பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கண்டிக்கிறது. வகுப்புவாத-பாசிச கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மற்றும் அம்பலப்படுத்துபவர்கள் மீது மோடி அரசாங்கம் தாக்குதல் தொடுப்பது வாடிக்கையாகி உள்ளது.
‘The Modi Question’ என்னும் ஆவணப்படத்தை பி.பி.சி நிறுவனம் சமீபத்தில் ஒளிபரப்பியது நினைவுகூரத்தக்கது. இது மோடி அரசாங்கத்திற்கு எரிச்சலூட்டியது. பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப மோடி அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
தற்போது, மோடி அரசாங்கம் பி.பி.சி நிறுவனத்தை அச்சுறுத்த அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஊடகச் சுதந்திரம் என்பதைப் பொறுத்தவரையில், இது போன்றதொரு நடவடிக்கை தேசத்தின் மதிப்பைச் சீர்குலைப்பதாகும்.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.