கியூபா மீதான அமெரிக்காவின் தடைகள்: ஐ.நா பொதுச் சபை கண்டனம்
கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஐ.நா பொதுச் சபையில் இது போன்ற தீர்மானம் தொடர்ச்சியாக 30வது ஆண்டும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டுமே இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. உக்ரைன் மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானத்திற்கு ஆதரவாக 185 வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஐ.நா பொதுச் சபையில் பெருவாரியான ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியிருப்பது அமெரிக்க தடைகளுக்கு எதிரான கியூபாவின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள புதிய வெற்றி ஆகும்.
2019 ஆம் ஆண்டிலிருந்து, எமது நாட்டின் மீதான முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது; கியூபா மக்களுக்கு மாபெரும் இழப்பு மற்றும் சேதங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மனிதத்தன்மையற்ற, கொடூரமான பரிமாணங்களில் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கியூபாவின் அயலுறவுத்துறை அமைச்சர் புரூனோ ரோட்ரிகுஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் போக்கை மீண்டும் முன்னெடுப்பதற்குப் பதிலாக, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மோசமான கொள்கைகளையே தற்போதைய அதிபர் ஜோ பிடன் தொடர்வதாக அவர் கடுமையாகச் சாடினார்.
கியூபாவுடனான விமானப் போக்குவரத்து, பணப் பரிவர்த்தனை, தூதரக சேவைகள் போன்றவற்றில் ஜோ பிடன் நிர்வாகம் ஓரளவிற்கு மேம்பட்ட அணுகுமுறையை மேற்கொண்ட போதும், பொருளாதார தடைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தீவிரமடைந்து வரும் பொருளாதார தடைகள் தான் அமெரிக்கா – கியூபா நட்புறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.
ஜோ பிடன் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பொருளாதார தடைகள் காரணமாக, 6.35 பில்லியன் டாலர் [ 1 பில்லியன் – 100 கோடி ] மதிப்பிலான மாபெரும் இழப்பை கியூபா எதிர்கொண்டது என்று புரூனோ கூறியுள்ளார். மேலும், கியூபாவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ள பெரும் தொழில்நுட்ப மற்றும் ஊடக நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கியூபாவுடனான ராஜ்ஜிய உறவை அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமா மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பிறகு, அந்நாடு விதித்திருந்த பொருளாதார தடைகளைக் கண்டித்து 2016 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்காமல் இருந்தது. ஆனால் டொனால்டு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், முந்தைய அமெரிக்க அதிபர்களைப் போலவே, சோஷலிச நாடான கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
கியூபாவில் புரட்சியின் மூலமாக, அமெரிக்க ஆதரவு பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, அங்கிருந்த அமெரிக்கர்களின் சொத்துக்களைத் தேசியமயமாக்கிய பிறகு 1960 ஆம் ஆண்டில் கியூபா மீது அமெரிக்கா தடைகளை விதித்தது.
பல தசாப்தங்களாகத் தொடரும் பொருளாதார தடைகளை நியாயப்படுத்த மனித உரிமைகள் எனும் ஆயுதத்தை டிரம்ப் மற்றும் பிடன் நிர்வாகமும் முன்னிறுத்துவது அடிப்படையற்றது என்று ஐ.நா. சபைக்கான கியூபாவின் துணை தூதர் யூரி கலா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கியூப மக்களின் நல்வாழ்வு, மனித உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்து அமெரிக்க அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பது உண்மையானால், கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் கியூபாவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் மதிப்பு 3,806.5 மில்லியன் டாலர் [ 1 மில்லியன் – 10 இலட்சம் ] ஆகும். இந்த இழப்பின் மதிப்பு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் 49% அதிகம் ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, கடந்த அறுபது ஆண்டுகளாக, பொருளாதார தடைகள் மூலமாக ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த இழப்பின் மதிப்பு சுமார் 1,50,410.8 மில்லியன் டாலர் ஆகும்.
ஜோ பிடன் நிர்வாகப் பொறுப்பேற்றதில் இருந்து முதல் 14 மாதங்களில் மட்டும், தடைகளால் கியூபாவிற்கு ஏற்பட்ட இழப்புகள் மதிப்பு 6,364 மில்லியன் டாலர் ஆகும்.
இந்தப் பின்னணியில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் தொடர்ந்து போராடி வரும் சோஷலிச நாடான கியூபாவிற்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு முக்கியமான வெற்றியாகவே கருதப்படுகிறது.