திரைமறைவு சதி வேலைகளை தொடங்கி விட்டது பாஜக – கே.சுப்பராயன் எம்.பி.
செய்தித்தொகுப்பு: A P மணிபாரதி
இந்திய அரசியலில், பாஜகவின் திரைமறைவு சதிவேலைகள் தொடங்கிவிட்டன! என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவரும் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் விடுத்துள்ள அறிக்கையில், ‘இட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட தனது செல்வாக்கு, நாளுக்கு நாள் சரிந்த வண்ணமே இருப்பதை பாஜக நன்கு உணர்ந்து விட்டது!
எனவே, பாஜக தனக்கு எதிரான ஓட்டுகளை பல முனைகளாக சிதறடிக்க வைக்கிற சித்து விளையாட்டைத் தொடங்கி விட்டது!
எல்லா மாநிலங்களிலும் இந்தத் திருவிளையாடல் அரங்கேறிவிட்டது!
இஸ்லாமியஓட்டுகளை சிதறடிக்க பாஜகவின் அரசியல் ஆயுதம் ஓவைசி!
தமிழ்நாட்டில், தமிழர் என்ற பெயரில் தமிழர் ஓட்டுகளை சிதறடிக்க பாஜகவின் ஆயுதம் சீமான்!
வங்கத்தில் CBIயைக் கண்டு நடுங்கும் மம்தா!
தெலங்கனாவில் YSR ராஜசேகர் ரெட்டியின் மகள் கட்சி!
மராட்டியத்தில் ஷிண்டே!
வேறு பல வட மாநிலங்களில் ஓட்டுக்களைச் சிதறடிக்க பாஜகவின் ஆயுதம் கெஜ்ரிவால்!
உத்தர பிரதேசத்தில் தயாராக இருக்கிறார் மாயாவதி!
காங்கிரசில் ஊசலாடும் நபர்களுக்கு தூண்டில் போடுதல்!
இப்படி எதிர்ப்பு வாக்குகள் ஒன்றுபட்டு விடாமல் தடுப்பதற்கு தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது!
பல போட்டி முனைகளை திட்டமிட்டே உருவாக்குவதுதான் கேடுகெட்ட பாஜகவின் கில்லாடித்தனமான தேர்தல் தந்திரங்களாக உள்ளன!
தேச நலன், நாடாளுமன்ற ஜனநாயக முறை, அரசியல் சாசனத்தை பாதுகாக்க அக்கறை கொண்ட மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி இயக்கங்கள், தன் முனைப்பைக் கைவிட்டு ஒன்றுபடுவதும், ஒன்றுபடுத்துவதும் இன்றைய தலையாய அரசியல் தேவையாகும் என்பதை உணரவேண்டும்! என்றும் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.