வேளாண்மை நிதி ஒதுக்கீட்டில் 44 ஆயிரத்து 16 கோடி ரூபாய் ஒன்றிய அரசு முடக்கம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
நிகழ் நிதி ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் ரூபாய் 44 ஆயிரத்து 16 கோடியை ஒன்றிய அரசு திருப்பி அளித்துள்ளது என்பது ஒன்றிய அரசுக்கு விவசாயிகளின் மீது உள்ள அக்கறையின்மையையே காட்டுகிறது.
2020 – 21 ஆம் ஆண்டின் வேளாண்துறை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திருந்த தொகையில் ரூபாய் 23824.54 கோடி; 2021 – 22 ஆம் ஆண்டில் ரூபாய் 429.22 கோடி; நடப்பு 2022 – 21 ஆம் ஆண்டில் இதுவரை 19762.05 கோடி ஆக 44 ஆயிரத்து 16 கோடியை வேளாண்துறை அமைச்சகம் திருப்பி கொடுத்துள்ளது என்று விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளின் நாடாளுமன்ற நிலை குழுவின் அறிக்கை கடந்த 13 அன்று மக்களவையிலும், 14 அன்று மாநிலங்கள் அவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை என்பது இந்தியாவின் அடிப்படை ஆதாரம்: கிராமங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் பயிர்கள் எல்லாம் வெறும் உயிரினங்கள் மட்டுமல்ல… இந்தியாவின் ஆன்மா என முன்னோர் பாதுகாத்து வந்தனர். அந்த வேளாண்மையை காத்து உயர்த்திடவே ஒவ்வொரு ஆண்டும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு தேவைக்கான அளவில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை என விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகின்றனர்.
நீராதார மேம்பாடு, இடுபொருட்கள், மானியம், ஆதார விலை, கொள்முதல், பேரிடர் கால நிவாரணம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்திற்குரிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு வேளாண்மை கட்டமைப்புகளை மேம்படுத்திட விவசாயிகள் சங்கங்கள் போராடி வரும் நிலையில் இதற்கு தேவையான உரிய அளவு நிதியை தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கேட்டு வலியுறுத்தியும் மௌனத்தை தான் பதிலாக அளிக்கிறது.
நிதி ஆதார பற்றாக்குறையால் தேவைக்குரிய திட்டங்களை செய்ய முடியவில்லை என சமாளித்துக் கொள்ளும் ஒன்றிய அரசு, ஒதுக்கீட்டு நிதிக்கான திட்டங்களையே ஏன் செயல்படுத்திட வில்லை. ஒன்றிய அரசின் அக்கறையின்மை மற்றும் பொறுப்பின்மையே இதன் காரணமாகும்.
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பெற்று உரிய சில திட்டங்களை நிறைவேற்றாதது என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். எனவே, திருப்பி அளிக்கப்படும் இந்த நிதியை வரும் நிதி ஆண்டு பட்ஜெட்டில் சேர்த்து விவசாயிகள் எதிர்பார்க்கும் பணிகளை திட்டமிட, நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பி.எஸ் மாசிலாமணி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.