தமிழகம்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023-24: மக்கள் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில், 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (20.03.2023) தாக்கல் செய்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் கவனம் செலுத்தியுள்ளது. மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவிடம் அமைப்பது, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறப்பது, கணினி பயன்பாட்டிற்கு தக்கபடி தமிழ் எழுத்துக்களை மேம்படுத்துவது என்று பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தேர்தலின் போது திமுகழக அறிக்கையில் அறிவித்தபடி குடும்பப் தலைவிகளுக்கான உரிமைத் தொகை மாதம் ரூ1000 வழங்கப்படும் என்று அளித்த உறுதிமொழியை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் நலத்துறையினர் பொறுப்பில் இயங்கி வந்த பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது, அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாடு திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உயர்த்தியிருப்பது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.

மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய தனியார் பங்களிப்பு திட்டமான பிபிபி திட்டம் அறிவித்திருப்பது தமிழ்நாட்டின் மின் வழங்கல் கொள்கையைப் பாதிக்கும். மின் நுகர்வோர்களைத் தனியாரிடம் தள்ளிவிடும் அரசின் பல்வேறு துறைகளில் தினக்கூலி, ஒப்பந்தப்பணி, வெளியிடப்பணி போன்ற திட்டங்களில் பணிபுரிந்து வரும் பல்லாயிரம் தொழிலாளர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் நிதிநிலை அறிக்கை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தி வரும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கை அமைதி காப்பது அப்பகுதியினருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. பொதுப் போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை அதிகரித்து வரும் சூழலில் போக்குவரத்து துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோயில் மனைகளில் குடியிருந்து வருவோர் மனை நில உரிமை கோரி போராடி வருவதையும் நிதியமைச்சர் கருத்தில் கொள்ளவில்லை.

நிதி மேலாண்மை செய்வதில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டது நிர்வாகத் திறனுக்கு சான்றாக அமைந்துள்ளது. எனினும் வீட்டு வரி, சொத்து வரி, மின்கட்டணம், மற்றும் பால் விலை உயர்வுகளாலும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் என்பதை நிதியமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button