வெளி மாநிலத் தொழிலாளர் எதிர்ப்பு விஷமத்தனத்தை முறியடிப்பீர்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தமிழ்நாட்டின் பல பகுதிகளில், நாட்டின் பல மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதே போல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து சென்று, வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைதி விரும்பாத, வெறுப்பு அரசியலைப் பரப்புரை செய்து, மோதல்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடும், மலிவான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பீகார் மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும், அடிப்படையும், ஆதாரமும் இல்லாத, அவதூறு செய்திகள் பரப்பப்படுகிறன்றன. இது சில ஊடகங்களிலும் முதன்மை செய்திகளாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பிகார் மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் கட்டமைக்கப்படும் கயமைத்தனம் வெளிப்படுகின்றன.
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத பாசிச சக்திகளின் ‘ஆக்டோபஸ்’ கரங்களிலிருந்து நாட்டை மீட்க, நாடு தழுவிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திசை வழியில் தமிழ்நாட்டின் மாபெரும் வெற்றி கண்டிருக்கும் தி.மு.கழக ஆட்சிக்கும், பாஜகவின் வஞ்சகத்தை உணர்ந்து, அந்தக் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றிய, பீகார் முதலமைச்சர் திரு.நித்தீஸ் குமார் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர் தொடர்பாக வதந்திகள் பரப்புரை செய்யப்படுகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை இரும்புகரம் கொண்டு, அடக்குவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”, “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற தமிழ் சமூகத்தின் தொன்மையான மரபைக் காத்து நிற்பதில், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நின்று, சமூக விரோத, சீர்குலைவு சக்திகளை முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.