தமிழகம்

அமைதியைச் சீர்குலைக்கும் பந்த் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சமூக அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க அக்டோபர் 31 பந்த் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:

கடந்த 23 ஆம் தேதி கோவை மாநகர உக்கடம் பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு, சமூக விரோத சதிவேலை திட்டத்தை முறியடித்து, குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்தவுடன் தமிழ்நாடு தலைமை காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். தனி போலீஸ் படைகள் அமைத்து விசாரணையும் தொடர்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் டிஜிபி, உளவுத்துறை தலைவர் ஆகியோருடன் ஆலோசித்து, கோவை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். மூன்று காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றச் செயல்களின் சதி வேலைக்குப் பின்னால் நாடு தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற கருத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மக்களின் நல்வாழ்வோடு இரண்டறக் கலந்து இயங்கி வரும் அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் கூடி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றுபட்டு அமைதி நிலையைப் பராமரித்து வர வேண்டும் என்றும், சமூக விரோத சக்திகளைத் தனிமைப்படுத்த உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கார் வெடிப்பில் மரணமடைந்தவரின் குற்றப் பின்னணியை அறிந்த முஸ்லீம் ஜமாத்தார் அவரது இறுதி சடங்குக்கு ஜமாத்தில் இடமில்லை என்ற அறிவித்துள்ளார். சமூக அமைதியைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசும், அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, சமூக அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க அக்டோபர் 31 பந்த் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக் கண்டிப்பதுடன், பாஜக, சங் பரிவார் கும்பலின் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலைக் கோவை மாவட்ட மக்கள் நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button