தமிழகம்

தாராபுரம்: தொடரும் நில மீட்பு போராட்டம்!

செய்தித்தொகுப்பு: A P மணிபாரதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டிணம், ஊத்துப்பாளையம் ஆகிய கிராமங்களில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசால் கையகப்படுத்தப்பட்ட 54.76 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த 2003 ஆம் ஆண்டு நிலமற்ற ஏழை கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

தளவாய்பட்டணத்தில் மட்டும் 54.76 ஏக்கர் நிலத்தை 45 நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி அரசு பட்டா விநியோகம் செய்தது.

ஆனால் அன்று தொட்டு இன்று வரை அந்தக் கூலி விவசாய தொழிலாளர்கள் தங்களுடைய நிலம் எது என்று அறியாமல், பட்டாவை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, நிலத்தைத் தங்களுக்கு அளந்து வழங்க வேண்டும் என போராடத் தொடங்கினார்கள்.

இந்தப் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அமைப்பு தலைமை தாங்கி நடத்தியது. குறிப்பாக, மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நா. பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம். ரவி, தாராபுரம் தாலுகா செயலாளர் பி. ரகுபதி ஆகியோர் நிலமற்ற ஏழை கூலி விவசாய தொழிலாளர்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முனைப்பாக இருந்து போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்தப் போராட்டம், சட்டப் போராட்டமாக மாறியது, இது சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது. நில உடமையாளர் பழனிசாமி கவுண்டர் மகன் அரங்கசாமி குடும்பம், நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டது தவறு என்று கூறி நில சீர்திருத்த தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என கொண்டு சென்றது.

அரசு, தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961, நில சீர்திருத்த சட்டம் 1970 ஆகியவற்றின் கீழ் மேற்படி நிலத்தை எடுத்தது சரிதான் என்றும் அரசு வாதிட்டது. இறுதியாக உச்ச நீதிமன்றம் அரசு நிலத்தை எடுத்தது சரி என்று தீர்ப்பளித்தது.

மேற்படி நிலத்தைச் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் மேற்கொண்ட முயற்சியில், நிலச் சீர்திருத்த துறை கமிஷனர் மற்றும் செயலர் அவர்கள் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு நிலத்தை அளந்து ஒப்படைக்க உத்தரவிட்டார்கள்.

அதன்படி கடந்த மாதம் நில அளவைத் துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உட்பட நேரில் வந்து நிலத்தை அளந்து சம்பந்தப்பட்ட 45 விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் வழங்கி உள்ளார்கள்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் தளவாய்பட்டினத்திற்கு நேரில் சென்று பயனாளிகளைச் சந்தித்து, “கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் விளைவாக நிலத்தை அரசாங்கம் அளந்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. நீங்கள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம், யாதொரு மிரட்டலுக்கும் அஞ்ச வேண்டாம்! கம்யூனிஸ்ட் கட்சி உங்களோடு நிற்கும், தொடர்ந்து போராடும்” என்றும் நம்பிக்கை ஊட்டினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ” தேச விடுதலைக்கான போராட்டம் நடைபெற்ற காலத்திலேயே நிலக்குவியல் என்பதைத் தவிர்த்து, உழுகிற விவசாயிகளுக்கு, உழத் தெரிந்தவர்களுக்கு நிலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், நீண்ட பல முயற்சிகளுக்குப் பின்னர், நிலச்சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஒருவர் எவ்வளவு நிலம் வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் வரையறுத்துக் கூறி, அதற்கு மேல் இருந்தால் அதை சர்க்கார் எடுத்துக்கொள்ளும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.

அந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பின்னர் பல திருத்தங்களை அது சந்தித்து வந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் டாக்டர். கலைஞர் முதல்வராக இருந்தபோது, அது மேலும் திருத்தப்பட்டு 15 ஸ்டேண்டர்ட் ஏக்கருக்கு மேல் யாருக்கும் நிலம் இருக்கக் கூடாது.

அதற்கு அதிகமாக நிலம் இருந்தால் அதை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும், அதை நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிப்பது என்ற நிலை வந்தது.

இதற்காக நீண்ட போராட்டம் நடந்து வந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அமைப்பின் கீழ் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அவற்றின் விளைவாக வந்ததுதான் நில உச்சவரம்பு சட்டம்.

அதன் அடிப்படையில் கடந்த 1970 ம் ஆண்டிலேயே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன 1973ம் ஆண்டு இந்த இடம் உபரி நிலமா அறிவிக்கப்பட்டது.

அரசால் எடுக்கப்பட்ட 54.76 ஏக்கர் நிலத்தை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து பட்டா கொடுக்கப்பட்டது. 2003ல் பட்டா கொடுக்கப்பட்டு 19 ஆண்டு காலம் அந்த நிலத்தை அனுபவிக்க முடியாமல் சம்மந்தப்பட்ட மக்கள் சட்டப் போராட்டத்தை நடத்தினார்கள்.

அரசாங்கமே உச்ச நீதிமன்றம் வரை சென்று இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது, இது அரசாங்கத்தின் சொத்து, என்று வாதாடியது. உச்ச நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தி விட்டது.

2003ல் பட்டா வழங்கப்பட்டது. மாநில அரசு பட்டா கொடுத்து இருக்கிறது. ஆனால் பட்டா காகிதத்தில் மட்டும் இருக்கிறது. காகிதத்தில் குறிக்கப்பட்டுள்ள நிலம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்கு வரவில்லை.

இப்பொழுது பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுங்கள் என்று முறையிட்டோம். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 45 பயனாளிகளுக்கும் பட்டாவில் என்ன அளவு குறிப்பிட்டுள்ளதோ அந்த அளவை அரசாங்கம் அளந்து கொடுத்திருக்கிறது.

இதற்கிடையில் நில சீர்திருத்த கமிஷனர் ஆர்.டி.ஓ. அவர்களுக்கு ஒரு நேரடி உத்தரவை போட்டார்கள் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிற படி சம்பந்தப்பட்ட பயனாளிகளை அழைத்து அவர்களுக்கு நிலத்தை அளந்து, எல்லை எது என்று அத்துக்காட்டி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

அந்த இடத்தில் கேட்பிரீஸ் கம்பெனி 10 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிலம் வாங்கியதும் சட்டப்படி தவறு, விற்றதும் சட்டப்படி தவறு என்று ஹைகோர்ட் தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

தற்போது அந்த நிலம் பயனாளிகளின் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது சர்க்கார் கொடுத்த பட்டா அந்த நிலத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அளந்து சர்க்கார் கொடுத்து விட்டது.” என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் போது அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் நா.பெரியசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம். ரவி, திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரவிச்சந்திரன், ஊரக மாவட்ட செயலாளர் கே. எம். இசாக், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் வி. பி. பழனிசாமி, தாராபுரம் தாலுகா செயலாளர் பி. ரகுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button