வாழ்வாங்கு வாழ்க!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அன்புத்தோழர் இரா. நல்லகண்ணு வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், 69-வது வயதை நிறைவு செய்து, 70-வது பிறந்த நாள் காணும் இனிய நாளில், அவர் மேலும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்!
நாட்டின் அரசியல் அதிகாரம் மதவெறி சக்திகளின் ஆதிக்கத்தில் ஆட்பட்டு கிடக்கிறது. சமூக வளர்ச்சிப் போக்கில் நிதிமூலதன சக்திகளின் லாப வேட்டைக்களமாக அன்னை பூமி மாற்றப்பட்டுள்ளது. சமூக செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து வருவதும், மிகப் பெரும்பகுதி மக்கள் வாழ்விழந்து நிற்பதுமான துயரநிலை வரலாறு காணாத எல்லைக்குச் சென்றுள்ளது.
மனிதகுலத்தை ஒன்றுபடுத்தும் சகோதரத்துவமும், சமத்துவமும், சமூகநீதியும் மறுக்கப்பட்டு, சனாதனக் கருத்துகள் திணிக்கப்படும் அபாயகரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, நாட்டின் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்து வரும் சூழலில், பழமைவாத கருத்துகளை எதிர்கொண்டு, முறியடிக்கும் முனைப்பான செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிகள் வலிமை பெற்று, அதிகாரத்தில் மாற்றம் காண வேண்டும் என விழைகிறேன்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரும், பகுத்தறிவுப் போராளி பெரியார் ஈ.வெ.ரா.வும் பேரறிவாளர் காரல்மார்க்ஸ் – பிரடெரிக் ஏங்கல்ஸ், வி.இ.லெனின் போன்றோரின் களப்பணி அனுபவத்தை உள்வாங்கி, தமிழ் சமுகத்தின் தனித்துவ தன்மையோடு முன்னெடுத்த சமதர்ம – சுயமரியாதை கருத்தாயுதம் கொண்டு, அறிஞர் அண்ணா, பேராசான் ஜீவானந்தம், முத்தமிழறிஞர் கலைஞர் போன்றோர் கட்டமைத்த மதச்சார்பற்ற, சாதி பேதமற்ற, சமூக நீதி ஜனநாயக வழிநின்று, கொள்கை வீரராகச் செயலாற்றி வரும் தம்பி மு.க.ஸ்டாலினின் அரசியல் பணியும், ஆட்சிப் பணியும் நீண்ட பல பத்தாண்டுகள் தொடர்ந்து, நிலைத்து அமைந்திட வேண்டும். அது புவிக்கோள வரலாற்றில் புதிய சகாப்தமாக அமையப் பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்!
வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகள்!