பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு – தேங்காய் சேர்த்து வழங்குக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை வருமாறு:
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், ரூ.1000/-ம் ரொக்கப் பணமும் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
அதே சமயம் கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உட்பட 21 பொருட்கள் பரிசுத் தொகுப்பில் இருந்தன. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும் அச்சு வெல்லம் எதிர்பார்க்கும் நிலையில் “சர்க்கரை” என்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
பொங்கல் விழாவை எதிர்நோக்கி செங்கரும்பு விளைவித்த விவசாயிகளும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் “தேங்காயும்“ இடம் பெற வேண்டும் என தென்னை விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். இவர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து வழங்குவார் என்ற பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பதைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தெரிவித்து, ஜனவரி 2-ல் வழங்கத் தொடங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் ரூ.1000/-த்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.