லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தை வீழ்த்திய நிதி மூலதனம்
-சார்லி வின்ஸ்டான்லி
கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவு பெற்ற இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் இன்று (20.10.2022) காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆட்சியின் வீழ்ச்சி கொண்டாடத்தக்கதே ஆகும். ஆனால், சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்: முற்போக்கான பொருளாதார செயல்திட்டத்தையும் கூட அச்சுறுத்தக்கூடிய வகையிலான நிதி மூலதனத்தின் கிளர்ச்சியால் அவரது அரசாங்கம் வீழ்த்தப்பட்டுள்ளது.
ட்ரஸ் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியினர், அண்மைக் காலத்தில் தங்கள் நாட்டிற்கு அளித்துள்ள பொருளாதாரத் திட்டங்களுக்கு நேர்ந்துள்ள சோகமான முடிவுகள் குறித்து யாரும் சிரிக்காமல் இருப்பது மிகவும் கடினமான காரியமாகும்.
ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்ற இயலாத, இறுக்கமான, ஆற்றல்மிகு தனிப்பண்பற்ற, பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீது ஆளுமையற்ற லிஸ் ட்ரஸ் – இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார். தனது நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக இன்று தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் நகைப்பிற்குரியவராக வீழ்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், ட்ரஸ் மற்றும் அப்போதைய Chancellor of the Exchequer (நிதித்துறைக்குப் பொறுப்பு வகிப்பவர்) குவாசி குவார்டெங் உடன் இணைந்து, பகுத்தாய்ந்து கணித்திடாது, பொருளாதார திட்டம் ஒன்றை அறிவித்தார். சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, மின்சக்தி உள்ளிட்ட அந்நாட்டின் தனியார்மயமாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளைத் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள வசதிபடைத்த வணிக குழுக்களுக்கு, பிரிட்டிஷ் அரசை ஒரு சேமிப்பு வங்கி போல் பயன்படுத்தி, பொதுமக்களின் பணத்தைக் கோடி கோடியாக, கடன் உதவியாக வழங்குவதுதான் அந்தத் திட்டத்தின் சாராம்சமாகும்.
நவீன தாராளமய பொருளாதாரத்தின் ‘Trickle Down’ (வசதி படைத்தோரின் செல்வ இருப்பை அதிகரிப்பதன் மூலம் ஏழைகள் மெல்லப் பயனுறுவது) கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட, அரசு ஊழலின் நீட்சிதான் லிஸ் ட்ரஸ் அறிவித்த அந்தப் பொருளாதாரத் திட்டம் ஆகும். இத்தகைய பிரிட்டிஷ் பொருளாதார மாடலின் கீழ் சில தசாப்தங்களாகத் தனியார்மயம் மற்றும் அவுட்சோர்சிங் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு, பதுக்கல் என்று அனைத்து குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு, கிடைத்த செல்வ வளங்களை எல்லாம் சுருட்டிக் கொள்ளும் இத்தகைய மோசமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களிடம், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் குவிக்கப்படும் பொதுமக்களின் பணம், ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முதலீடு செய்யப்படும் என்று நம்புவது கண்களை விற்றுச் சித்திரம் வாங்கும் பகுத்தறிவற்ற நிலையைத்தான் நினைவூட்டுகிறது.
இதுபோன்ற பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றுக்கு மேலும் வலு சேர்ப்பது போல், தொழிற்சங்கங்கள் மீது கொடுங்கோன்மை முறைகளைக் கட்டவிழ்த்து விடுவது, ரயில்வே உள்ளிட்ட இதர முக்கியமான பொருளாதார துறைகளில் வேலை நிறுத்த நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக்குவது ஆகிய வாக்குறுதிகளையும் அள்ளி வீசியவர் லிஸ் ட்ரஸ். இவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கையின் விளைவுகள் விரைவாக வெளிப்பட்டன. பணக்காரர்களுக்கு வரி குறைப்பு மற்றும் சலுகைகள் வழங்கியதன் மூலம் 43 பில்லியன் யூரோ ( 1 பில்லியன் – 100 கோடி, 1 யூரோ – 81.37 ரூபாய் 22.10.2022 நிலவரப்படி) அளவிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு அந் நாட்டு நாணயத்தின் மதிப்பை வீழ்த்தியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பேங்க் ஆப் இங்கிலாந்தின் மாபெரும் சந்தை சார் தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் மூலம் வட்டி விகித அதிகரிப்பு எனும் பேரிடி, கடன் சுமையை எதிர்கொண்டு வரும் பெரும்பாலான உழைக்கும் வர்க்க மக்களை மிக மோசமாகப் பாதிக்க உள்ளது.
நிதிச் சந்தைகளின் இது போன்ற எண்ணற்ற நலன்கள், முடிவாக, லிஸ் ட்ரஸையும் பலிகொண்டது. அவரும் தற்போது பதவியை ராஜினாமா செய்து விட்டார். லிஸ் ட்ரஸ்-ன் வீழ்ச்சியுடன், தொழிற்சங்கங்களை நசுக்குவதன் மூலம் ஊதிய உயர்வு கோரிக்கைகளையும் ஒடுக்க முனையும் அவரின் எதேச்சதிகார செயல்திட்டமும் வீழ்ச்சியடையும் என்று ஒருவர் நம்பக்கூடும். ஆனால், அவரது வீழ்ச்சி குறித்து மிகைப்பட்ட மகிழ்ச்சி அடைவது தவறாகும்.
