ஜனவரி 24: AITUC – தமிழ்நாடு தழுவிய மறியல்! – தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் பங்கேற்கும் – நா பெரியசாமி Ex-MLA அறிவிப்பு
பாஜக மோடியின் ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் படிப்படியாக சீர்குலைக்கப்படுகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜகவின் மோடியின் ஆட்சி ஒன்றிய அரசை வழிநடத்துகிறது. இவரது ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடப்பாண்டில் (2022- 23) இதுவரை (22.01.2023) வழங்கப்பட்ட சரசாரி வேலை நாட்கள் 42 நாட்களாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் கடந்த 2019- 20 ஆம் ஆண்டில் வேலை பெற்ற தொழிலாளர் குடும்பங்கள் சராசரியாக 51 நாட்களாகவும், 2020- 21 ஆம் ஆண்டின் 52 நாட்களாகவும், 2021 – 22 ஆம் ஆண்டில் 50 நாட்களாகவும் இருந்த நிலையில் நடப்பு 2022 – 23 ஆம் ஆண்டில் 42 நாட்களாக, வழக்கமாக பெற்ற வேலை வாய்ப்பிலும் 10 நாட்கள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. புதுக்கோட்டை / ஈரோடு மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 2022 முதல் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கமால் இழுத்தடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் விழா தொழிலாளர்களுக்கு கண்ணீர் பொங்கலாக முடிந்து போனது.
பாஜக ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்த்து வரும் (24.01. 2023) அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தில் கிராமத் தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்தோடு போராட்டத்தில் பங்கேற்று, ஆதரிக்குமாறு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் அறைகூவி அழைக்கிறது.
வாரீர்! வாரீர்! வாரீர்! வேலை பெறும் உரிமையை பாதுகாப்போம்…!
இவ்வாறு தோழர் நா பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.