உலக பெண்கள் தின வாழ்த்துகள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
மனிதகுல வரலாற்றில் உருவான அதிகாரக் கட்டமைப்பில் நிலவி வரும் பாலின பாகுபாடுகளைத் தகர்த்து, பாலின சமத்துவம் காணும் உயர்ந்த நோக்கத்துடன் மார்ச் 8 உலக பெண்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1910 ஆம் ஆண்டில் நடைபெற்ற சோசலிஸ்டு பெண்களின் சர்வதேச மாநாட்டின் அறைகூவல் படிப்படியாகப் பல நாடுகளாலும் ஏற்கப்பட்டு, 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தினத்தில் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் – பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”,
எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண் என்று கும்பியடி”
என்று கற்பித்துச் சென்றார் புரட்சிக்கவி பாரதி. நாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு சட்டம் பாலின வேறுபாடுகளின்றி குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குகிறது. ஆனால், நாட்டின் நிகழ்கால சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கிறது. அரசியல் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பழமைவாத சக்திகள் பெண்களின் உரிமைகளை மறுத்து, அவர்கள் ஆணாதிக்க அடிமைகளாக வாழ்ந்து வரவேண்டும் என பகிரங்கமாகப் பேசியும், நிர்பந்தித்தும் வருகின்றன.
பாலின பாகுபாடுகள், பாலியல் வன்முறைகள், இழிவுபடுத்தும் அநாகரிகச் செயல்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகளும், ஜனநாயகவாதிகளும் உழைக்கும் பெண்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றிருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிலும் 33 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
பெண்களின் மீதான வன்முறைகளும் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. நிர்பயா நினைவாக நிறைவேற்றப்பட்ட பணியிட பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் அமலாக்கப்படுவதில்லை என்ற நிலையில் நடப்பாண்டு பெண்கள் தினத்தில், பாலின வேறுபாடுகளையும், அடக்குமுறைகளையும் ஆதரித்து வரும் வகுப்புவாத சக்திகளின் கரங்களில் சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம் என உறுதி ஏற்று, மீண்டும் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.