ஐ.நா அமைப்பின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு – COP27
COP27 எனும் ஐ.நா அமைப்பின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு எகிப்து நாட்டு ஷ்ர்ம்-எல்-ஷேக் நகரில் இந்த ஆண்டு நவம்பர் 6 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 190 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உரிய இழப்பீடு வழங்குவது குறித்த சர்ச்சைக்குரிய விஷயத்தை முதல் முறையாக, அதிகாரப்பூர்வமாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மாநாட்டு பிரதிநிதிகள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளை ஏழை நாடுகள் எதிர்கொள்ள உதவிகள் (நிதி) வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வ விவாதங்கள் நடத்துவதை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த நாடுகள் நிராகரித்து வந்தன. 2021 ஆம் ஆண்டு கிளாஸ்கவ் நகரில் நடைபெற்ற COP – 26 மாநாட்டில், இழப்பு மற்றும் சேதங்களுக்கு நிதியளிப்பதற்கான ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை வளர்ந்த நாடுகள் தடுத்து நிறுத்தின. அதற்குப் பதிலாக, நிதி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைக்கு மூன்றாண்டு கால அவகாசம் கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு அந்த நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
COP – 27 மாநாட்டின் செயல்திட்டத்தில் உள்ள இழப்பீடு குறித்த விவாதங்கள் இழப்பீட்டுக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆனால், 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு தீர்மானகரமான முடிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று மாநாட்டின் தலைவரான ஷம்மே ஷாக்ராய் கூறியுள்ளார்.
உக்ரைன் போர் காரணமாக, எரிபொருட்களின் விலையேற்றம், பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சூழல் ஆகியவற்றை முன்னிறுத்தி ஏழை நாடுகளுக்கு நிதி வழங்கிட வளர்ந்த நாடுகள் தயங்கக் கூடும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. எவ்வாறாயினும், இதற்கு முன்பு நடைபெற்ற மாநாடுகளைக் காட்டிலும் இந்த மாநாட்டில் பதற்றமான சூழல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.