பிரேசில் அதிபர் தேர்தல்: இடதுசாரி தலைவர் லூலா ட சில்வா வெற்றி!
பிரேசில் நாட்டு அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று (31.10.2022) அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி தலைவரும் முன்னாள் அதிபருமான லூலா ட சில்வா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
2002 முதல் 2010 வரை அதிபராகப் பொறுப்பு வகித்த லூலா ட சில்வாவுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் 50.9 ஆகும். 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லூலா ட சில்வா பெற்ற வாக்குகளைக் காட்டிலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவருக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம் ஆகும். பிரேசில் நாட்டின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இவ்வளவு அதிகமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெற்றதில்லை என்று தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் கருதப்படுகிறது.
இவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான போல்சோனரோ 49.1 % வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் தருணத்திற்கு முன்பாகவே, லூலா ட சில்வாவின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையோடு வீதிகளில் திரண்டனர். அதிகரித்து வரும் ஏழ்மை, பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் வளர்ச்சி என்று சிக்கித் தவிக்கும் பிரேசில் நாட்டிற்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு மகத்தான நம்பிக்கை ஒளிக்கீற்றாக அமைந்திருப்பதாகக் கண்ணீர் ததும்ப கொண்டாடும் பிரேசில் மக்களையும் காண முடிகிறது.
நேற்று (30.10.2022) மாலை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய லூலா ட சில்வா, பிரேசில் குடிமக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:
எனக்கு வாக்களித்த, எனக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கும் வாக்களித்த, தங்களின் கடமையை நிறைவேற்றிய உறுதிப்பாடுமிக்க குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கிடையே, தோல்வியுற்ற வலதுசாரி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான போல்சோனரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாட்டின் சில பகுதிகளில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இரு மாநிலங்களில் நெடுஞ்சாலைகளை மறித்துள்ளது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆதாரம்: சிஎன்என் வலைதளம்