சிபிஐ எம் எல் (எல்) மாநிலச் செயலாளர் தோழர் என். கே. நடராசன் மறைவுக்கு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – விடுதலை) மாநிலச் செயலாளர் தோழர் என். கே. நடராசன் (67) இன்று (10.12.2022) மாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
தோழர் என். கே. நடராசன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அரசப்பிள்ளைபட்டி என்ற கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இளம் வயதில் மார்க்சிச – லெனினிச தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். கடந்த 40 ஆண்டுகளாக பொதுவாழ்வில் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.
ஆர் எஸ் எஸ் வழிநடத்தும் பாஜக ஒன்றிய அரசின் பாசிசக் கொள்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வந்தவர்.
இன்று (10.12.2022) திண்டுக்கல் நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட கே. என் நடராசன் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த தோழர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, காப்பாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளனர். முயற்சிகள் பயனின்றி அவர் காலமாகிவிட்டார்.
தோழர் என்.கே. நடராசனின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு எளிதில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். நல்ல தேர்ச்சி பெற்ற ஊழியரை இழந்து விட்டது.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் நாளை (11.12.2022) மாலை 4 மணிக்கு அரசப்பிள்ளைபட்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோழர் என் கே. நடராசன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.