தமிழக அரசே! தடம் மாறலாமா?!
ம. இராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறையின் அரசாணை (நிலை) எண்.152, நாள்: 20.10.2022 வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிரிவு 5 உட்பிரிவு (v) “தற்போது அனுமதிக்கப்படும் பணியிடங்களைத் தவிர ஏற்கனவே நிரந்தர பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள், செயல் திறனற்ற மற்றும் செயல் திறன் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள், தரவு உள்ளீட்டாளர், தட்டச்சர், வரி வசூலர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகியோருக்கு அவர்கள் ஓய்வு பெறும் காலம் வரை மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கவும், அப்பணியாளர்கள் ஓய்வுக்குப் பிறகு அப்பணியிடங்களை நிரப்பாமல் எதிர்வரும் காலங்களில் இப்பணிகளை (services) வெளி முகமை மூலம் (Out Sourcing as Services) மேற்கொள்ளலாம்” என்று தெரிவிக்கிறது.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் எனும் தாரக மந்திரங்களை அரசு ஏற்றுக்கொண்ட 1990 காலகட்டத்தில் இருந்து நிரந்தரத் தொழிலாளர் எனும் முறைமைக்கு எதிராக ஆளும் அரசுகள் தங்கள் யுத்தத்தைத் தொடங்கித் தொடர்ந்து வருகின்றன. அதற்காக, அரசியல் அமைப்பு சட்டம், அதன் அடிப்படையில் உருவான தொழிலாளர் நலச் சட்டங்கள் எதனையும் மீறும் மனிதத்தன்மையற்ற, தங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் நியாப்படுத்தி வருகின்றன. அதன்படி தொழிலாளர்கள் மீதான உச்ச உயர் தாக்குதலாகவே இந்த அரசாணை அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளன்று நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அனுப்பிய ந.க.எண் 21787/ 2021/ EA2- நாள்:02.10.2021 சுற்றறிக்கையில் “வெளிச்சந்தை தொழிலாளிகளை தங்கள் விருப்பம் போல் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அது நடைமுறை சாத்தியமே இல்லாத அளவிற்கு வேலைப்பளுவை அதிகரித்து, தற்போது பெற்றுவரும் ஊதியத்தை பாதியாகக் குறைக்க வழிகாட்டுகிறது. இது குறித்து தமிழ்நாடு ஏஐடியுசி உடனடியாக தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்குக் கொண்டு சென்றும் பலனேதும் இல்லை.
வெளி முகமை மூலம் (OutSourcing as Services) எனும் இதே வார்த்தையைத் தான் ஒன்றிய அரசின் திடக்கழிவு, திரவக்கழிவு, அபாயகரமான கழிவு மேலாண்மை திட்டங்களும், ஜல் சக்தி, தூய்மை பாரதம் எல்லாம் ஊக்குவிக்கிறது. ஆனால், இந்த வெளி முகமை என்னும் முறையைக் கடைபிடிப்பதற்கு என்று இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை. உச்ச, உயர் நீதிமன்றங்கள் ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம், 1970 ஐ அடிப்படையாகக் கொண்டுதான் வெளி முகமை தொழிலாளர்கள் வழக்குகளை விவாதித்து வருகின்றன. அதே நேரத்தில், தொழிலாளிகளுக்கு எந்த விதமான சட்டப்பூர்வ உரிமையும் வழங்காமல் ஏமாற்றுவதற்காகவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது திட்டமிட்ட மோசடி அல்லவா?!
ஒப்பந்த தொழிலாளர் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் ஒழுங்குபடுத்துதல். அதில் முதன்மையானது பதிவு செய்வது. இதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2000 ஆண்டு முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் வழங்கியுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை. தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக இயங்கினால் அதை தடுக்க வேண்டிய அரசே திட்டமிட்டு சட்டவிரோதமான ஒப்பந்த முறை மூலம் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட வழி ஏற்படுத்தித் தருகிறது.
ஒப்பந்ததாரர்களிடம் தரப்படும் தொழிலாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களில் கணிசமான தொகையை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.1,000/ கோடியையும் தாண்டிய தொகையாக இது இருக்கிறது. இந்த குற்றச் செயலை தடுக்க வேண்டிய அதிகாரமும், பொறுப்பும் உள்ள அதிகாரிகள் கீழ் இருந்து ஆக உயர்மட்டம் வரை எனக்கு தெரியாது. ஒப்பந்ததாரரிடம் கேளுங்கள் என்ற பொறுப்பற்ற பதிலை குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லமல் சொல்வதைப் பரவலாகக் காண முடிகிறது. இவை எல்லாம் ஏற்கனவே உள்ள அனுபவங்கள்.
