ஆனி ராஜா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான தோழர் ஆனி ராஜா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
சம குடியுரிமையை வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போராட்டத்தைக் குறிக்கும் வகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 2021 டிசம்பர் 21 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக ஆனி ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 144 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகளை மீறியுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முற்றிலும் ஆதாரமற்றது என்றும், பா.ஜ.க அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக இது போன்ற வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்றும் கட்சி கருதுகிறது.
அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, குடிமக்களின் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்பதற்கு ஆதரவாக, அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் குரலெழுப்ப வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
நேற்று (02.11.2022) நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தோழர் ஆனி ராஜா ஆஜராகி இருந்தார். இந்த வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை 2023 ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.