ஒன்றிய அரசின் விவசாயிகள் நல நிதியைப் பாகுபாடு காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடுக! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
ஒன்றிய அரசின் விவசாயிகள் நல நிதியைப் பாகுபாடு காட்டாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடுக! – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:
பிரதான் மந்திரி கிஸான் சம்மான் யோஜனா என்ற புதிய நிதி திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு 2019-ல் அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி, சொந்த நிலம் உள்ளவர்களுக்கு, அதுவும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாயை மூன்று தவணைகளில் வழங்கி வருகிறது. இந்தத் தொகையைப் பெறுவதற்கு பல நிபந்தனைகளை ஒன்றிய அரசு விதித்துள்ளது. அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பிற நிலையில் உயர் வருமானம் பெறுபவர்கள் தகுதியற்றவர் ஆவர். ஒரே குடும்பத்தில் பல பேர்கள் நிலம் வைத்திருந்தால் அதில் ஒருவருக்கு மட்டுமே இந்த நிதி கிடைக்கும். இப்படி பல நிபந்தனைகளை விதித்து விவசாயிகளிடையே பிரிவினை ஏற்படுத்துவதை தமிழ்நாடு விவசாய சங்கம் அப்பொழுதே எதிர்த்தது.
விவசாயிகளுக்கான நல நிதி என்று அறிவித்த அரசு, விவசாயிகளிடையே பாகுபாடு காட்டி மறுக்கக் கூடாது. தெலங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்கள் போல் ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் விவசாய உற்பத்தி ஊக்க நிதி என்பதன் பெயரால் ஏக்கருக்கு ரூபாய் 10,000 வழங்கிட வேண்டும் என அப்போதே வலியுறுத்தினோம். இதனால் வேளாண்மை உற்பத்தி உயரும். விவசாயிகள் அனைவருக்கும் பயன்படும் என நாம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒன்றிய அரசோ, விவசாயிகளைப் பற்றி கவலைப்படாது சாதனைப் பட்டியலுக்கும் பெயருக்குமான திட்டமாக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் தொடங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் 48 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். தற்போது 37 லட்சம் விவசாயிகளே பயனாளிகளாக உள்ளனர். 6 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நில உரிமைப் பிரச்சனையால் 5 லட்சம் பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 37 லட்சம் விவசாயிகளில் 9 லட்சம் பேர் ஆதார் கார்டைப் பதிவு செய்யாததால் இவர்களுக்கும் தொகை தற்போது கிடைக்கவில்லை. தெளிவான, சரியான மற்றும் உறுதியான வழிகாட்டல் இல்லாமல் அவசர கோலத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து ஆறு தவணைகள் முடிந்து ஒன்றிய அரசு மோசடி என சொல்லி நிறுத்தி இருக்கிறது.
இப்படியான மோசடி இந்தியாவிலேயே பாஜக ஆளும் உ.பி.யில் தான் அதிகம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் கூட ஆண்ட கட்சியினர், அதிகாரிகள் சிலர், இணைய வழி சேவை தொழில் செய்வோர் மோசடி செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுகள் நடக்காமல் இருக்கவும் குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட சாகுபடி விவசாயிகள் அனைவருக்கும் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் முறையில் வருமான அளவு பார்க்காமல் ஏக்கருக்கு ரூபாய் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்கத்தொகையாக ரொக்கமாக வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.