ஆரூர் தாஸ் மறைவுக்கு இரங்கல்
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி, சாதனை படைத்த ஆரூர் தாஸ் (91) காலமானர் என்ற செய்தி, ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில், நாகபட்டினம் பகுதியில் சந்தியாகு – ஆரோக்கிய மேரி தம்பதிகளுக்கு 1931 ஆண்டு பிறந்த ஆரூர் தாஸ் 1955 ஆம் ஆண்டு பிரபல வசன எழுத்தாளர் தஞ்சை என் ராமையா மூலம் திரைக்கதை எழுதும் பணியில் நுழைந்தார்.
வாழவைத்த தெய்வம் திரைப்படத்துக்கு வசனம் எழுதத் தொடங்கிய ஆரூர் தாஸ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது வசனங்கள் தமிழ் மக்களின் பேசும் மொழியில் ஒரு சீர்மை உருவாக பங்களிப்பு செய்துள்ளது.
பல்துறை ஞானம் பெற்ற ஆரூர் தாஸின் வசன நடை எளிய முறையில் மக்களை சென்றடைந்து, அவர்களது உணர்வுகளில் கலந்து வாழ்ந்து வருகிறது.
ஆரூர் தாஸ் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் படைத்த வசனங்களில் மரணத்தை வென்று என்றென்றும் வாழ்ந்திருப்பார்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.