தமிழகம்

வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் : அலெய்டா குவேரா வீர முழக்கம்!

செய்தித்தொகுப்பு : இதழாளர் இசைக்கும்மணி

பிற மனிதர்களின் துன்ப துயரங்களை உணர்ந்திடுவதே மனித மாண்பாகும் என்ற கியூப விடுதலை போராளி ‘ஒசே மார்த்தி’ யின் உணர்வை சே குவேரா மூலம் பெற்றுள்ளோம். ஆகவே நாம் மக்கள் சக்தியோடு இணைந்து நமது போராட்டத்தை முன் எடுக்க வேண்டும்; வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டும் என புரட்சியாளர் சே குவேராவின் மகள் மருத்துவர் அலெய்டா குவேரா முழங்கினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில், தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள புரட்சியாளர் சே குவேராவின் மகளும், கியூப கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளருமான மருத்துவர் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் எஸ்டாஃபானி குவேரா ஆகியோருக்கு சென்னை தியாகராய நகரிலுள்ள மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் ஜன. 18 அன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மூத்த தோழர் நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவர் கே. சுப்பராயன், துணைச் செயலாளர்கள் என்.பெரியசாமி Ex-MLA, மு.வீரபாண்டியன் மற்றும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தேசிய மாதர்சம்மேளனத்தின் பொறுப்பாளர்களும், குழந்தைகளும் பூங்கொத்து வழங்கி, வாழ்த்து சொல்லிட, அரங்கத்திற்குள் வந்திட்ட மருத்துவர் அலெய்டா குவேரா அனைவரு க்கும் வணக்கம் தெரிவித்து மேடையில் அமர்ந்தார்.

தலைவர்களின் வரவேற்பையும் பாராட்டுதல்களையும், ஓவியர்கள் புகழேந்தி, வருண் இசைக்கும்மணி உள்ளிட்டோரின் சே’குவேரா ஓவி யங்களையும், புத்தகங்களையும், தோழர்களின் ஆர்வலர்களின் பரிசுப் பொருள்களையும், வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அலெய்டா குவேரா பேசியதாவது:

தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நீங்கள் வெளிப்படுத்திய அன்பிற்கும், மிக்க பெரிய அளவிலான இந்த வரவேற்புக்கும் நன்றி தெரிவிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. இப்படியான சில விஷயங்களுக்கு நன்றி தெரிவிக்க முடியாது .

கியூப நாட்டு பெண்ணாக, மிகப்பெரிய மனிதரான சே குவேராவின் மகளாக நான் இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் கியூப நாட்டின் மகளாக வந்திருப்பதில்தான் மிகவும் பெருமைப் படுகிறேன். இதுவே எனக்கு பெருமதிப்பையும் மரியாதையையும் கொடுத்துள்ளது.

நமது மரபு வழியிலான பெருமைகளை விட, நாம் மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக இருப்பதில் தான் மரியாதையும், மதிப்பும் உண்டாகிறது. தென்னாப்பிரிக்காவின் அங்கோலா மக்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சேவைகள் செய்யக் கிடைத்த வாய்ப்பை பெரிதாக மதிக்கிறேன். ஆப்பிரிக்க மக்களிடையேயான உறவை பலப்படுத்திக் கொள்ளுவதாயும் இது அமைந்தது. இதனால் அங்கோலா வின் குழந்தைகள் பலரை காப்பாற்ற முடிந்தது. இதுவே மானிட மதிப்பைத் தருவதாக அமைந்திருந்தது.

மாமனிதர் சே குவேராவின் மகளாக இருப்பதால் மட்டுமல்ல, அவர் எந்த மக்களுக்காகப் போராடி வந்தாரோ அந்த மக்களுக்காகச் சேவை செய்பவராக இருப்பதில்தான் எனக்குப் பெருமையாக இருக்கிறது .

இங்கு நீங்கள் என் மீது வெளிப்படுத்திய அன்பை எங்கள் கியூப மக்களுக்கானதாக எடுத்துச் செல்வதையே மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.

இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவரும், போராட்ட வீரருமான தோழர் நல்லக்கண்ணுவுடன் இருப்பதற்கான சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது என்பதே பெருமை தருவதாக இருக்கிறது .

கியூப நாட்டின் மிகச்சிறந்த போராளி தலைவராக இருந்த ‘ஒசே மார்த்தி’, “மனிதர்களின் துன்ப துயரங்களை உணர்வதே மனித மாண்பாகும்” எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய மனித மாண்பை சே குவேரா மூலம் பெற்றுள்ளோம். சே குவேராவின் மகளாகவும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளராகவும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் மக்கள் சக்தியோடு இணைந்து நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் ; வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம், அகில இந்திய மாதர் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் ஆனி ராஜா, ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ம. ராதாகிருஷ்ணன், AIYF மாநில செயலாளர் பாரதி, மூத்த தோழர் சி. மகேந்திரன், பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் வேம்புலி, பா கருணாநிதி, எஸ் .கே. சிவா, மாநில மாவட்ட குழுவினர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தினர், பத்திரிகை ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர் சங்கத்தினர், கலை இலக்கிய பெருமன்றத்தினர், இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தினர், வெகுஜன அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள், இளைஞர் மாணவர் பெருமன்றத்தினர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கியூப புரட்சி வாழ்க! கியூப புரட்சியாளர்களின் புகழ் ஓங்குக!

ஏகாதிபத்திய அடக்குமுறையிலிருந்து கியூபாவைப் பாதுகாத்திடுவோம்!

கியூப மக்களுடனான சமாதான ஒருமைப்பாட்டை பலப்படுத்திடுவோம்!

புரட்சி நாயகன் சே குவேராவின் மகளே வருக! போர்க்கள கியூப தேசத்தின் புதல்வியே வருக! வருக !!

என இந்திய மாதர் சம்மேளனத்தின் ஆனி ராஜா, அபராஜிதா ராஜா உள்ளிட்டோரின் எழுச்சி முழக்கங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button