இன்றைய உலகமய சூழலில் குப்பைகளும், கழிவுகளும் அகற்றுவது மிகவும் சவாலான, சூழலியல் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையாகும். கழிவு நீர்த்தொட்டி மரணங்களும், விபத்துகளும் பொறுப்பின்மைக்கு இன்றைய நேரடி சாட்சி! குடிநீர் உயிர் வாழ இன்றியமையாதது. சமூக நலன், மக்கள் நலன், பூமியின் பாதுகாப்பு போன்றவற்றில் அக்கறை கொண்டு அரசு செய்ய வேண்டிய சேவையை வணிகமயமாக்குவது மக்களை மேலும் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தும்.
தமிழக அரசு வெளி முகமை மூலம் மாநகராட்சிகளின் சேவையை ஒப்படைக்க அரசாணை வெளியிட்ட நான்கு நாட்களுக்கு முன்னர் ஒடிசா மாநில அரசு ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட்டு அத்தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில அரசு ஏற்கனவே இதற்கெனவே ஒரு சட்டம் இயற்றும் தயாரிப்பில் உள்ளது. ஆந்திர, தெலிங்கானா அரசுகள் ரூ.21,000/- க்கு குறையாத தொகையை ஊதியமாகத் தந்து வருகின்றன.
2022, ஜனவரி 7 ஆம் தேதியன்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சட்டமன்றத்தில் “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேவாணைய (கூடுதல் செயற்பணிகள்) சட்டம், 2022” எனும் மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் “அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனம், அரசுக் கழகங்கள் அல்லது சட்டபூர்வ வாரியம் அல்லது அதிகார அமைப்புகளின் பணி இடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க அரசானது முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதிகார அமைப்புகள் என்பதில் உள்ளாட்சி அமைப்புகளும் அடக்கம்.
மேலும் 2022 செப்டம்பர் 2, 3 தேதிகளில் நெல்லை,மதுரை ஆய்வு கூட்டங்களில் பங்கேற்ற பின்னர் இதனை உறுதி செய்து நகராட்சிகள் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஊடகங்களிடம் பேசும் போது “மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாநகராட்சி ஊழியர் பணி நியமனங்களில் ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார். இந்தச் செய்தியைப் பார்த்த தொழிலாளர்கள் மிகவும் அக மகிழ்ந்திருந்தனர்.
அதே நேரத்தில் “சாதாரணப் பணியிடங்களைப் புற ஆதார அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இதனைச் சொல்லாமல் கவனமாகப் பல ஊடகங்கள் தவிர்த்துள்ளன. தூய்மைப் பணி, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சாலை வசதிகள் எல்லாம் தான் சாதாரண பணியிடங்கள் என்று அரசாணை தெரிவிக்கிறது. அந்தப் பணிகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தம், தினக்கூலி, வெளிமுகமை, போன்ற பெயர்களில் அற்ப கூலிக்கு நவீன கொத்தடிமைகளாகப் பணிபுரியும் பல்லாயிரம் தொழிலாளர்களை ஒரே உத்தரவில் நடுத்தெருவிற்கு அனுப்புகிறது அரசாணை.
மக்களுக்குச் சேவை செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. அந்த சேவை மக்களுக்கு இன்றியமையாதது. அந்த அடிப்படையான சேவையைச் சாதாரணம் என்கிறதா?! தமிழக அரசு. அப்படியானால், ஒப்பந்தகாரகள் கொள்ளையடிக்க வழி வகுப்பதும், வரிவசூல் செய்வது மட்டுமே இந்த அரசுக்கு முக்கியமானது என்றல்லவா ஆகிறது. என்னே, தமிழ்நாடு அரசின் விந்தையான சிந்தனை!
