தமிழகம்

தைத் திருநாள் வாழ்த்துக்கள்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

இயற்கையோடு இயைந்து வாழ்வதும், அனைத்து உயிர்களையும் நேசித்து மகிழ்வதும், தமிழர் பண்பாட்டின் தொன்மை மரபாகும். மனித குல வரலாற்றில் ஓடும் குடிகளாக இருந்த நிலை மாறி, ஓரிடத்தில் நிலைத்து வாழும் முறைக்கு வேளாண் தொழில் ஆதாரமானது. மண்ணில் விழும் விதைகள் வளர்வது, தண்ணீர் தரும் ஈரத்தால் மட்டும் அல்ல, அதற்கு ‘சூரியன்’ தருகிற வெப்பமே இன்றியமையாதது என்பதை அறிந்த மனிதன் சூரியனுக்கு நன்றி கூறி குதூகலித்த நாள் பொங்கல் திருநாளாக மலர்ந்து, வளர்ந்து, தொடர்கிறது.

தமிழர் வாழ்வில் வாழையடி, வாழையாக வளர்ந்த அறிவு முதிர்ச்சி “ஆடிப்பட்டம் தேடி விதை “ என்ற முதுமொழி கூறியது. ஆடியில் விதைத்தது மார்கழி, தையில் அறுவடையாகும். வாழ்வில் கலங்கி நிற்கும் மனிதனுக்குத் துயரம் நீங்கி, “தை பிறந்தால் வழி பிறக்கும்“ என்ற தன்னம்பிக்கை தரும் திருநாளாகத் ‘தை’ முதல் நாள் அமைந்தது.

நொடி, நாழிகை, கிழமை, ஆண்டு, ஊழி என காலத்தைக் கணக்கிட்டு வாழ்ந்த தமிழர்கள், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஒரு நாளை ஆறாக வகைப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தை முதல் நாள் தமிழர் ஆண்டின் முதல் நாளானது. இந்தத் திருநாளுடன் மனித உழைப்பின் ஆற்றலைப் பெருக்கி, உற்பத்தி சக்தியை உயர்த்த உதவிய கால்நடைகள், குறிப்பாக மாடு, எருதுகளின் உழைப்புக்கு வணங்கி நன்றி கூறும் “மாட்டுப் பொங்கல்” தமிழர் வாழ்வின் தனிச்சிறப்பாகும்.

தொன்மை மரபு சார்ந்த பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களின் நிகழும் நிகழ்ச்சிப் போக்குகள் பெருங்கவலையளிக்கின்றன. மனிதனை, மனிதனே பகைத்தும், இழித்தும், பழித்தும் பேசும் வெறுப்பு அரசியல் அதிகார மண்டபத்தில் அமர்ந்து கொண்டது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட மரபுகளை மறைத்து, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தலைமை என தனிநபர் மையப்பட்ட, சிறு கும்பல் சர்வாதிகாரம் ஆட்சி நடைமுறையாகி வருகிறது.

மனித சமூகத்தைப் பிளவுபடுத்திய நால்வர்ண முறையும், இதனை ஆதாரப்படுத்தி கட்டமைக்கப்பட்ட சாதிய அடுக்குமுறையும் நியாயப் படுத்தப்படுகிறது. மனிதன் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக்கும் ஈனச் செயல்கள் நடைபெறுகின்றன.

சமூகநீதி சார்ந்த ஜனநாயாக முறைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. மாநிலங்கள் ஒருங்கிணைந்த ஒன்றிய அரசு என்பதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால், அரசியல் அதிகாரப் பொறுப்பில் இருக்கும் மனிதர்கள் அதனை நிராகரித்து, சித்தம் களங்கிய பித்தர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். ஜனநாயக நெறிமுறைகள் அழிக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி அகற்றப்பட்டு, ‘மனுதர்மம்’ மறுவாழ்வு பெறும் பேராபத்து கதவு தட்டி நிற்கிறது.

சவால்களைச் சந்தித்து வென்று வாழும் தமிழர் வாழ்வில் சனாதனத்துக்கு இடமில்லை என்று வெற்றி முழக்கமிடும் பொங்கலாக, தமிழ்நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களிலும், இல்லங்களிலும் பொங்கலிட்டு தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க என குலவையிடுவோம்!

ஜனநாயக, மதச்சார்பற்ற, சமூக நீதி, தேசபக்தி உணர்வு கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து “பொங்கல் திருநாளில்“ குறுகிய மதவெறி, சாதிவெறியை முறியடிக்க தைத் திருநாளில் உறுதி ஏற்போம்!

முன்னேற்றத்தின் தடைச் சுவராகும் பழைமை குப்பைகளை எரித்து, புதுயுகம் படைக்க பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் எனக் கூறி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button