வேளாண் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடுகள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு பினாய் விஸ்வம் M.P கடிதம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான பினாய் விஸ்வம், பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா (PMFBY) திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:
இயற்கை பேரிடர்களின் விளைவாக ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட, 2016 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா (PMFBY) எனும் வேளாண் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளில், விவசாயிகளுக்கான காப்பீட்டு இழப்பு தொகையை வழங்குவதில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மோசமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு பெரும் இலாபத்தை அள்ளித் தரும் திட்டமாக இந்தத் திட்டம் மாறியுள்ளது. இதன் மூலம், இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில், விவசாயிகள் நலன் காக்க, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், இந்தத் திட்டத்திற்கு ஏறத்தாழ 1.265 இலட்சம் கோடி ரூபாயைப் பங்களிப்பு செய்துள்ளன. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 87,320 கோடி ருபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் 90 சதவிகித இழப்பீட்டு கோரிக்கைகளைப் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் நியாயமாகப் பரிசீலித்து இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பெரும் இலாப நோக்குடன் செயல்பட்டு வருவதால் வெறும் 39,201 கோடி ரூபாய் அளவிற்கு தான் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளன. இது கார்ப்பரேட்டுகளின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு மாபெரும் ஊழல் ஆகும்.
இந்தச் சூழலில், மோசமான இந்த விஷயம் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவதுடன், விவசாயிகளின் உரிமைகள் எவ்வாறு கார்ப்பரேட்டுகளால் மறுக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய கணக்கு தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்திட உத்தரவிட வேண்டும்.
விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் ஏமாற்றி வரும் தனியார் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். மேலும், பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா (PMFBY) திட்டத்தைப் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.