நன்றி பாராட்டி வாழ்த்துகிறோம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது.
இன்று (29.12.2022) காலை 8 மணி முதலே சைதாப்பேட்டை குயவர் வீதி, சேசாசலம் வீதி சந்திப்பில் கட்சியின் ஆண்களும், பெண்களுமாக திரள ஆரம்பத்தினர். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க தோழர்கள் வருகையின் அடர்த்தியும், எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தன. சரியாக காலை 10. 45 மணிக்கு சேசாசலம் வீதி நிரம்பி வழிந்து, ஜோன்ஸ் சாலை வழியாக அணிவகுக்க ஆரம்பித்தது.
குயவர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் முற்றுகைப் போராட்டத் தொடக்க நிகழ்ச்சி துவங்கியது.
கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தோழர் இரா முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் சி எச் வெங்கடாசலம், மாநிலத் துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர் கே. சுப்பராயன் எம் பி (திருப்பூர்) எம். செல்வராஜ் எம்பி, (நாகபட்டினம்) சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ராமச்சந்திரன் எம் எல் ஏ (தளி)’க. மாரிமுத்து எம்எல் ஏ (திருத்துறைப்பூண்டி). ஆகியோர் கோரிக்கைகள விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியினை மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா பெரியசாமி தொகுத்து வழங்கினார்.
நிறைவாக கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் விருதாளர் தோழர் இரா நல்லகண்ணு, ஜனநாயகத்தை பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்துகிறோம். இப்போரட்டத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்- என்று கூறி கட்சிக் கொடியை பொதுச் செயலாளர் தோழர் டி. ராஜா கையில் கொடுத்து முற்றுகைப் போராட்ட பேரணியைத் தொடக்கி வைத்தார்.
சேசாசலம் வீதியில் புறப்பட்ட பேரணி, ஜோன்ஸ் சாலை வழியாக பனகல் மாளிகையை நெருங்கிய போது, காவல்துறை பேரணியை வழி மறித்து, அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தனர்.
ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோழர்களை கைது செய்த காவல்துறை, அருகில் இருந்த ஒய்எம்சிஏ உடற்பயிற்சி அரங்கில் கொண்டுபோய் காவல் வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கைது செய்யப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்திருப்பதாக அறிவித்தனர்.
போராட்டதில் கலந்து கொண்டோர் அனைவரும் வெளியேற்று, வெளியேற்று, ஆளுநர் ஆர் என் ரவியை வெளியேற்று! என்று முழங்கியபடி கலைந்து சென்றனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகை போராடத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள், கிளைகளின் நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், வர்க்க – வெகுமக்கள் அரங்கில் பணிபுரியும் தோழர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
இரா. முத்தரசன்
மாநிலச் செயலாளர்
29.12.2022