மின்வாரிய உத்தரவைத் திரும்பப் பெறுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புப் பெற்றுள்ளவர்கள், அவைகளைத் திருத்தி ஒரே மின் இணைப்புக்கு கொண்டு வர வேண்டும் என அறிவிப்பு வழங்கி வருகிறது. இது மின் நுகர்வோர் மீது செலவுச் சுமையை ஏற்றும் தாக்குதலாகும்.
தமிழ்நாடு அரசின் மின் வழங்கல் கொள்கையின்படி, தற்போது மின்நுகர்வோர் மானியம் உள்ளடங்கிய கட்டணம் செலுத்தி வருகிறார்கள். அதாவது வீடுகள், கைத்தறி, விசைத்தறி நெசவுக் கூடங்கள் முறையே 100, மற்றும் 300 யுனிட் மின்சாரம் கட்டணச் சலுகை பெற்று வருகிறார்கள். மின்வாரியத்தின் உத்தரவு இந்த மின்கட்டணச் சலுகையை அடியோடு பறிக்கும் நோக்கம் கொண்டது.
இனி வரும் காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புக் கொண்ட வளாகம், ஒரே மின் இணைப்புக்கு மாறும் போது, அதற்கான கட்டணம் 1 – டி விகிதப்படி அதாவது ஒரு யுனிட்டுக்கு தலா ரூபாய் 8 வீதம் வசூலிக்கப்படும் என்பதையும் மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. மின்கட்டணம், மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மின் இணைப்புகளை திருத்தி அமைக்கிறோம் என்ற பெயரில் மின் நுகர்வோர் நலனுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலாகும். தமிழ்நாடு அரசின் மின் வழங்கல் கொள்கைக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டுகிறது.
மின்வாரியத்தின் இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.