அண்மையில், நிதித்துறைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஜெரெமி ஹண்ட் நிதிச் சந்தைகளின் நம்பிக்கைக்குரிய சேவகர் ஆவார். 2012 – 2018 வரையிலான காலகட்டத்தில் கன்சர்வேடிவ் ஆதரவு பெற்ற சுகாதாரத் துறை செயலராகப் பொறுப்பு வகித்தவர். தேசிய சுகாதார சேவை (NHS) நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான நிர்வாக சீர்கேடுகள் இவரது பதவிக் காலத்தில்தான் நடைபெற்றன; தனியார் சேவைகளுக்கான நிதி செலவினம் 57% அதிகரித்தது. பல்வேறு சேவைகளைத் தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன. பொதுமக்களின் நிதி குறித்தும், அதன் மீது பல கடுமையான முடிவுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 43 பில்லியன் யூரோ மதிப்பிலான பட்ஜெட் பற்றாக்குறை தற்போது 70 பில்லியன் யூரோ என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
‘சந்தை’களைச் சமாதானப்படுத்திட ஒரே வழி என்று கருதப்பட்டு, மக்கள் நலனுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 40 பில்லியன் யூரோ குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்குகளாகப் பள்ளிகள், அவசர சேவைகள், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிகிறது. பழிவாங்கும் மனப்பான்மையுடன் சிக்கன(!) நடவடிக்கைகள் மீண்டும் அரங்கேற உள்ளன. லிஸ் ட்ரஸ் அரசை வெளியேற்றிய அதே எஜமானர்கள், இந்தச் சிக்கன நடவடிக்கைகளை முழுவதுமாக ஆதரிக்க இருக்கிறார்கள்.
இதுபோன்ற நடவடிக்கைகள் ஜனநாயகப்பூர்வமானதன்று; தொடங்கவிருக்கும் மின்னல் வேக சிக்கன நடவடிக்கைகள் ‘பொதுமக்கள் நலன் சார்ந்த சேவைகளற்ற பிரிட்டிஷ் பொருளாதாரம்’ எனும் லிஸ் ட்ரஸ்-ன் இலட்சிய வேட்கையை விஞ்சி நிற்க முடியாவிட்டாலும், ஓரளவு அதற்குச் சமமானதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிஸ் ட்ரஸ் மற்றும் குவார்டெங் மீது நம்பிக்கை இழந்த நிதிச் சந்தைகள், நவீன தாராளமய கொள்கை உடையவர்களைப் போலவே, நாட்டு மக்களின் நல்வாழ்வு குறித்து கிஞ்சிற்றும் அக்கறையற்றவைகளாகவே உள்ளன. நவீன தாராளமயம் என்பதே பிரிட்டனின் சித்தாந்த கட்டமைப்பாக இருந்து வருகிறது.
லிஸ் ட்ரஸ் மற்றும் குவார்டெங்- ஐ வீழ்த்தியதன் மூலம், பிரிட்டன் அரசியல் அமைப்பின் (அரசியல் கட்சிகள், சித்தாந்தங்கள் மற்றும் அறிஞர்களின்) மையப் பகுதியாக இருந்து வரும் நிதி மூலதன நலன்களை மூடி மறைத்து வந்த நவீன தாராளமய பொருளியல் தத்துவத்தின் மெல்லிய திரை இப்போது விலக்கப்பட்டு விட்டது. தெளிவும், உறுதியுமற்ற நிலையில் உள்ள தொழிலாளர் கட்சித் தலைமையின் காரணமாக, சர்வதேச நிதி மூலதனமே தற்போது நாட்டை ஆட்சி செய்து வருகிறது.
கணக்கு வழக்குகளை முறைப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருக்கும் கணக்காளர்களால் தான் இனி பிரிட்டன் நிதி நிர்வாகம் நடத்தப்பட உள்ளது. அரசின் உள்கட்டமைப்புகள், சொத்துக்கள் மற்றும் மற்றும் சேவைகளில் முதலீடு செய்வதற்காகக் கடன் பெறுவது ஒன்று… லிஸ் ட்ரஸ்-ன் திட்டப்படி, தனியார் நலன்களைப் பாதுகாப்பதற்காக, பொதுமக்கள் பணத்தை தனியார்களின் கஜானாவில் தீவிரமாக இட்டு நிரப்புவதற்காகக் கடன் பெறுவது மற்றொன்று… இவை இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் எதனையும் நமது கணக்காளர்கள் காணப் போவதில்லை. லிஸ் ட்ரஸ் மற்றும் குவார்டெங் பதவிக் காலத்தின்போது, நாட்டிற்குத் தேவையான தனித்துவமிக்க மாற்றங்கள் (மாற்றத்திற்கான தொலைநோக்கு பார்வை, சீரிய தலைமை, பெரும் முதலீடு, மக்கள்நலனுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை) எவ்வாறு எதிர்க்கப்பட்டதோ, அது போலவே, சந்தைகளின் புதிய தலைவர்களும் தலைவர்களும் அவற்றை மிகத் தீவிரமாக எதிர்ப்பார்கள்.
லிஸ் ட்ரஸ் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட முடிவு குறித்து வருத்தப்பட வேண்டியது இல்லை. ஆனால், அந்த வீழ்ச்சியில் நமக்கான படிப்பினைகள் உள்ளன. அவற்றைப் புறந்தள்ளுவது நமது குற்றமே ஆகும்.
ஆதாரம்: ஜெகோபின் ஆன்லைன் இதழ். தமிழில்: அருண் அசோகன்