தேர்தல் பரப்புரையின் போது முதல்வர் அவர்கள் தூய்மைப் பணியாளர் ஒருவர் கேள்விக்கு பதில் அளிக்கும் போது “ஒப்பந்த தொழிலாளர் முறை குறித்து நான் நன்கு அறிவேன், 60 நாள் பொறுங்கள் நல்ல காலம் பிறக்கும்” என்று குறிப்பிட்டார். பல 60 நாட்கள் கடந்து விட்டது. எனினும் காலம் கடந்தாவது நல்ல காலம் பிறக்கும் என்று காத்திருந்த தொழிலாளர்களின் நம்பிகையை அரசாணை 152 பொய்த்துப் போகச் செய்துள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் “தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளிட்ட அரசுத்துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். ஊராட்சிகள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும்” என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கானல் நீராக இருந்த பணி நிரந்தரம் காணாமல் போய், பல்லாயிரம் தொழிலாளர்கள் வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது வாக்களித்த மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் செய்யும் நம்பிக்கை துரோகம் அல்லவா!
அதே சமயத்தில், 20 மாநகராட்சிகளிலும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் அலுவலர்களும் நிரந்தர அரசுப் பணியாளர்களாக நியமிக்க மேற்படி அரசாணை வழி வகுக்கிறது. அதன்படி 4145 பணியிடங்களுக்கு அனுமதி கோரப்படுகிறது. இப்பணியிடங்களுக்கான ஊதிய விகிதமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.1000/- கோடி அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டி உள்ளது. இத்தொகை சுமார் 30,000 நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியத்திற்கு நிகரானதாகும். ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே நிர்வாகத்திடம் பெற்று தொழிலாளர்களுக்கு தராமல் ஏமாற்றும் தொகையைக் கொண்டு 20,000 முதல் 30,000 நிரந்தரத் தொழிலாளர்கள் நியமிக்க இயலும். ஒரு லட்சம் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதியம் வழங்க சுமார் ரூ. 4,000/- முதல் ரூ.5,000/- கோடி அளவே தேவைப்படும்.
வெளி முகமைதான் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்தும், கல்விக்கடன் பெற்றவர்களிடமிருந்தும் வங்கிகளுக்கு வசூலித்துத் தருவதில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் தானே. அதனிடமே வரி வசூலிக்கும் ஒப்பந்தம் தரலாம் அல்லவா! ஐஏஎஸ் அதிகாரிகளை விட திறமையான அதிகாரிகளை வெளிச்சந்தையில் சப்ளை செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரகவே இருக்கின்றன. ஒன்றிய அரசு செயலாளர்கள் பலர் இன்று அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். நமது பிரதமரிடம் கேட்டால் அவரது சிறந்த நண்பர்களைப் பரிந்துரை செய்வாரே!
எந்த ஒரு சேவை குறித்தும் பொது மக்கள் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் முறையிட்டு தீர்வு காண முடியாது. எனக்குத் தெரியாது, ஒப்பந்ததாரரிடம் கேள் என்று பதில் சொல்ல மட்டும் அலுவலர்கள் இருப்பார்கள். ஆளும் கட்சி பிரதிநிதிகளின் சொந்தக்காரர்களாகவோ, உயர்பதவியில் இருப்பவர்களின் பினாமியாகவோ, பன்னாட்டு நிறுவனங்களாகவோ, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களாகவோ ஒப்பந்ததாரர்கள் இருப்பார்கள். எந்த அதிகாரியும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அரசுக்கு, அரசு நிர்வாகத்திற்கு எதிராகப் போராடினால் கூட நமது காவல்துறை அனுமதிக்கும். இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு எதிரான போராட்டம் என்றால் ஒன்று சேரவே விடாமல் தடுக்கும் கலையில் அது நன்கு தேர்ச்சி பெற்றுள்ளது என்பதைச் சமீப கால அனுபவங்கள் காட்டுகின்றன. மக்களும் தொழிலாளர்களும் எக்கேடு கெட்டால் என்ன என்று முடிவுக்கு வந்த பின்பு அலுவலர்களும் அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தரும் சுமார் ரூ.1000/- கோடியும் வீண் செலவு தானே!
உள்ளாட்சி அமைப்புகளின் சேவையைத் தனியார் கொள்ளையடிக்கும் தொழிலாக மாற்றுவது பேராபத்து ஆகும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை 152, மற்றும் சுற்றறிக்கை 21787 ஐ கைவிட வேண்டும். தவறினால் ஏமாற்றப்பட்ட தொழிலாளர்களும் மக்களும் தக்க பதிலடி தந்து முறியடிப்பார்கள்.
தொடர்புக்கு: 8524867888