஏஐடியூசி பதாகையின் கீழ் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிட நாட்டின் மூளை முடுக்குகளில் இருந்தும் பெண் தொழிலாளர்கள் அணிதிரண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்க ஊழியர் சிறப்புநிலை எனும் பிரதான கோரிக்கையை வலியுறுத்திய தொழிலாளர்கள், அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரையிலும் குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் மகப்பேறு கால நலன்கள் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
தற்போது, இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் திட்டத் தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஒரு திட்டம் என்பது குறிப்பிட்ட காலவரையறையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அந்தத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பணியானது அத்தியாவசியமானது, தொடர்ச்சியானது மற்றும் நிரந்தரத்தன்மை கொண்டது ஆகும். இந்தத் தொழிலாளர்களின் சேவை தேசம் முழுமைக்குமானது; அவர்களின் பணி குறிப்பிட்ட காலவரையறைக்கோ அல்லது எந்தவொரு திட்டத்திற்கோ உட்படாதது ஆகும். ஆரம்ப சுகாதாரம், சத்துணவு, பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களின் அனைத்து திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதில் இந்தத் தொழிலாளர்கள் கேந்திரமான மையங்களாகச் செயலாற்றுகிறார்கள்.
ஆஷா தொழிலாளர்களின் போற்றுதலுக்குரிய பணியின் காரணமாகவே இந்தியாவில் மகப்பேறு கால தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்டத் தொழிலாளர்களால் தான் சிறார்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகளை இந்தத் தொழிலாளர் திரள் தான் உறுதிப்படுத்தியது.
கோவிட்19 பெருந்தொற்று நமது சுகாதாரத் துறையின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய போது, ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் தான் முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்டு பொதுமக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தனர். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை, ஐ.நா சபையின் உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி சிறப்பித்த போதும், இந்திய அரசாங்கம் போதிய அளவிற்கு அங்கீகரிக்கவோ, பாராட்டவோ இல்லை.
ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்களின் பணி முறைப்படுத்துதல் கோரிக்கை நியாயமானது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை மேலும் தீவிரமான போராட்டங்களை ஏஐடியூசி-ன் ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் மேடை முன்னெடுக்கும்.
தொழிலாளர் பேரணியை ஏஐடியூசி பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பினாய் விஸ்வம் (சிபிஐ), எம்.சண்முகம் (திமுக) ஆகியோர் இப்பேரணியில் பங்கேற்று, உரையாற்றி தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
ஏஐடியூசி தேசிய செயலாளர் தோழர் வஹிதா நிஜாம் தலைமையிலான குழுவினர் ஒன்றிய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஷ்மிருதி இராணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். எல்.பி.எப் தொழிற்சங்கத்தின் சார்பில் எம். சண்முகம் எம்.பி அப்போது உடன் இருந்தார்.
சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர்களை இக்குழு விரைவில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க இருக்கிறார்கள்.