யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தேசிய உணர்வையும், சனாதன தர்மத்தையும் நிகர் நோக்கிக் கூறும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்திற்குத் தேசிய மதம் என்னும் சிறப்புநிலையை வழங்குவது கண்டனத்திற்குரியது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது ஆகும்.
பல்வேறு பின்புலங்களைக் கொண்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் வெள்ளையரை எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடினர். அவர்தம் தியாகமே நமது தேசத்தை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாகக் கட்டமைத்தது. ஆர்.எஸ்.எஸ் அப்போதும் மக்களைப் பிளவுபடுத்தியது; இப்போதும் மக்களைப் பிளவுபடுத்தி வருகிறது.
இது, இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்திற்கு எதிரானது ஆகும்; நமது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் உண்மையான தன்மையை அம்பலப்படுத்துகிறது.
கடந்த 74 ஆண்டுகளாக மதச்சார்பற்ற இந்திய அரசியலமைப்பை உயர்த்திப் பிடித்து வரும் இந்திய மக்கள், அதன் மைய விழுமியங்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று கட்சி உறுதிபட நம்புகிறது.
நமது அரசியலமைப்பின் மைய விழுமியங்களைச் சிதைப்பவர்களை எதிர்த்து முறியடித்திட, அரசியலமைப்பின் மைய விழுமியங்களைப் பாதுகாத்திட முற்போக்கு சக்திகள் அணிதிரள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.