ஆலை விபத்துக்களைத் தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே உள்ள வளத்தோட்டப் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை பாதுகாப்பதில் தொழிற்சாலை ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அரசின் இந்தப் பிரிவு செயலற்ற நிலையில் இருப்பதே தொடர் விபத்துக்களுக்கு காரணமாகும்.
விபத்துக்கு வாய்ப்புள்ள ஆபத்தான தொழில்களில் தொழில் கட்டமைப்பு, விபத்துத் தடுப்பு சாதனங்கள், பயிற்சி பெற்ற திறன் கொண்ட தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பட்டாசு ஆலை உரிமையாளர் லாபம் பார்க்கும் சுயநலமும், ஊழலுக்கு இரையாகும் தொழிற்சாலை ஆய்வு அலுவலர்களும் மனித உயிர்கள் பலியாவதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இதற்குத் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு சட்டமும் மேம்படுத்தப்பட வேண்டும்.
தற்போது பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, உதவியும் மறுவாழ்வு ஏற்பாடுகளும் செய்து தர வேண்டும். படுகாயம் அடைந்தவர்களைக் காப்பற்ற உயர் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்வதுடன் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.